இங்கு நானிருந்தேன்
என்னுடைய வளங்கள்
அனைத்தையும்
என்னகத்தே வைத்துக்கொண்டு
இங்குதான் நானிருந்தேன்
செழிப்போடுதான் நானிருந்தேன்
சலசலப்பாய் ஓயாமல்
அசைந்தாடிக் கொண்டிருந்தேன்
துள்ளிக் குதித்திடவும்
அள்ளியணைத்திடவும்
எல்லாமுமாய்
நானே நானாயிருந்தேன்
கொஞ்சம் கொஞ்சமாய்
நான் என்னை இழக்கத் தொடங்கினேன்
வந்தவர்கள்
என்னை மண்ணிட்டு மூடினார்கள்
கண்ணீர்வழி எனக்குள்ளேயே
உருகிஉருகிக் கண்ணீராகவே
உயிரறுந்து கிடந்தேன்
எனக்குள்ளேயே
சிதைந்துசிதைந்து முடங்கிப்போய்
மூச்சிருந்தும் பேச்சிச்சின்றிக்
கிடந்தேன்
நான் கதறி
கூக்குரலிட்ட போதெல்லாம்
கேட்காமலேயே போனது
என் ஓலக்குரல்
நான்
பொங்கி எழாமலேயே
போய்விட்டேன்
இன்று நான்
நிரந்தரமாகவே இல்லையெனினும்
இங்குதான் நானிருந்தேன்
எனக்கான தடயங்கள்
அழிக்கபட்டுவிட்ட போதினிலும்
இங்குதான் நானிருந்தேன்
எனக்கான
அடையாளங்களை அழித்துவிட்டு
எங்கெங்கோ தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு
ஏனோ தெரியவில்லை
இங்குதான் நானிருந்தேனென்று...
No comments:
Post a Comment