Tuesday, May 25, 2010

மரணத்தை நோக்கி...

மறுபிறவியில்
நம்பிக்கையில்லை
எனக்கு!

பயணிக்கிறேன்
மரணத்தை நோக்கி!

என்னைப்
புதைத்த இடத்தில்
உன் கண்ணீர்த்துளிகள்
விழுந்தால் போதும்!
உயிர்த்திடுவேன்!
கண் விழித்திடுவேன்!
உன் முகம் காண...

கடவுள்!

மனிதமன ஆறுகள்
கலக்கும் கழிமுகம்
கடவுள்

ஏழைகள்!

வறுமைத்தீயில்
தீக்குளிக்கும்
விட்டில் பூச்சிகள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்தாரம் – 01-10-2006

2. இராணி – 19-11-2006

3. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012

அழகு!

கடலால் அலை அழகு! - காது
மடலால் யானை அழகு!!
மயிலால் ஆடல் அழகு! - கூவும்
குயிலால் பாடல் அழகு!!
சொந்தத்தால் அன்பு அழகு! - கவிதைச்
சந்தத்தால் என் தாய்த்தமிழ் அழகு!!
உன்னால் என் மதி அழகு! - இன்றும்
என்னால் என் விதி அழகு!!

என்னைப் பார்!

என்னைப் பார்
காதலியே...
என்னைப் பார்!

நீ சிரித்துப் பார்க்காவிட்டாலும்
சினம்கொண்டாவது
என்னைப் பார்!

நீ மலையளவு பார்க்காவிட்டாலும்
சிலையாகவாவது
என்னைப் பார்!

நீ
கலையாகப் பார்க்காவிட்டாலும்
கடுகளவாவது
என்னைப் பார்!

என்னைப் பார்
காதலியே...
என்னைப் பார்!

முடியும்!

நீரால் மட்டுந்தான்
உயிர்கள் வாழமுடியும்! - ஆணி
வேரால் மட்டுந்தான்
மரங்கள் வாழமுடியும்!!

வந்தனையால் மட்டுந்தான்
சொந்தங்கள் நிலைக்கமுடியும்! - புதுச்
சிந்தனையால் மட்டுந்தான்
கனவுகள் ஜெயிக்கமுடியும்!!

வீரனால் மட்டுந்தான்
நம்தேசம் வாழமுடியும்! - தமிழ்
ஈழனால் மட்டுந்தான்
தமிழ்தேசம் வாழமுடியும்!!

என்னவளே...
உன்னால் மட்டுந்தான்
என்கவிதைகள் சிறக்கமுடியும்!!

ஏமாற்ற மாட்டாள்!

நான் நாத்திகனாக இருந்த காலகட்டமது. 2005 ஆகஸ்டு மாதம் நடந்த நிகழ்ச்சி இது. அவள் கோயிலுக்குள் நுழைவதைப் பார்த்தேன். கோயிலுக்குள் செல்வதையே வெறுத்த நான் அவள் நுழைந்தவுடன் நானும் நுழைந்து விட்டேன். அங்கிருந்த கண்ணாடியில் நான் என்னைப் பார்த்தேன். எனக்குப் பின்னே நின்றிருந்த அவள் தெரிந்தாள். அவள் தன் நெற்றியில் குங்குமத்தை எடுத்து பூசிக் கொண்டிருந்தாள். அப்போது தோன்றிய கவிதை இது.

முறம்கொண்டு
காட்டுப்புலியை விரட்டியவள்
என்குலத்துப் பெண்! - புதுக்
கரம்கொண்டு என்னுள்
காதலைப் புகுத்தியவள்
நீதான்!!

என்
அகரத்தில் என்றும் அம்மா!
சிகரத்தில் என்றும் நீதான்!!

பணம் பத்தும் செய்யுமாம்! - உன்
மனம் சொத்தாகிவிட்டது எனக்கு!!

இருவிழி வழி புகுந்து
இதய வலியைக் கொடுத்துவிட்டாய்
நீ!

கண்ணாடியில்
உன் வதனம் பார்த்து
வணங்கினேன்!
என்
உள்ளத்தைக் கடந்த
உருவமுள்ள கடவுள்
நீதான்!!

கடவுளாய்
சிலையை வணங்கும்
சிரிப்பூட்டும் உலகில்
சிலையாய்...
சிரிப்பவளை வணங்கும்
சிந்தனை உலகில்
நான்!

இப்படித்தான் மாற்றினாய் நீ!
இதயத்தை இடம் மாற்றினாய் நீ!
இருவிழியால் தேற்றினாய் நீ!
என்றும் ஏமாற்ற மாட்டாய் நீ!!

கண்ணீர்க் கதை!

2005 ம் ஆண்டு அக்டோபர் மாதம் என்றே எனக்கு நினைவு. அழகப்பா பல்கலைக் கழகத்தில் நான் என்னுடைய முதுநிலை கணினிப் பயன்பாட்டியல் (M.C.A) படிப்பின் போது எனக்கிருந்த 'கிராம மேம்பாட்டுத் திட்டம்' என்ற பாடத்தின் அடிப்படையில் என்னுடைய வகுப்பில் இருந்த அனைவரோடும் சேர்ந்து காரைக்குடிக்கு அருகில் உள்ள (காரைக்குடியிலிருந்து தேவகோட்டை செல்லும் வழி) அமராவதிப் புதூர் என்ற கிராமத்திற்கு சென்று சில நாட்கள் தங்கினோம்.

கடைசி நாளில் பல்கலைக் கழகத்தின் சார்பில் அந்தக் கிராமத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த மேடையில் மேடையேறி நான் வாசித்த கவிதை 'கண்ணீர்க்கதை'. நிகச்சி நிறைவுபெற்றவுடன் அப்போதைய ஊராட்சிமன்றத் தலைவர் திரு. கருப்பையா அவர்கள் அனைவரையும் பாராட்டினார்.

