Tuesday, May 25, 2010

ஏமாற்ற மாட்டாள்!

நான் நாத்திகனாக இருந்த காலகட்டமது. 2005 ஆகஸ்டு மாதம் நடந்த நிகழ்ச்சி இது. அவள் கோயிலுக்குள் நுழைவதைப் பார்த்தேன். கோயிலுக்குள் செல்வதையே வெறுத்த நான் அவள் நுழைந்தவுடன் நானும் நுழைந்து விட்டேன். அங்கிருந்த கண்ணாடியில் நான் என்னைப் பார்த்தேன். எனக்குப் பின்னே நின்றிருந்த அவள் தெரிந்தாள். அவள் தன் நெற்றியில் குங்குமத்தை எடுத்து பூசிக் கொண்டிருந்தாள். அப்போது தோன்றிய கவிதை இது.

முறம்கொண்டு
காட்டுப்புலியை விரட்டியவள்
என்குலத்துப் பெண்! - புதுக்
கரம்கொண்டு என்னுள்
காதலைப் புகுத்தியவள்
நீதான்!!

என்
அகரத்தில் என்றும் அம்மா!
சிகரத்தில் என்றும் நீதான்!!

பணம் பத்தும் செய்யுமாம்! - உன்
மனம் சொத்தாகிவிட்டது எனக்கு!!

இருவிழி வழி புகுந்து
இதய வலியைக் கொடுத்துவிட்டாய்
நீ!

கண்ணாடியில்
உன் வதனம் பார்த்து
வணங்கினேன்!
என்
உள்ளத்தைக் கடந்த
உருவமுள்ள கடவுள்
நீதான்!!

கடவுளாய்
சிலையை வணங்கும்
சிரிப்பூட்டும் உலகில்
சிலையாய்...
சிரிப்பவளை வணங்கும்
சிந்தனை உலகில்
நான்!

இப்படித்தான் மாற்றினாய் நீ!
இதயத்தை இடம் மாற்றினாய் நீ!
இருவிழியால் தேற்றினாய் நீ!
என்றும் ஏமாற்ற மாட்டாய் நீ!!

No comments: