Sunday, December 29, 2013

தங்கச்சி சாமியார் 'எஸ்விஆர் பாமினி'





என் அன்புத்தங்கையும் ஈழத்தமிழச்சியுமான கவிக்குயில் எஸ்விஆர் பாமினி சமீபத்தில் ஒரு பாடல் எழுதிய திரைப்படம் 'சித்திரைவீதி'.




வித்யாசாகர் அண்ணாவின் மகள் வித்யா பொற்குழலிக்காக அவளின் youtube பக்கத்தில் இருந்த காணொளி http://www.youtube.com/watch?v=HR9M5oYFF-U

௨௦௧௨ ஆம் ஆண்டு தங்கை எழுதிய ஒரு பாடலொன்று முகநூலில் காணொளியாக பகிர்ந்துகொள்ளப்பட்டது. நான் கேட்க, பார்க்க கிடைத்தது.

அந்த பாடல் இதுதான்.

சூழுகின்ற பகையை வென்றே 
ஈழம் எங்கள் கையில் வந்தது தெரிகின்றதே...




இந்த ஒரு பாடல் அவளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது. முகநூலில் நண்பர்களானோம்.

எமது தாய்நிலமான தமிழீழத்தின் மீதும் என் தாய்த்தமிழின்மீதும் கொண்ட தாளாத காதலால் தான் இந்த இளம்வயதிலேயே அவள் ஈழக்குயில், கவிக்குயில், கவிதாயினி போன்ற பட்டங்களை பெறமுடிந்திருக்கிறது. நம் தாய்த்தமிழை எவ்வளவுதூரம் ஆழமாய் நேசித்து உயர்த்துகிறோமோ அதே அளவுக்கு தமிழ்த்தாயும் அவர்களை மிக உயர்ந்த இடத்தில் வைப்பாள் என்பதற்கு தங்கை பாமினியே சாட்சி என்பதை இன்று நான் முன்பைவிட ஆழமாக தெள்ளத்தெளிவாக உணர்கிறேன்.

௨௦௧௨ நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் இருக்கலாம். ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு ௧௧ மணி இருக்கும். சுவிட்செர்லாந்திலிருந்து தங்கை பேசினாள்.

'நான் பாமினி கதைக்கிறன் அண்ணா. நலமா?' என்றாள்.

'நான் நல்லா இருக்கேன். நீங்க எப்டி இருக்கீங்க?' என்றேன்.

'நலம் அண்ணா. இந்த நேரத்தில் அங்கு என்ன நேரம் என்பதை நான் யோசிக்கவில்லை. இப்போது பேசலாமா என்று நான் யோசிக்கவில்லை. (அவள் அப்போது பண்பலை வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்ததால்) என் குரல் எப்படி அண்ணா இருக்கிறது?' என்றாள்.

'நல்லா இருக்கு. சின்னபிள்ளை குரல் மாதிரி இருக்கிறது.' என்றேன்.

'அப்படியா? மகிழ்ச்சி அண்ணா' என்றாள்.

அப்போதைய என்னுடைய ஒருசில பதிவுகளை குறித்து பாராட்டி பேசினாள். 

'இந்த இளம்வயதிலேயே பாடல்கள் எழுதுகிறீர்கள்.' என்றேன்.

'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா. எனக்குத்தெரிந்த தமிழில் எழுதுகிறேன்.' என்றாள். 

சிலநாட்கள் கழித்தபிறகு வித்யாசாகர் அண்ணா என்னிடம் பேசும்போது தங்கை பாமினி என்னிடம் அலைபேசி ஊடாக பேசியதை தெரிவித்தேன்.

'அவள் நல்ல தங்கையாயிற்றே. சிலமுறை அவள் என்னுடைய அலைபேசிக்கு அழைத்துவிட்டு யார் கதைக்கிறீங்கள் யார் கதைக்கிறீங்கள் என்று கேட்டு விளையாடுவாள்.' என்றார்.

சிலநாட்கள் கழித்தபிறகு அண்ணா சொன்னதுபோலவே என்னுடைய அலைபேசிக்கு அழைத்துவிட்டு 'யார் கதைக்கிறீங்கள் யார் கதைக்கிறீங்கள்' என்று கேட்டு விளையாடினாள். என்னவென்று கேட்பதற்குள் இரண்டுமுறையும் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

இதன்பிறகு மூன்று மாதங்களாக அலைபேசி ஊடாக அவளின் பணிநிமித்தம் காரணமாக அவள் என்னிடம் பேசமுடியாத சூழல்.

