Saturday, June 28, 2014

யாழ்ப்பாணத்து தேவதை


“என்னடா எப்டி டா இருக்க?” என்றபடி அவளிடம் பேச ஆரம்பித்தான் சரவணன்.

“நான் டா இல்ல. டி. நான் ஆண் இல்ல. பெண்.” என்று சிணுங்கியபடி அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் அகிலா.

“எனக்கு தெரியும். தெரிந்துதான் அழைத்தேன். உன்னை செல்லமாக அழைத்தேன்.” என்று தன் மனதில் உள்ளவற்றை அப்படியே ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படுத்தினான்.

தான் வெட்கத்தில் நாணிச் சிவப்பதை குறிப்பால் அவனுக்கு உணர்த்தினாள்.

சரவணன் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கணினி மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிபவன். அவன் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி. அகிலா இளங்கலை தமிழிலக்கியம் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய சொந்த ஊர் யாழ்ப்பாணத்தில் உள்ள பூநகரி.

சரவணன் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுடையவன். தமிழில், ஆங்கிலத்தில் கவிதைகள், கட்டுரைகள் எழுதக் கூடியவன். இணையத்தில், குறிப்பாக முகநூலில் தான் எழுதும் கவிதைகளை பதிவு செய்பவன். அந்த தருணங்களில் அவன் அதிகமாக தன்னுடைய கவிதைகளை முகநூலில் பதிவு செய்த காலம், ஒரு பெண் தொடர்ந்து அவனுடைய கவிதைகளுக்கு விருப்பம் தெரிவித்துக் கொண்டே வந்தாள். சில வாரங்களில் சரவணனின் கணக்கின் நண்பர்கள் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து வேண்டுகோள் விடுத்திருந்தாள். அவள் பெயர் அகிலா.

இப்படி முகநூலில் தான் சரவணனும் அகிலாவும் பேசி, பழகிக் கொண்டிருந்தனர். பேசியதும் பழகியதும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதும் இருவர் மனங்களையும் மெல்ல மெல்ல இணைய வைத்தன. நெருக்கமான நண்பர்களாக மாறினார்கள். அவளுக்காக இவனும் இவனுக்காக அவளும் முகநூலிலேயே தவம் கிடக்க ஆரம்பித்தனர்.

ஒருநாள் அவன் வழக்கத்திற்கு மாறாக தாமதமாக வந்தான். கோபப்பட்டு பேசாமல் போனாள் அவள். இருவருக்கும் ஊடல் ஆரம்பமானது. இவன் அவளை திட்டுவது அவள் இவனை திட்டுவதுமாக மெல்ல மெல்ல அவர்களுக்கிடையே இருந்த நட்பு காதலாக மாறி அந்த காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.

அவன் தன் காதலை அவளிடம் எப்போது சொல்லலாம் என்று சரியான தருணத்திற்காக காத்திருந்தான். அதற்குமுன் அவளும் தன்னை காதலிக்கிறாளா என்று தெரிந்துகொள்ள ஓரிரு சோதனைகள் செய்து அவற்றின்மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தான். அதன்படி “நீ என்னிடம் பேசவில்லை. ஏன் பேசவில்லை? நீ இனிமேல் என்னிடம் பேசாதே. என் முகநூல் கணக்கிலிருந்து உன்னை நீக்கிவிட்டேன்.” என்றபடி ஒரு செய்தி அனுப்பிவிட்டு அவளை தன்னுடைய முகநூல் கணக்கிலிருந்து நீக்கினான்.

சரவணன் அனுப்பிய செய்தியை படித்துவிட்டு “டேய் லூசா நீ? ஏன் என்னை உன் கணக்கிலிருந்து நீக்கினாய்? எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருந்துச்சுடா. அதான், பேச முடியல. மறுபடியும் இப்படி செய்யாதே. எனக்கு பிடிக்காது. என்னை பழையபடி உன் முகநூலில் சேர்த்துக்கொள். உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் டா.” என்று விளக்கினாள்.

சரவணனும் புரிந்துகொண்டான் அவளுக்கும் தன்மேல் காதல் இருக்கிறதென்று. இதனை அவன் உணர்ந்த அந்த சுகமான தருணத்தில் தான் எழுதிய ஒரு சந்தப்பாவகை கவிதையை அவளுக்கு அனுப்பி வைத்தான்.
அகிலா அதனை படித்துவிட்டு

கார்மேகக் கூந்தலோடு வார்த்தமுகப் பொலிவோடு
சேர்த்தெடுத்த அகிலாக மங்கை – அவளை
பார்த்தவுடன் என்னுள்ளே வார்த்தைவழிக் கவிதையாக
பூத்துவிட்டாள் எழிலான மங்கை

என்பதில் “அகிலாக மங்கை” என்பதன் பொருள் என்ன? வெனக் கேட்டாள்.

“அடிப்பாவி. இதுகூட தெரியாமல் தான் இளங்கலை தமிழிலக்கியம் படிக்கிறாயா?” என்று கேட்டான்.

“உன் அளவிற்கெல்லாம் எனக்கு தெரியாது டா. சொல்லு.” என்றாள்.

“அகில் என்றால் சந்தனம். அகிலாக மங்கை என்றால் சந்தனத்தை போன்ற குளிர்ச்சி பொருந்தியவள் என்று பொருள். உன்னை நினைத்து எழுதிய கவிதைதான்.” என்று தன் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்துகொண்டான்.

அவன் சொன்னவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டே தன் காதலை எண்ணி உளப்பூரிப்படைந்தாள். இந்த தாங்கமுடியாத மன மகிழ்வில் தன் மனங்கவர்ந்த கள்வனான அவனை பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டாள்.

“என் புகைப்படத்தை அனுப்பியிருக்கிறேன். உன் புகைப்படத்தையும் நீ அனுப்பு டா.” என்று சொன்னாள்.

தன்னுடைய புகைப்படத்தை அவளுக்கு அனுப்பி வைத்துவிட்டு “நான் அழகா இருக்கேனா டா?” என்றான்.

“இல்ல” என்று சொல்ல்விட்டு தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.

“பின்ன, நான் அழகா இல்லையா?” கேட்டான்.

“அப்படியெல்லாம் இல்ல.” என்று சொல்லிவிட்டு குதூகலமடைந்தாள். அவன் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருந்தாள்.

“போ. நான் அழுறேன். நான் அழகா இல்லை ன்னு நீ சொல்லிட்ட.” என்றான்.

பதட்டமடைந்தவளாய் “என்ன ஆச்சுடா பாப்பா? ஏன் அழறே? நீ அழகா இல்லை ன்னு நான் எப்போ சொன்னேன். நான் உன்னை காதலிக்கிறேன் டா.” அழுதாள்.

தன்னுடைய காதலை அவனை நேரில் சந்தித்து வெளிப்படுத்த வேண்டுமென்று நினைத்திருந்தாள். ஆனால், இப்படி அழுதபடி தன்னுடைய காதலை அவனிடம் வெளிப்படுத்தும் வகையில் சூழல் அமையுமென அவள் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.

மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியவளாய், “இன்னும் என்மேல் கோபமா டா?” என்றாள்.

“அதெல்லாம் இல்ல ப்பா. எனக்கும் உன்மேல் காதல் உண்டு.” என்று சொல்லிவிட்டான்.

தன் மனதில் உள்ள சோகமெல்லாம் கணப்பொழுதில் மறைந்ததை உணர்ந்தாள்.

“என் புகைப்படத்தை நீ பார்த்தாயா? நான் அழகா இருக்கேனா?”

“பார்த்தேன்.”

“நான் அழகா இருக்கேனா?”

“இதற்காகத்தானே காத்திருந்தேன். என்னையே நீ பகடி செய்கிறாயா? அழ வைக்கிறாயா? இப்போது பார். உன்னை அழ வைக்கிறேன். உன்னிடம் விளையாடப் போகிறேன்.” என்றபடி “இப்படியெல்லாம் சிரிக்காதே ப்பா. யாராவது மோகினிப் பிசாசென்றே நினைத்து பயந்துவிடப் போகிறார்கள். ஹி ஹி ஹி” என்று அவளை கோபமூட்டினான்.

அவள் உடனே சட்டென்று “உன்னை எனக்கு பிடிக்கவில்லை.” என்றபடி போய்விட்டாள்.

பல நாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள் என இரண்டாண்டுகள் ஓடிப்போயின. அவள் நினைவிலேயே வாழ்ந்த சரவணன் அவளுக்கு ஒரு கவிதையெழுதி அனுப்பி வைத்தான்.

"இப்படி நீ
சிரிக்காதே.
ஐயோ...
மோகினிப்பிசாசென்றே
யாரேனும் பயந்துபோய்
மயங்கி விழுந்துவிடுவார்கள்"
என்றேன்.

"எனக்குன்னை பிடிக்கவில்லை"
என்றபடி
முகத்தை ஒரு வெட்டுவெட்டி
முறைத்தபடியே தூரம்போனாய்.

போடீ போ...
இப்படி கதைத்துக் களிக்க
உன்னைவிட்டால் எனக்கு
வேறு யாருண்டு இவ்வுலகில்...

ஆனால், அகிலாவின் வாழ்க்கை அந்த இரண்டாண்டுகளில் திசைமாறிப் போனதை அவள் வேறு யாருக்கும் சரவணக்கும் கூட சொல்லவில்லை. அவளும் அவன் அனுப்பிய கவிதையை படிக்கத் தவறவில்லை.

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக புலம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களில் அகிலாவும் ஒருத்தி. யாழ்ப்பாணம், அதனைச் சுற்றிய பகுதிகள், ஆனையிறவு, முல்லைத்தீவு, வன்னி, அதனைச் சுற்றிய காடுகள் என போரின் தாக்கத்தில் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள சரவணனை மனதில் சுமந்தபடி புலம்பெயர்ந்து கடந்த இரண்டாண்டுகளாய் தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்கிறாள்.

சரவணன் அனுப்பிய கவிதையை படித்தவுடன் தன்னுடைய சோகம் மறந்து அவனும் தன்னை நினைவில் வைத்திருப்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள். பேசலாம் என்று முடிவெடுத்தாள். ஆனால், “என்னை அன்று பகடி செய்து அழ வைத்தாயே டா. உன்னிடம் கொஞ்ச நாளைக்கு பேச மாட்டேன். நீ என்ன செய்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்” என்று தனக்குள்ளேயே அவனை செல்லமாக திட்டினாள்.

இங்கு சரவணன் அவளின் நிலை அறியாதவனாய் நியூசிலாந்தில் வாழும் தன் அண்ணன் வெங்கடேஷ்வரனிடம் தொடர்பு கொண்டு அவள் குறித்து எல்லாவற்றையும் சொல்லி அவள் எங்கிருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்? என்ற விவரங்களை சேகரித்து தருமாறு வேண்டினான்.

அண்ணன் வெங்கடேஷ்வரனும் தனக்கு மிகவும் நெருக்கமான தன் உறவினர்களிடம் “நட்புறவுகள் யாரேனும் யாழ்ப்பாணம் அருகில் இருப்பின் செல்ல இருப்பின் அந்தப் பெண் பற்றி விசாரிக்க இருப்பின் உடனே விசாரியுங்கள். ஒரு சமுதாய அக்கறை உள்ள இளைஞன், எழுத்து மேலும் தமிழின் மேலும் மொத்தத்தில் இன அக்கறையும் மண் சார்ந்தப் பற்றுதலும் உள்ள ஒரு கவிஞன் உடைந்துவிடக் கூடாது என்று எதிர்ப்பார்க்கிறேன்.” என்று தன்னுடைய தம்பியை பற்றியும் அகிலாவை பற்றியும் சொல்லி உதவி கேட்டான்.

சரவணனும் அகிலா தன்னிடம் பேசுவாள் என்றே காத்திருந்து காத்திருந்து கவலைப்படத் துவங்கினான். தன் அண்ணன் வெங்கடேஷ்வரனிடம் அகிலாவின் முகநூல் முகவரியை கொடுத்து “அவளிடம் நீ பேசிபார் அண்ணா. அவள் என்மீது கோபமாக இருக்கிறாள் போல. அதனால் தான் என்னிடம் பேசவில்லை. உன்னிடம் நிச்சயம் அவள் பேசுவாள்.” என்று சொன்னதன் பேரில் வெங்கடேஷ்வரனும் அகிலாவிடம் “என்னடா எப்டி டா இருக்க?” என்று ஆரம்பித்திருக்கிறான்.

அகிலாவும் “என்னடா சரவணன் நம்மிடம் முதன்முதலில் கேட்டது போலவே இவரும் நம்மிடம் கேட்கிறாரே” என்றபடி “நான் ஆண் இல்லை. பெண்.” என்று சரவணனிடம் சொன்ன அதே வார்த்தைகளை சொன்னாள்.

வெங்கடேஷ்வரன் அவளிடம் நடந்த எல்லாவற்றையும் விளக்கி “சரவணன் என் தம்பி தான். அவனை நீ உண்மையாகவே நேசிக்கிறாயா? அவன் உன்னை நினைத்து மிகவும் கவலையாக உள்ளான்.” என்று கேட்டான்.

