Sunday, February 12, 2023

அத்த மகளே ( என் கற்பனையில் உருவான புத்தம் புது கிராமிய மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/DRE0QoPogWM


தினம் தினம் அன்பு செலுத்தத் தேவையான அன்பான, அழகான, அமைதியான மனமிருந்தால், காதலர் தினம் என்று தனியாக நாம் கொண்டாட வேண்டியதில்லை.

என் கற்பனையில் உருவான இந்த மெட்டுக்கும் வரிகளுக்கும் நானும் என் மனைவியும் சேர்ந்து பாடிய பாடல்...

சதுரகிரி மலையடிவாரமான சாப்டூர் கிராமத்தைச் சேர்ந்தவள் என் மனைவி ஆனந்தி. அவள் சிறுவயது புகைப்படத்தைத் தான், இந்தக் காணொளியின் முதலாக இணைத்துள்ளேன். 





ஆண்
அத்த மகளே என்மேல்
ஆசவச்ச பெண்மயிலே
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கவச்ச உண்மையிலே

பெண்
அத்த மகனே என்மேல்
ஆசவச்ச மச்சானே 
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கும்படி வச்சானே 

ஆண் 
காலொடிஞ்சு நா கெடக்க
கல்லொடைக்க போன புள்ள
நாளுமொரு யுகமாச்சு
நானழுது குளமாச்சு
( அத்த மகளே )

ஆண்
நானுமுன்னப் பிரிஞ்சாலே
உசுருங்கூட என்னதில்ல 
ஆணுங்கொண்ட அன்பு மட்டும்
ஆயுசுக்கும் போவதில்ல
( அத்த மகளே )

ஆண்
பசியா நானிருந்தா
பதறிச்சோறு ஆக்கிடுவ
பக்கம்வந்து பக்கம்வந்து
பக்குவமா ஊட்டிடுவ
( அத்த மகளே )

ஆண்
சோறுதண்ணி சாப்பிடத்தா
சோர்வின்றி நீ உழைச்ச
தேருபோல எம் மனசில்
உசந்து நின்னு நீ சிரிச்ச
( அத்த மகளே )

ஆண்
ஆத்தோரம் தோப்போரம் - நா
நடந்து போகயிலும்
ஒன் நெனப்புத்தானே புள்ள
கட்டயிலே வேகயிலும் 
( அத்த மகளே )

ஆண்
அத்த மகளே என்மேல்
ஆசவச்ச பெண்மயிலே
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கவச்ச உண்மையிலே

பெண்
அத்த மகனே என்மேல்
ஆசவச்ச மச்சானே 
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கும்படி வச்சானே

No comments: