Showing posts with label கவிதைகள் (பாகம் - 7). Show all posts
Showing posts with label கவிதைகள் (பாகம் - 7). Show all posts

Saturday, September 3, 2011

கறைபடிந்த தேசம்!

கறைபடிந்த தேசம்! – கட்டுக்
கதையைதானே பேசும்!!
கலையிழந்த தேசம்! – நம்
நிலையென்று மாறும்?

நட்போடு பழகி
கற்போடு வாழ்ந்தாலும்
தப்பாய் நினைக்கும் சமுதாயம்! – இதை
நினைத்தாலே எனுளத்தில் பெரும்காயம்!!

காதலை விட்டுவிட்டு
காமத்தைமட்டும் தொட்டு
பெண்டிர் தேகம்தீண்டும்
ஓரிரு கூட்டம்! – அவர்
நோக்கமெலாம் இளமைக்களியாட்டம்!!

தமிழ்த்திரைகளில்கூட – ஆபத்
பாண்டவர்களைவிட
துகிலுரிக்கும் துரியோதனர்களே அதிகம்!
மனஉறைகளில்கூட – மதங்கொண்ட
யானைகளைவிட
மதங்கொண்ட மனிதர்களே அதிகம்!
மதக்கறைகளை பரப்பிவிட...

பாசத்தாலான அறைகள் காணோம்!
எங்கும் பாசறைகள்தான் வீணாய்!!

ஜாதிக்கொரு சங்கம்தான்!
வீதிக்கொரு கம்பம்தான்!
நீதியைக் காணோம் எங்கும்! – இதை
நினைத்தா லெனுளம் பொங்கும்!!

தீரதமாய்
வீதிகளில் பரவுகிறது தீவிரவாதம்!
பூரதமாய்
என்றுமாறும் நம் புன்னகைதேசம்?

கறைபடிந்த தேசம்! – கட்டுக்
கதையைதானே பேசும்!!
கலையிழந்த தேசம்! – நம்
நிலையென்று மாறும்?

கவிஞானி!

நடையில் பயங்காட்டி – கவிதையில்
தொடைநயம் கூட்டி – பறங்கிப்
படைகள்தனை
தொடைநடுங்க வைத்தவன்!

தமிழ் பாட்டுத்திறத்தாலே
அந்நியனுக்கு வேட்டுவைத்தவன்!
தமிழ்க்கவிதைகளால்
வெள்ளையன்மேல்
வெடிகுண்டு வீசிய
தமிழ்வீரன்!

அடிமை இந்தியாவை
சுதந்திர இந்தியாவாக
மாற்றத் துடித்தவன்!

ஏழ்மைநிலையில் தானிருந்தும்
வாய்மைநிலை தவறாதவன்!
தாயன்பை போதித்தவன்!
தமிழ்க்கவிதையால் சாதித்தவன்!!

மூடநம்பிக்கைகளை
ஓட ஓட விரட்டியவன்!

எட்டயபுரத்தில் பிறந்து
வாரணாசிக்குப் போய்
புராண இதிகாசங்களை
கரைத்துக் குடித்தவன்!

புத்தனைப் போலவே
சித்தனிவன்! – பரி
சுத்தனிவன்! – கவி
பித்தனிவன்! – தேச
பக்தனிவன்!

மண்ணுலகில் வாழும்
நீசர்கள் நலனுக்காய்
ஈசனிடம் வேண்டிய
துறவி இவன்!

எண்ணங்களை நெறிப்படுத்தி
வேலியமைக்க
காளியிடம் வேண்டியவன்!

தனக்குள்ளே
கடவுளைக் கண்டவன்!
காதலின் புகழை
பாடலாய்ப் பாடியவன்!

மண்ணுலக உயிர்களின்
உள்ளங்களில் வாழும்
கவிஞானி இவன்!!

காதல் சிலுவை!

உன்னை நேசிப்பதை
உன்னிடம் சொல்வதற்கு
மலர்களை கொண்டுவராமல்
மலர்களைவிட மென்மையான
என் காதலை கொண்டுவந்தேன்!

நீயோ
உன் மௌனமெனும்
ஆயுதமெடுத்து
என் இதயத்தின் கைகளில்
ஆணிகளிடித்து
எனை சிலுவையில் அறைகிறாய்!

இயேசு
முதல் நாள் மரித்து
மூன்றாம் நாள்
உயிர்த்தாராம்!
நானும்
ஒவ்வொரு நாளும்
உறக்கம் என்ற பெயரில்
மரித்து உயிர்க்கிறேன்!!

உன்மீது என்மனதிலுள்ள
அன்பின் ஆழத்தை
உணர்த்துவதற்காக...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012

தமிழ்நாடு!

கடந்த 2009 ல் நடந்த இனப்படுகொலைக்குப் பிறகு பல அப்பாவித் தமிழர்கள் முள்வேலிக்குள் முடக்கப்பட்டனர். தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது எழுதிய கவிதை இது.


என் இந்தியத்தாயின்
காலடியில் தான்
நான் வாழ்கிறேன்!

என் தாயின் கால்களால்
நான் நசுக்கப்படுகிறேன்!

என் தாய்க்கோழி மிதித்து
குஞ்சு நான் சாகிறேன்!

தாகத்திற்கு எனக்கு
தண்ணீர் கூட கிடைக்கவில்லை!

வறட்சி காரணமாய்
என் உடலில்
வெடிப்புகளும்
விரிசல்களும்
அதிகம்!

என்மீது வாழ்ந்த மக்கள்
கடல்சூழ்ந்த தீவில்
காக்கை கழுகுகளுக்கு
இரையாகின்றனர்!

இந்தக் கொடுமைகளையெல்லாம்
பார்த்துக் கொண்டே
ஒன்றுமே செய்ய இயலாத
ஒன்பது போலவே
வாழ்கிறேன் நான்!!

என் பெயர்
தமிழ்நாடு!


இக்கவிதைகள் வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 03-12-2011

சுவாசம்!

ஒளி மங்கிய
மாலை நேரமது!

கடற்கரையோரமாய்
நடந்து போனேன்!

காற்று வந்து
என் கன்னத்தில்
அறைந்தது!

‘ஏன் அறைந்தாய்?’
என்று கேட்டேன்!

‘நீ மட்டும் ஏன்
என்னை சுவாசிக்காமல்
உன் காதலை
மட்டுமே சுவாசிக்கிறாய்!’
என்று சொன்னது
காற்று!!