முகநூலில் அவளிடம் 'நீ பேசாததால் எனக்கு மனவருத்தம்.' என்பது போன்ற கருத்தொத்த ஒரு தகவலை அனுப்பியிருந்தேன்.

மொட்டைமாடியில் தூக்கம் வராமல் உலாவிக் கொண்டிருந்தேன். தங்கையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. 

குரல் தழுதழுக்க 'நான் ஜெர்மனியில நிக்கறன் அண்ணா. இப்போது தான் உங்கள் தகவலை அலைபேசி ஊடாக முகநூலில் பார்த்தேன். உங்கள் தங்கைதானே அண்ணா, மன்னித்துவிடுங்கள் அண்ணா. இனிமேல் நான் உங்களிடம் அடிக்கடி பேசுகிறேன். வருத்தப்படாதீர்கள் அண்ணா.' என்றாள்.

'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லப்பா. நீ வருத்தப்படாதே.' என்றேன்.

அவள் பேசி முடித்ததும் மனம் அதிகமாய் வலித்தது. அவள் பேசும்போது அவள் குரலில் ஒருவித பதற்றம், தழுதழுப்பு இவற்றை என்னால் உணர முடிந்தது. அவள் அழுதிருக்கிறாள் என்பதை என்னால் உணர்ந்தபோது என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

ஒருபுறம் அவளை நான் காயப்படுத்தி விட்டேனே என்று அன்றைய பொழுது நான் அழுதேன். மற்றொருபுறம் எனக்காக இன்னுமொரு அன்பான சொந்தம் கிடைத்திருக்கிறது. இதற்காக நான் பெரிதும் நேசிக்கும் என் தாய்மொழி தமிழுக்கு மறுபுறம் மகிழ்ச்சியோடு நன்றி சொன்னேன்.

கண்களை மூடி உறங்கிப் பார்த்தேன். உறக்கம் வரவில்லை. அப்படியே விடிந்துவிட்டது.

இவள் என் தாய்த்தமிழின் மீதும் எமது தாய்நிலமான தமிழீழத்தின்மீதும் கொண்ட காதலை இந்த ஒரு பாடலே சொல்லிவிடும். இந்த அன்பான என் செல்லக்குழந்தையின் மனதில் உள்ள தேடலை, வலியை இந்த ஒரு பாடலே உணர்த்திவிடும். 

என்காதல் நீ 
என் வாழ்வும் தாழ்வும் நீ.
என் தேடல் நீ 
என் உடலும் உயிரும் நீ.


அதன்பிறகு ௨௦௧௩ ஜூன் மாதம் நான் பெங்களூருவில் வேலைக்கு சேர்ந்த பதினைந்து அல்லது இருபது நாட்களில் நான் அலுவலகத்திலிருந்தபோது சுவிட்செர்லாந்திலிருந்து அழைத்து ஏறத்தாழ அரைமணி நேரம் பேசினாள்.

பிள்ளைக்கு அப்போதுதான் நேரம் கிடைத்திருக்கும்போல.

'என் வயதை கேட்டாள்.'

'௨௯ (29). ஏன் கேட்கிறாய்?' என்றேன்.

'இல்லை. உங்கள் குரலை கேட்டால் ௭௦ (70) வயது பெரியவர் குரல்போல் இருந்தது அண்ணா. அதனால் தான் கேட்டேன்.' என்றாள்.

எனக்கு ஒரே சிரிப்பு. (௨௦௧௨ நவம்பர் மாதம் இருக்கலாம் நான் சென்னையில் வேலைபார்த்த சமயம் மின்சார இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அன்பர் ஐயப்பன் கிருஷ்ணன் பெங்களூருவிலிருந்து அலைபேசி ஊடாக அழைத்துவிட்டு 'உங்கள் குரல் எப்படி இருக்கிறது என்று கேட்கவேண்டும் போலிருந்தது.' என்று சொன்னது தான் நினைவிற்கு வந்தது.)

'நான் கவிதைநூல்கள் வெளியிட வேண்டும் அண்ணா. தொகுத்து வைத்திருக்கிறேன். பொருத்தமான ஓவியங்கள் கீறி கவிதை நூல்களை வெளியிட வேண்டும்.' என்றாள்.

'இணையத்தில் குறிப்பாக முகநூலில் தேடினால் நிறைய பதிப்பத்தினர் கிடைப்பார்கள் ப்பா. உன் எதிர்பார்ப்பிற்கு சரியாக வரும் பதிப்பகத்தை நீயே தேர்ந்தேடுக்கலாமே. வித்யாசாகர் அண்ணாவிடம் கேட்டுப்பார். அவர் நிறைய நூல்களை வெளியிட்டதால் என்னைவிட அவரிடம் கேள். அதோடு கூடுகள் சிதைந்தபோது அகில் அண்ணாவிடம் கேள். 

பதிப்பகத்தினரை அணுகுவதற்கு முன்பு சிறந்த ஓவியரை அணுகி படங்களை கீறி வாங்கிக்கொள். அல்லது பதிப்பகத்தினரிடம் கேட்டால் அவர்களே சொல்வார்கள். பதிப்பகத்தினரிடம் செல்வதற்கு முன்பு அணிந்துரை, கவிதைகள் என ஓரளவுக்கு இறுதி செய்துகொண்டு அவர்களை அணுகு. அப்போதுதான் நூல் சிறப்பாக, பிழைகள் இல்லாமல் வெளிவரும்.' என்றேன்.

'நன்றி அண்ணா.' என்றாள்.

'நீ சென்னைக்கு எப்போது வருவாய்? வரும்போது முன்கூட்டியே எனக்கு தகவல் தெரியப்படுத்து. நான் தற்போது பெங்களூருவில் இருப்பதால் முன்கூட்டியே நீ வரும்தகவல் தெரிந்தால் எனக்கு அங்கு வரும் ஏற்பாடுகள் செய்வது எளிது.' என்றேன்.

சரி அண்ணா. (இசை வெளியீடு போன்று ஏதோ ஒரு ) நிகழ்விற்கு வருவேன். சென்னையில் என் மாமா வீட்டில்தான் தங்குவேன். சொல்கிறேன் அண்ணா. இன்னொரு நாள் பேசலாம்.' என்றாள்.

சமைக்கும்போது கைகளில் தீக்காயம் பட்டு கடந்த செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் தொடங்கி இரண்டு மாதங்கள் ஓய்வில் இருந்திருக்கிறாள்.

கடந்த வாரம் என்னிடம் அலைபேசி ஊடாக பேசினாள்.

'அண்ண்ண்ண்ணா, அண்ண்ண்ண்ண்ணா, நலமா?' என்று பள்ளிக்கூட சிறுமிபோல் பேசினாள்.

'நான் நலம். நீ எப்டி டா இருக்க?' என்றேன்.

'நலம் அண்ணா.' என்றாள்.

skype ல் நண்பர்கள் ஆனதால் 'நீ skype க்கு வாடா. அலைபேசியில் பேசினால் காசு நிறைய வருமே' என்றேன்.

'அண்ணாவோடு பேசுவதற்கு நான் காசு பார்க்ககூடாது. பார்க்கமாட்டேன்.' என்றாள்.

இதைத்தாண்டி, இந்த கள்ளம்கபடமில்லாத அன்பைத்தாண்டி எனக்கு வேறு என்ன வேண்டும்?

நான் பிறந்த ஊரான முனைவென்றியிலிருந்து இடம்பெயர்ந்து பக்கத்தில் உள்ள பரமக்குடிக்கு வந்துவிட்டோம். அதன்பிறகு படிக்க வெளியூரில், விடுதியில் தங்கி படித்தபோதும், வேலைதேடி சென்னை வந்தபோதும் உறவுகளை பிரிந்து வருகிறோம் என்ற ஏக்கம் இருந்ததுண்டு.

௨௦௦௫ ல் எழுத ஆரம்பித்து இணையம் ஊடாக எழுத ஆரம்பித்தபின் இவளைப்போன்ற ஒருசில நல்ல சொந்தங்களை எனக்குக் கொடுத்திருக்கிறது என் தமிழ்மொழியின்மேல் நான் கொண்ட பற்றுதல்.

No comments: