Tuesday, May 25, 2010

கண்ணீர்க் கதை!

2005 ம் ஆண்டு அக்டோபர் மாதம் என்றே எனக்கு நினைவு. அழகப்பா பல்கலைக் கழகத்தில் நான் என்னுடைய முதுநிலை கணினிப் பயன்பாட்டியல் (M.C.A) படிப்பின் போது எனக்கிருந்த 'கிராம மேம்பாட்டுத் திட்டம்' என்ற பாடத்தின் அடிப்படையில் என்னுடைய வகுப்பில் இருந்த அனைவரோடும் சேர்ந்து காரைக்குடிக்கு அருகில் உள்ள (காரைக்குடியிலிருந்து தேவகோட்டை செல்லும் வழி) அமராவதிப் புதூர் என்ற கிராமத்திற்கு சென்று சில நாட்கள் தங்கினோம்.

கடைசி நாளில் பல்கலைக் கழகத்தின் சார்பில் அந்தக் கிராமத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த மேடையில் மேடையேறி நான் வாசித்த கவிதை 'கண்ணீர்க்கதை'. நிகச்சி நிறைவுபெற்றவுடன் அப்போதைய ஊராட்சிமன்றத் தலைவர் திரு. கருப்பையா அவர்கள் அனைவரையும் பாராட்டினார்.

அதன்பிறகு சில மாதங்கள் கழித்த பிறகு திரு. கருப்பையா அவர்களை எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது. தினத்தந்தியில் வெளிவந்திருந்த என்னுடைய கவிதையை தான் படித்ததாகவும் 'கவிதை நன்று' என்ற பொருளில் அப்போது அவர் என்னைப் பாராட்டியது என் நினைவில் இப்போதும் இருக்கிறது.


இது ஒரு கண்ணீர்க்கதை!
ஏழையவன் செந்நீர் சிந்திய கதை!
காளையவன் கண்ணீர் சிந்திய கதை!!

கதிரவன் கதிர்பரப்பினான்!
காளையவன் கண்விழித்தான்!
காளைகளுடன்
கலப்பையும் சுமந்து சென்றான்
கழனிக்கு!!

பதைபதைத்து விதைவிதைத்துக்
கதைசொல்லிக் களைபறித்துக்
கண்ணீர்சிந்தித் தண்ணீர்பாய்ச்சுவான்
காளையவன்!

அவன்
களைப்பு ஆற...
களைப்பில் வந்த
இளைப்பு ஆற...
களிப்பில் திளைப்பான்!
கொண்டவளை நினைப்பான்!!

வயலுக்கு வருவாளே வஞ்சி!
பசிக்குத் தருவாளே கஞ்சி!
காளையவன் கேட்பானே கெஞ்சி!
கேட்டதைக் கொடுப்பாளே கொஞ்சி!!

இப்படித்தான் இனிக்கும் இளமை!
ஏமாற்றத்தில் தவிக்கும் முதுமை!
அவளருகில் இருந்தால் இனிமை!
அவளென்றும் அழகுப் பதுமை!!

வெப்பத்தைக் கொடுப்பது சூரியக்கதிர்! - நமக்கு
ஏப்பத்தைக் கொடுப்பது நெற்கதிர்!
காந்தத்தின் துருவங்கள் எதிரெதிர்!
காளையவன் பருவங்கள் புரியாத புதிர்!!

மழைபெய்தால் பிழைக்கும் பயிர்! - மழை
பிழைசெய்தால் பதைபதைக்கும் உயிர்!!

சிறுநடை போட்டு அறுவடை செய்தும்
சிறுவடைக்குப் பெருநடை!!

ஏர்போய் எந்திரம் வந்தாலும்
ஏழையவன் ஏடு மாறவில்லையே!
காளையவன் பாடு மாறவில்லையே!!

ஏற்றம் பிடித்த கைகளுக்கு
ஏற்றம் வரவில்லையே!
அவன் வாழ்வில்
மாற்றம் வரவில்லையே!!

இது ஒரு கண்ணீர்க்கதை!
ஏழையவன் செந்நீர் சிந்திய கதை!
காளையவன் கண்ணீர் சிந்திய கதை!!

இன்று
இது ஒரு கண்ணீர்க்கதை!
நாளை
நறுமணம் வீசும்
பன்னீர்க் கதையாய் மாறும்!
இது திண்ணம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 30-06-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) – 03-07-2012

1 comment:

பவள சங்கரி said...

அன்பின் திரு சுரேஷ்குமார்,

அருமையான கவிதை. வாழ்த்துகள்.

அன்புடன்
பவள சங்கரி