2006 ம் ஆண்டு எழுதிய கவிதை இது. ஒரு இளைஞன் தன் உறவுகள் அனைத்தையும் இழந்துவிடுகிறான். அவன் தன் சொந்தங்களோடு வாழ்ந்தபோது நல்ல பணவசதியுடன் இருந்தபோது அனைவருக்கும் உதவினான். இப்போது அவன் ஏழையாகவும் அனாதையாகவும் ஆகியிருக்கிறான். அவன் பிழைக்க வழி தேடுகிறான். அன்று பொங்கல் வருகிறது. இது ஒரு கற்பனை கவிதை. இதற்கான கவிதை இதுதான்.
வறுமைக்கனவுகளில் தூங்கியவன்
வெறுமை நினைவுகளில் ஏங்கினான்!
விடியலைக்கண்டு!!
இடக்கை அறியாமல்
கொடுத்தது வலக்கை!
கொட்டிக்கொடுத்ததால்
அன்று சிவந்தது
இவன் கை!
வறுமையால் விரிக்கமுடியவில்லையே
இன்றிவன் சிறகை!!
விண்ணொளி கொடுத்தது
புதுநம்பிக்கை!
விடியலை நம்பியே இருந்தது
இவனிரு கை!
பகலவன் ஒளிகொடுத்தான்!
இளையவன் முடிவெடுத்தான்!!
வேதனையை சுமந்துகொண்டு
சாதனைக்காய் புறப்பட்டான்!
மெதுவாய்க் கடந்தான் மனவெளியை!
புதிதாய்ப் பார்த்தான் புல்வெளியை!
அமிழ்தாய் இரசித்தான் பனித்துளியை!!
சாலையில் ஓடினான்!
வேலையைத் தேடினான்!
பசியால் வாடினான்!!
உற்றுப்பார்த்தான்!
சற்றே திரும்பினான்!
திரும்பிய திசையெங்கும்
கரும்பு! - மனம்
விரும்பும் மணம்வீசும்
மஞ்சள்!!
பார்க்குமிடமெங்கும்
பனைக்கிழங்கு!
எங்கெங்கும்
மக்கள் கூட்டம்!
வீதிகளெங்கும்
தமிழர்கள் நடமாட்டம்!
ஏழைகளின் அகமெங்கும் குளிர்ச்சி!
இளையவன் முகமெங்கும் மகிழ்ச்சி!!
'என்ன காரணம்?'
என்று கேட்டான்!
சென்றவன் சொன்னான்
'இன்றுதான் பொங்கல்!
தமிழன் உள்ளமெங்கும்
தங்கும் பொங்கல்!!'
உடலெங்கும் புத்துணர்ச்சி! - இளையவன்
உள்ளமெங்கும் புதுஎழுச்சி!!
கோடியில் புரண்டவனை
கோடியில் புரளவைத்தது காலம்!
கொட்டிக் கொடுத்தவனை
எட்டி உதைத்தது காலம்!!
இளையவனுக்கு
கைகொடுத்து கரைசேர்க்க
தைமகள் வந்துவிட்டாள்! - நம்
தமிழ்மகள் வந்துவிட்டாள்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) – 23-12-2011
2. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 31-12-2011
No comments:
Post a Comment