அதன்பிறகு சில மாதங்கள் கழித்த பிறகு திரு. கருப்பையா அவர்களை எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது. தினத்தந்தியில் வெளிவந்திருந்த என்னுடைய கவிதையை தான் படித்ததாகவும் 'கவிதை நன்று' என்ற பொருளில் அப்போது அவர் என்னைப் பாராட்டியது என் நினைவில் இப்போதும் இருக்கிறது.


இது ஒரு கண்ணீர்க்கதை!
ஏழையவன் செந்நீர் சிந்திய கதை!
காளையவன் கண்ணீர் சிந்திய கதை!!

கதிரவன் கதிர்பரப்பினான்!
காளையவன் கண்விழித்தான்!
காளைகளுடன்
கலப்பையும் சுமந்து சென்றான்
கழனிக்கு!!

பதைபதைத்து விதைவிதைத்துக்
கதைசொல்லிக் களைபறித்துக்
கண்ணீர்சிந்தித் தண்ணீர்பாய்ச்சுவான்
காளையவன்!

அவன்
களைப்பு ஆற...
களைப்பில் வந்த
இளைப்பு ஆற...
களிப்பில் திளைப்பான்!
கொண்டவளை நினைப்பான்!!

வயலுக்கு வருவாளே வஞ்சி!
பசிக்குத் தருவாளே கஞ்சி!
காளையவன் கேட்பானே கெஞ்சி!
கேட்டதைக் கொடுப்பாளே கொஞ்சி!!

இப்படித்தான் இனிக்கும் இளமை!
ஏமாற்றத்தில் தவிக்கும் முதுமை!
அவளருகில் இருந்தால் இனிமை!
அவளென்றும் அழகுப் பதுமை!!

வெப்பத்தைக் கொடுப்பது சூரியக்கதிர்! - நமக்கு
ஏப்பத்தைக் கொடுப்பது நெற்கதிர்!
காந்தத்தின் துருவங்கள் எதிரெதிர்!
காளையவன் பருவங்கள் புரியாத புதிர்!!

மழைபெய்தால் பிழைக்கும் பயிர்! - மழை
பிழைசெய்தால் பதைபதைக்கும் உயிர்!!

சிறுநடை போட்டு அறுவடை செய்தும்
சிறுவடைக்குப் பெருநடை!!

ஏர்போய் எந்திரம் வந்தாலும்
ஏழையவன் ஏடு மாறவில்லையே!
காளையவன் பாடு மாறவில்லையே!!

ஏற்றம் பிடித்த கைகளுக்கு
ஏற்றம் வரவில்லையே!
அவன் வாழ்வில்
மாற்றம் வரவில்லையே!!

இது ஒரு கண்ணீர்க்கதை!
ஏழையவன் செந்நீர் சிந்திய கதை!
காளையவன் கண்ணீர் சிந்திய கதை!!

இன்று
இது ஒரு கண்ணீர்க்கதை!
நாளை
நறுமணம் வீசும்
பன்னீர்க் கதையாய் மாறும்!
இது திண்ணம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 30-06-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) – 03-07-2012

என் பெயர்!

என் தாய்வயிற்றில் பிறந்தேன்!
தடுமாறித் தவழ்ந்தேன்!
நிலைபிடித்து நின்றேன்! - என்
நினைவின்றி நடக்கிறேன்!!

என் அம்மா
தங்கமென்று
கொஞ்சினாள் என்னை!
தகரமாய்த்தான் இருக்கிறேன்!!

செல்லமென்று
கொஞ்சினாள் என்னை!
செல்லாக் காசாய்த்தான்
இருக்கிறேன்!

அனைவரிடமும்
அன்புடன் வாழச்சொன்னாள்!
நான்
வமபுடன்தான் வாழ்கிறேன்!!

என் வாழ்க்கைமுறையை
மாற்றச் சொன்னாள்!
வாழ்க்கை எனை
ஏமாற்றித்தான் கொண்டிருக்கிறது!!

இன்று எனை ஏசும் வையம்
நாளை என்பெயர் பேசும்!!

எது காதல்?

யாசித்துப் பெறுவதா காதல்? - நீ
யோசித்துப் பெறுவதுதானே காதல்!!
நிந்திக்கத் தூண்டுவதா காதல்? - உன்னை
சிந்திக்கத் தூண்டுவதுதானே காதல்!!
முகஅழகால் வருவதா காதல்? - உன்
அகஅழகால் வருவதுதானே காதல்!!
உறையவைப்பதா காதல்? - உயிரை
உருகவைப்பதுதானே காதல்!!
சோதித்துப் பார்க்கவா காதல்? - உனை
சாதிக்கத் தூண்டுவதுதானே காதல்!!
அமிலத்தைக் கொடுப்பதா காதல்? - உனக்கு
அமுதத்தைக் கொடுப்பதுதானே காதல்!!
மதம்பார்த்து வருவதா காதல்? - உன்
மனம்பார்த்து வருவதுதானே காதல்!!
வசதியைக் கொடுப்பதா காதல்? - உனக்கு
வரமாய்க் கிடைப்பதுதானே காதல்!!
கண்ணீரைக் கொடுப்பதா காதல்? - தாகத்திற்கு
தண்ணீரைக் கொடுப்பதுதானே காதல்!!
குருதியைக் கெடுப்பதா காதல்? - மன
உறுதியைக் கொடுப்பதுதானே காதல்!!
உன்நிலை மறக்கச் செய்வதா காதல்? - உனை
முன்னிலை பெறச் செய்வதுதானே காதல்!!