பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=hhccO_2J_xo
நரித்தனங்கொண்ட வெள்ளையன் அன்று
விரித்தனர் வணிக வலைதனைக் கொண்டு
நரிக்குடிக் கருகே வரிப்புலிகள் ரெண்டு
சரித்திர மெழுதப் பிறந்தனர் அன்று
பெரிய மருது சின்ன மருது
பேரக் கேட்டாலே பயம் வருது
வரியத்தான் கேட்டே வந்தது படை
வரிப்புலி ரெண்டால் வீழ்ந்தது பகை
ஆண்டதோர் தமிழினம் அடிமையாய் வீழ்ந்ததே
பாண்டியர் பேர்போற்றப் புயலாக வந்தாரே
வந்த பகையை ஊதியே தள்ளினர்
வந்த படையை போரிலே வென்றனர்
காளையர் கோயிலில் வெள்ளையன் படையை
எதிர்த்தே நின்று வெற்றியும் பெற்றே
வேலு நாச்சியாரிடம் ஆட்சியைக் கொடுத்த
வீரத் தளபதிகள் மருதிருவர் போற்றி
வெள்ளையன் வந்தது கொள்ளை யடிக்கத்தான்
கொள்ளையர் கூட்டம் ஆளுது இன்னுந்தான்
எப்படிச் சொல்ல இவங்களின் வீரத்த
அப்படிப் போடடி இன்னுந்தான் தாளத்த
புலிகளை அடைக்கும் கூண்டுக்குள்ளே தான்
பாண்டிய ரிருவரை அடைத்தே வைத்தனர்
மாண்டவர் கோடி ஆண்டவர் கோடி
பாண்டிய ரிருவரைப் போலிங் குண்டோடி
இருப்பதைச் சுருட்டும் வெள்ளையர் கூட்டம்
திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலே இட்டனர்
இரக்கமே இல்லாமல் எல்லோரையும் கொன்றனர்
மருதிருவரின் வாரிசுகளைக் கூட சிறையில் அடைத்தனர்
இரத்தம் கொதிக்குது சித்தம் தெளியட்டும்
யுத்தத்தின் சத்தத்தில் இரத்தம் சிந்திய
உத்தமர் உள்ளம் உருகட்டும் - இந்திய
சுதந்திரம் என்பதே நாடகம் தானே
மருதிருவர் வீரம் உலகம் அறிந்ததே
மக்கள் என்றும் மறவா திருக்கட்டும்
விருந்தோம்பல் செய்யும் வெற்றிக் கூட்டம்
வீர மறவர்களை நினைவு கூறட்டும்
No comments:
Post a Comment