அனைவருக்கும் வணக்கம்,
சிலமாதங்களுக்கு முன்பு நான் எழுதிய 'பேருந்துகளில் பகல்கொள்ளை - பாகம் ௧' - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/07/blog-post_5615.html என்ற பதிவை படித்து விட்டு எழுத்தேணி அறக்கட்டளையின் உரிமையாளரான திரு. டேவிட் சகாயராஜ் என்ற இளங்குமரன் (சிங்கப்பூரில் வேலை, சொந்த ஊர் தஞ்சாவூர்) என்னோடு அலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தன்னுடைய கருத்தை இந்தக் கட்டுரை பிரதிபலிப்பதாகக் கூறியிருந்தார்.
அப்போது அவருடைய http://ezhutheni.org/ என்ற இணையத்திற்கு சென்று எழுத்தேணி அறக்கட்டளையைப் பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொண்டேன். குழந்தைகளின் கல்வி தொடர்பாக இந்த அறக்கட்டளை செயலாற்றி வருகிறது.
நான் ௨௦௦௫ ல் கவிதை எழுத ஆரம்பித்த போதே பின்னாளில் கவிதைகளின் மூலம் ஏதாவது சம்பாதித்தால் யாருக்காவது உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் அப்போதே இருந்தது.
காலப்போக்கில் அந்த எண்ணம் ஆழமாக வேரூன்றி ஆதரவில்லாத (அநாதை என்ற வார்த்தையை தவிர்த்து ஆதரவில்லாத என்ற வார்த்தையையே பயன்படுத்தலாம் என்பதே என்னுடைய கருத்து.) குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று என்னுடைய எண்ணம் வளர்ந்தது.
ஏனெனில், குழந்தைகளின் கள்ளம் கபடமில்லாத உள்ளங்களில்தான் கடவுள் வாழ்கிறான் என்பது என்னுடைய ஆழமான எண்ணம்.
காலப்போக்கில் தத்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து ஆதரவில்லாத குழந்தைகளுக்காக ஒரு இல்லம் போன்று (பொருளாதார நிலையில் நான் பிற்காலத்தில் உயர்ந்தபின்) கட்ட வேண்டும் என்ற எண்ணமாக உருமாறி ஆழமாக வேரூன்றி நின்றது. இதுபோன்று யாரும் ஆதரவில்லாத குழந்தைகளுக்காக இல்லம் போன்று யாரேனும் செயல்படுத்தி வருகிறார்களா? அவர்கள் எவ்விதம் ஆரம்ப கட்டத்திலிருந்து செயல்படுத்துகிறார்கள் என்றெல்லாம் யோசித்து அதற்கேற்றார்போல் ஊடகங்களில், இணையத்தில் தேட ஆரம்பித்ததுண்டு.
நண்பர் திரு. டேவிட் சகாயராஜ் என்ற இளங்குமரன் அவர்களின் எழுத்தேணி அறக்கட்டளை பற்றி இணையத்தில் பார்த்தபின் இனி இவரிடமே எனக்கான ஐயங்களை கேட்கலாம் என்ற மகிழ்வான எண்ணம் உதயமானது.
அப்போதே இந்த அறக்கட்டளைக்கு என்னால் முடிந்த பணஉதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்போது அந்த எண்ணம் நிறைவேறியிருக்கிறது.
http://ezhutheni.org/contact.html என்ற இணையப்பக்கத்தில் உள்ள அறக்கட்டளையின் வங்கிக்கணக்கு என்னை என்னுடைய SBI இணைய வங்கிக் கணக்கில் சேர்த்துள்ளேன். இரண்டும் வேறு வேறு வங்கிக் கணக்கு எண் என்பதாலும் இன்று விடுமுறை என்பதாலும் நாளைதான் பணம் அனுப்ப முடியும். நாளை அனுப்பினால் நாளை மறுநாள் தான் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குஎண்ணில் பணம் சென்று சேரும்.
கடந்த டிசம்பர் ௧௪, ௧௫ மற்றும் ௧௬, ௨௦௧௩ மூன்று நாட்களில் சென்னையில் தங்கியிருந்தேன். அப்போது என்னுடைய 'அழகு ராட்சசி' மற்றும் 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' கவிதை நூல்களுக்கான இருப்பு சரிபார்க்க புத்தகக் கடைகளுக்கு சென்று திரும்பி ஓரளவுக்கு சேர்ந்த கணிசமான தொகையை நாளை இணைய வங்கி வழியே எழுத்தேணி அறக்கட்டளை வழியே அனுப்பப் போகிறேன்.
உதவி செய்யும் நண்பர்கள் எழுத்தேணி அறக்கட்டளைக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து உதவுங்கள்.
புத்தகக் கடைக்காரர்களுடனான என்னுடைய அனுபவம்
===================================================
கடந்த டிசம்பர் ௧௪, ௧௫ மற்றும் ௧௬, ௨௦௧௩ மூன்று நாட்களில் சென்னையில் புத்தகக் கடைக்காரர்களிடம் இருப்பு சரிபார்க்க, அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் புத்தகக்கடை சென்றிருந்த போது நான் அங்கு விற்பனைக்கு வைத்திருந்த அழகு ராட்சசி கவிதைநூலின் பிரதிகள் இருப்பு சரிபார்த்து விட்டு விற்றதற்கான தொகையை பெற்றுக் கொண்டேன்.
அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் புத்தகக்கடையில் முதன்முறையாக என்னுடைய இரண்டாவது கவிதைநூலான 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' ஹைக்கூ நூலை விற்பனைக்கு வைத்துள்ளேன்.
(நான் சென்னையை விட்டு பெங்களூரு வந்துவிட்டதாலும் இரண்டாவது கவிதைநூலான 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' ஹைக்கூ நூல் மிகக்குறைந்த பிரதிகளே வெளியிட்டதாலும் 40 விழுக்காடு வரை, அறிமுக எழுத்தாளரின் நூல் என்பதால் சில இடங்களில் 40 விழுக்காட்டிற்கும் மேலும் தங்களுக்கான பங்குத்தொகை அல்லது கழிவாக எதிர்பார்க்கின்றனர் என்பதாலும் பரவலாக எல்லா இடங்களிலும் அழகு ராட்சசி கவிதைநூல் போல் விற்பனைக்கு வைக்க முடியவில்லை.)
ஆவடி இரயில்நிலையம் சென்றிருந்த போது, அங்குள்ள கடைக்காரரிடம் இருப்பு சரிபார்த்தேன். அவரே சொன்னார். 'இந்தமுறை சென்னை புத்தத் திருவிழாவிற்கு நம்முடைய கடை சார்பாக அங்கு கடை வைக்கப் போகின்றோம். உங்கள் நூல்களும் இடம்பெறப் போகின்றன. புத்தகத் திருவிழா அராம்பிக்கும் தருவாயில் அலைபேசி ஊடாக நானே அழைத்து தகவல் தருகிறேன். நான் மறந்துவிட்டாலும் நீங்கள் அழையுங்கள்.' என்றார். மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
பரங்கிமலை இரயில்நிலையம் அருகில் உள்ள புத்தகக்கடைக்கு சென்றிருந்தேன். இருப்பு சரிபார்க்கச் சொன்னேன். (ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்றிருந்தபோது பணமில்லை, பிறகு வாருங்கள் என்றே இரண்டுமுறை இழுத்தடித்தார்.) மீண்டும் மூன்றுமுறை இழுத்தடித்தார். மூன்றாம் நாள் சென்றேன். 'நான் தற்போது வேறு ஊரில் தங்கியிருக்கிறேன். இன்று மாலை ஊருக்கு செல்கிறேன். ஏன் என்னை அலைய விடுகிறீர்கள்? நீங்கள் தராவிட்டால் நான் வேறுவிதமாக வாங்க வேண்டியிருக்க வேண்டும்.' என்றே கொஞ்சம் மிரட்டினேன்.
உடனே கோபப்பட்டவராய் விற்ற பிரதிகளுக்கான தொகையை என் கைகளில் திணித்துவிட்டு மீதமுள்ள இரண்டு பிரதிகளை கொண்டுவந்தார். 'இந்த இரண்டு பிரதிகளும் விற்றபிறகு மொத்தமாய் தொகையை தரலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள் நீங்கள் தவறாக நினைத்துவிட்டார்கள்.' என்றார்.
'இதனை முதலிலேயே தெளிவாக சொல்லியிருந்தால் நான் இத்தனைமுறை நடந்து நடந்து அலைந்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காதே. ஆனால், பணமில்லை என்று ஏன் நீங்கள் சொன்னீர்கள்? இந்தத் தொகை உங்களிடமே இருக்கட்டும். இரண்டு பிரதிகளும் உங்களிடமே இருக்கட்டும். நீங்கள் சொன்னதுபோலவே எல்லா பிரதிகளும் விற்றபிறகு மொத்தமாய் தாருங்கள்' என்றேன்.
இருவரும் மாறிமாறி சமாதானம் ஆனோம்.
'இல்லை. கொடுத்த தொகை உங்களிடமே இருக்கட்டும். இந்தமுறை சென்னை புத்தகத் திருவிழாவில் நம்முடைய கடையும் இடம்பெறும். உங்களுடைய நூல்களும் இடம்பெறும். இன்னும் சில பிரதிகள் தாருங்கள்.' என்றார்.
'இப்போது என்னிடம் பிரதிகள் இல்லை. புத்தகத் திருவிழாவில் கடை எண்ணை அப்போது சொல்லுங்கள். அப்போது பிரதிகள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்.' என்றேன். அவரிடம் நன்றி கூறி விடைபெற்றேன்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக (பலநூல்கள் எழுதிக்குவித்த) சிங்கப்பூரில் வசிக்கும் நண்பர் மு. கோபி சரபோஜி என்னோடு அலைபேசி ஊடாக பேசினார். 'உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன்.' என்றார். மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
ஆயிரம் ஹைக்கூ, சென்ரியு எழுதிக் குவித்த நண்பர் கவியருவி ம. இரமேஷ் சில நாட்களுக்கு முன்பு (நான் கேட்பதற்கு முன்பே) 'தங்களுக்கு என்னுடைய ஹைக்கூ மற்றும் சென்ரியு நூல்களை அனுப்ப வேண்டும். பரமக்குடி முகவரிக்கே அனுப்பி விடவா? உங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்களின் உதவும் மனப்பான்மையை நானும் கடைபிடிக்க ஆரம்பிக்கிறேன்.' என்றார்.
'பரமக்குடி முகவரிக்கே அனுப்பி வையுங்கள். வங்கி கணக்கு எண்ணை அனுப்புங்கள். இணையம் ஊடாக அனுப்பி வைக்கிறேன்.' என்றேன்.
'வங்கி கணக்கு எண்ணை பிறகு அனுப்புகிறேன். நூல்களை உடனே அஞ்சல் செய்கிறேன்.' என்றார்.
மனதிற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
No comments:
Post a Comment