Tuesday, April 22, 2014

‘ஆற்றுங்கவிச் செல்லம்’ பாமினி








என் தங்கச்சிப்பிள்ள பாமினி (திரைப்படப் பாடலாசிரியை) க்கு நான் எழுதிய கவிதையிது.


அண்ணனென்று எப்போதும் அழைக்கின்ற மங்கை
எண்ணமதில் நினைவாக இருக்கின்ற தங்கை
வண்ணவண்ணக் கவியிசைக்க வார்த்தைவழி கங்கை
அன்னையிங்கு தூரநிற்க அரவணைக்கும் செங்கை

செல்லச்செல்லப் பிள்ளையென சொல்லியுளம் துள்ளும்
கள்ளமில்லா உள்ளமதில் காணுமன்பு வெள்ளம்
சொல்லச்சொல்லக் கரைந்துவிழும் கள்ளமிலா உள்ளம்
அள்ளஅள்ளக் குறையாமல் ஆற்றுங்கவிச் செல்லம்

கங்கைநதி வைகைநதி காவிரியும் காயும்
தங்கையிவள் தமிழ்கேட்க திரையுலகே சாயும்
மங்கையிவள் மொழிகேட்டே மாண்டபுலி பாயும்
சிங்களவன் சிங்கத்தின் செருக்கெல்லாம் மாயும்

கற்பனையின் உச்சம்நின்று கவிக்குயிலும் பாடும்
சொற்குவியல் வற்றாமல் சிந்தைவழிந் தோடும்
கற்றதமிழ் பாடல்களில் களிநடன மாடும்
உற்றதுணைச் சுற்றமெலாம் இவளெங்கே தேடும்

கவிக்குயிலின் பாடல்களை கேட்பவன்தான் நானும்
செவியோரம் கேட்டுவிட்டால் சொட்டும்மலைத் தேனும்
தெவிட்டாத வார்த்தைகளில் துள்ளுமிசை நாணும்
புவியிலிங்கு கூவுகின்ற புதுக்குயிலின் கானம்

அழுதழுது எழுதிவைத்தேன் அன்பிலிந்த மெட்டு
விழுந்தெழுந்து தொழுததமிழ் விளையாடும் தொட்டு
பழகுந்தமிழ் அழகுறவே பாடி;கைகள் தட்டு
இளங்குயிலே உமதுபுகழ் இமயமதில் நட்டு

வாசமுள்ள நமதுதமிழ் வார்த்தைகளால் பாட்டு
நேசமிக்க நெஞ்சமதில் நிறையுமூச்சுக் காற்று
பேசுந்தமிழ் குழவியிந்த பாமினியும் கேட்டு
அசைந்திசைந்து ஆடிடுவாள் அண்ணனிவன் கூற்று

No comments: