நடையில் பயங்காட்டி – கவிதையில்
தொடைநயம் கூட்டி – பறங்கிப்
படைகள்தனை
தொடைநடுங்க வைத்தவன்!
தமிழ் பாட்டுத்திறத்தாலே
அந்நியனுக்கு வேட்டுவைத்தவன்!
தமிழ்க்கவிதைகளால்
வெள்ளையன்மேல்
வெடிகுண்டு வீசிய
தமிழ்வீரன்!
அடிமை இந்தியாவை
சுதந்திர இந்தியாவாக
மாற்றத் துடித்தவன்!
ஏழ்மைநிலையில் தானிருந்தும்
வாய்மைநிலை தவறாதவன்!
தாயன்பை போதித்தவன்!
தமிழ்க்கவிதையால் சாதித்தவன்!!
மூடநம்பிக்கைகளை
ஓட ஓட விரட்டியவன்!
எட்டயபுரத்தில் பிறந்து
வாரணாசிக்குப் போய்
புராண இதிகாசங்களை
கரைத்துக் குடித்தவன்!
புத்தனைப் போலவே
சித்தனிவன்! – பரி
சுத்தனிவன்! – கவி
பித்தனிவன்! – தேச
பக்தனிவன்!
மண்ணுலகில் வாழும்
நீசர்கள் நலனுக்காய்
ஈசனிடம் வேண்டிய
துறவி இவன்!
எண்ணங்களை நெறிப்படுத்தி
வேலியமைக்க
காளியிடம் வேண்டியவன்!
தனக்குள்ளே
கடவுளைக் கண்டவன்!
காதலின் புகழை
பாடலாய்ப் பாடியவன்!
மண்ணுலக உயிர்களின்
உள்ளங்களில் வாழும்
கவிஞானி இவன்!!
No comments:
Post a Comment