Sunday, September 4, 2011

தமிழ்த்தாயே!

சித்திரப் பெண்ணடி நீ! – என்
செல்லக் குழந்தையடி நீ!
முத்துரதம் போன்றவள் நீ! – இங்கு
முழுநிலவாய் வந்தவள் நீ!
தித்திக்கும் தேன் சுவையாய் – எங்கள்
தென்னாடு உனைப் போற்ற
எத்திக்கும் புகழ் பெற்ற – அன்பான
எம் தமிழ்த்தாயடி நீ!!

நல்ல மொழியுடையாள் நீ! – என்
நாவில் புகுந்தவள் நீ!!
சொல்லும் மொழிகளிலே – தனிச்
சுவை மிகுந்தவள் நீ!!
எள்ளளவும் குறை காணோம் – இங்கு
என் தமிழ்த்தாய் உன்னிடம்!
பள்ளத்தில் வீழ்ந்தாயடி தாயே! – உனைப்
பாவிகள் மறந்தாரடி தாயே!!

கற்ற பழந்தமிழ் நீ! – எனைக்
காப்பாற்ற வில்லையடி தாயே!
உற்ற தாயாய் நீயிருந்தும் – எனக்கு
உதவ வில்லையே தாயே!
மற்றொரு மொழியாம் ஆங்கிலம் – என்
மானங் காக்குதடி தாயே!
பற்றுதல் குறையவில்லை தாயே! – உன்மேல்
பாசம் மறையவில்லை தாயே!!

நீயும் என் னுயிரன்றோ! – எங்கும்
நான் வணங்கும் தெய்வமோன்றோ!
தாயே சரண மென்றேன்! – தமிழ்த்
தாயே சரண மென்றேன்!!
வாயார உனை நானே – பலமுறை
வாழ்த்து கிறேன் தமிழ்த்தாயே!
துயர் வேண்டாம் தாயே! – இனி
துன்ப மில்லை தாயே!!

தென்னகத்தே வளர்ந்த நீ – இனி
தரணியெல்லாம் தழைப்பாய் நீ!
எனைப்போல பலகோடிப் புலவர்கள் – எப்போதும்
இங்குண்டு உனை வாழ்த்த!!
என் னகத்தே உள்நின்று – இங்கு
எனை யியக்கும் தமிழ்த்தாயே!
உன்தாள் பணிந்து தொழுது – இறுதியாய்
உனை நான் வாழ்த்துகிறேன்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011

No comments: