Showing posts with label கவிதைகள் (பாகம் - 9). Show all posts
Showing posts with label கவிதைகள் (பாகம் - 9). Show all posts

Sunday, September 4, 2011

தமிழ்த்தாயே!

சித்திரப் பெண்ணடி நீ! – என்
செல்லக் குழந்தையடி நீ!
முத்துரதம் போன்றவள் நீ! – இங்கு
முழுநிலவாய் வந்தவள் நீ!
தித்திக்கும் தேன் சுவையாய் – எங்கள்
தென்னாடு உனைப் போற்ற
எத்திக்கும் புகழ் பெற்ற – அன்பான
எம் தமிழ்த்தாயடி நீ!!

நல்ல மொழியுடையாள் நீ! – என்
நாவில் புகுந்தவள் நீ!!
சொல்லும் மொழிகளிலே – தனிச்
சுவை மிகுந்தவள் நீ!!
எள்ளளவும் குறை காணோம் – இங்கு
என் தமிழ்த்தாய் உன்னிடம்!
பள்ளத்தில் வீழ்ந்தாயடி தாயே! – உனைப்
பாவிகள் மறந்தாரடி தாயே!!

கற்ற பழந்தமிழ் நீ! – எனைக்
காப்பாற்ற வில்லையடி தாயே!
உற்ற தாயாய் நீயிருந்தும் – எனக்கு
உதவ வில்லையே தாயே!
மற்றொரு மொழியாம் ஆங்கிலம் – என்
மானங் காக்குதடி தாயே!
பற்றுதல் குறையவில்லை தாயே! – உன்மேல்
பாசம் மறையவில்லை தாயே!!

நீயும் என் னுயிரன்றோ! – எங்கும்
நான் வணங்கும் தெய்வமோன்றோ!
தாயே சரண மென்றேன்! – தமிழ்த்
தாயே சரண மென்றேன்!!
வாயார உனை நானே – பலமுறை
வாழ்த்து கிறேன் தமிழ்த்தாயே!
துயர் வேண்டாம் தாயே! – இனி
துன்ப மில்லை தாயே!!

தென்னகத்தே வளர்ந்த நீ – இனி
தரணியெல்லாம் தழைப்பாய் நீ!
எனைப்போல பலகோடிப் புலவர்கள் – எப்போதும்
இங்குண்டு உனை வாழ்த்த!!
என் னகத்தே உள்நின்று – இங்கு
எனை யியக்கும் தமிழ்த்தாயே!
உன்தாள் பணிந்து தொழுது – இறுதியாய்
உனை நான் வாழ்த்துகிறேன்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011

அருள்வாய் தேவி!

ஆண்மை பெருகட்டும்! – என்னுள்
அகந்தை அழியட்டும்!!
அன்பில் உறையட்டும்! என்மதி
அறிவிற் சிறக்கட்டும்!!
தேகம் மெலியட்டும்! – என்னுள்
சோகம் ஒழியட்டும்!!
கோபம் குறையட்டும்! – முன்ஜென்ம
சாபம் பொசுங்கட்டும்! – என்னுள்
செம்மை பிறக்கட்டும்!!
விதியின் வழியை
மதியால் வெல்ல
வழியுரைப்பாய் தேவி! – என்றும்
உன்னருளே என்மனதில் மேவி!!

காதல் குழந்தைகள்!

பிரம்மனின் ஆணுருவம்
உன் அப்பா!
பிரம்மனின் பெண்ணுருவம்
உன் அம்மா!!
பேரழகியான
உன்னைப் படைத்ததனால்...

தேநீர் அருந்திவிட்டு
அந்தக் கோப்பையை
கீழே எறிந்துவிடாதே...
என்னிடம் கொடுத்துவிடு!
என் செல்லக் குழந்தையான
உன் இதழ்கள் பட்ட
அந்தக் கோப்பையிலும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
நம்முடைய காதல்!!

உன் முகத்தில் வழியும்
வியர்வைத் துளிகளை
உன் கைக்குட்டையால்
அடிக்கடித் துடிக்கிறாய்!
உன்னைப் போலவே
உன் கைக்குட்டையும்
அழகாகிக் கொண்டே
வருவதைப் பார்...!!

பொதுவாக காதலிக்க
ஆண் பெண் என
இருவர்தான் தேவை!

ஆனால்...
நம் காதலுக்கு மட்டுந்தான்
நீ நான் நாம்காதல்
என மூவர் தேவை!

நீ என்
பார்வைஎல்லைக்குள்
வாழும்போதெல்லாம்
நான்
உன்னை நேசிக்கிறேன்!

நீ என்
பார்வையை விட்டு
மறைந்தபின்
நான்
நம் காதலை நேசிக்கிறேன்!!

நான்
திருமணம் செய்துகொள்ள
இவ்வுலகில்
எத்தனையோ பெண்களில்
ஒருத்தி உண்டு!
நான் காதலிக்க
என்னுள்ளத்தில்
நீ ஒருத்தி மட்டுந்தான்!!

என் தேவதை
உன் நினைவுகளே
உலகமென்று வாழும்
காதல் பக்தன்நான்!!

இவ்வுலகில் நம்மைப்போல்
காதலிப்பவர்கள் அனைவருமே
மேல்ஜாதி மக்கள்!
காதலிக்காதவர்கள் அனைவருமே
கீழ்ஜாதி மக்கள்!!

நாமிருவரும் பேசிச்சிரித்த
பொழுதுகளிலெல்லாம்
நாம்காதல் கருவுற்று
பல குழந்தைகளை
பெற்றெடுத்து விட்டது!

இன்றுநான் தற்செயலாய்
நாம் பேசிச்சிரித்த
இடங்களுக்கெல்லாம்
போக நேர்ந்தபோது
நம் காதலின் குழந்தைகள்
ஒவ்வொருவரும் தனித்தனியே
தவக்கோலத்தில் அமர்ந்திருப்பதைக்
கண்டேன்!

‘குழந்தைகளே...
ஏனிப்படி அமர்ந்திருக்கிறீர்கள்?’
என வாஞ்சையோடு கேட்டேன்!

‘உன்னையும் உன்காதலியையும்
சேர்த்துவைக்க விருப்பப்பட்டாள்
எங்களின் அம்மா!

நீயுன் காதலியை
முதல்முதலில் சந்தித்த
அந்தப் பேருந்துக்குள்
கடுந்தவம் செய்கிறாள்
எங்களின் அம்மாவான
உங்களின் காதல்!

அவளின் விருப்பத்தை
நிறைவேற்ற
நாங்கள் பிறந்த
இதே இடங்களில்
கடவுளை நோக்கி
தவமிருக்கிறோம்’
என்று சொல்லிவிட்டு
மீண்டும் தவத்தைத் துவக்கின
நம் காதலின் குழந்தைகள்!!

உனக்காக...

கண்ணே கனியமுதே கட்டித்தயிரே கரும்புச்சாறே
பொன்னே பூச்சரமே புன்னகையே கண்ணிமையே
பெண்ணே பேரழகே புதுமலரே மதுரசமே
என்னே உன்னழகு இயற்கையே வியக்குதடி!

கண்மையிலே கறுப்பே கனியிதழின் சிவப்பே
பொன்மயிலே பெண்ணழகே பேரழகே தேவதையே
உண்மையிலே நீஓர் உயிருள்ள மெழுகுச்சிலை
என்மயிலே என்னுயிரே என்தாயே பெண்பூவே

அன்பே ஆருயிரே அருமருந்தே திருவிருந்தே
முன்பே நீயிருந்தால் முழுநிலவும் தோற்குமடி
என்பேன் அன்பன்நான் எழுதுகிறேன் அழுதபடி
உண்பேன் ஓர்துளிவிஷம் உனக்காக கண்மணியே!!