அகிலாவும் “சரவணன் என்னை மறக்க மாட்டான் என எனக்கு தெரியும். அவனை என் கணவனாக நான் அன்றே தேர்வு செய்தது தவறில்லை என நான் உணர்கிறேன். நான் அவன் மனதை மிகவும் காயப்படுத்தி விட்டேன். அவனிடம் சொல்லுங்கள். அடுத்த வாரம் அவனை சந்திப்பதற்காக நான் ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வருவேன். அங்கு வந்தபின் அவன் முகம் பார்த்து அவனிடம் என் காதலை சொல்லுவேன். என்னை அவன் ஏற்கனவே பகடி செய்து என்னை அழ வைத்தான். அதற்கான தண்டனையாக நான் சென்னைக்கு வரும்வரை அவனிடம் பேச மாட்டேன்.” என்று பகிர்ந்து கொண்டாள்.

உண்மையை தன் அண்ணன் மூலம் தெரிந்துகொண்ட சரவணன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

கிண்டி தாண்டி மீனம்பாக்கம் விமானநிலையம் செல்ல மின்சார இரயிலில் இன்று சரவணன் குதூகலமாய் கற்பனையில் மிதந்தபடி சென்றுகொண்டிருக்கிறான்.

அவளை ஆரத்தழுவியபடி ஆனந்தக் கண்ணீரில் மிதந்துகொண்டிருந்தான்.

சரவணனின் மனநிலை உணர்ந்ததுபோல் அந்த மின்சார இரயிலில் அவன் அருகில் நின்று கொண்டிருந்தவரின் அலைபேசி ஒலித்தது.

யாழ்ப்பாண பொண்ணு
யாழ் மீட்டும் கண்ணு

என்ற திரைப்படப் பாடலை...

Friday, June 27, 2014

மழையுதிர்காலம்

தலைமுடி உதிர்வதுபோல்
இலைகளை உதிர்த்துவிட்டு
மொட்டையாய் நின்ற மரம்
துளிர்த்துச் சிரிக்கிறது
மழைவரவால்...

குடையில்லா மனிதர்கள்
தொப்பலாய் நனைந்தபடி
ஓடுகின்றனர்
நிற்க இடந்தேடி...

வெயிலிலும் ஏழைகளுக்குக்
குடைகளாய்
மழையிலும் ஏழைகளுக்குக்
குடைகளாய்
மரங்கள்

பிரிவுத்துயர் தாங்காமல்
கண்களில் மழைவரும்போது
குளிர்காற்றால் கன்னம்வருடி
கைகுலுக்கிவிட்டுப் போகிறது
குளிர்தென்றல்

ஊரில் பலவருடங்களாய்
நின்ற பஞ்சாயத்து ஆலமரம்
ஏதோவொரு காரணத்தால்
தலையில்லா முண்டமாக்கப்பட
அதன் நம்பிக்கைக்குப் பரிசாய்
பெய்த மழையில்
பட்டமரம்
துளிர்த்துச்சிரிக்கிறது

ஒட்டிய வயிறுடன்
வானம்பார்த்து விதைத்த
விவசாயியின்
வயிற்றில் பால்வார்த்து
தலைகவிழ்த்துப்
பூமியைப் பார்த்து
ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறது
அந்த வானம்!!

இதழ்களில் தேன்வைத்து
வண்டுகளின் வரவுக்காக
காத்திருக்கின்றன
பூக்கள்

உடலெங்கும்
மழைத்துளி முத்துகளை
அணிந்தபடி
மணக்கோலம் பூண்டு நிற்கின்றன
மரங்கள்

சோகத்தின்சின்னமான
இலையுதிர்காலத்தை மாற்றி
துவங்கிவிட்டது
மழையுதிர்காலம்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1.  மகாகவி - 01-10-2012

தமிழர் எழுச்சி மாத இதழ்கள் தற்போது மின்னூல்களாக... (E Books)



தமிழர் எழுச்சி மாத இதழ்கள் தற்போது மின்னூல்களாகவும் (E Books) வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

தமிழர் எழுச்சி ஜூன் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_2960.html

தமிழர் எழுச்சி மே ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_4170.html

தமிழர் எழுச்சி ஏப்ரல் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_1222.html

தமிழர் எழுச்சி மார்ச் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_27.html

தமிழர் எழுச்சி பிப்ரவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_26.html

தமிழர் எழுச்சி ஜனவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_708.html

தமிழர் எழுச்சி டிசம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_25.html

தமிழர் எழுச்சி நவம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014.html

தமிழர் எழுச்சி மாத இதழுக்கான இணையதளம் - http://thamizharezhuchchi.blogspot.in/

Monday, June 16, 2014

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

நன்றி: முகநூல் (Facebook)





இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.

நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.

‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன" என்று ஆரம்பித்தார் அவர்.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கொடுமணலில் சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரை போன்றவை கிடைத்தன. தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.

அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.

அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிஷ் கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம். அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன என்றவர், அடுத்ததாக...

‘‘தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை ‘தமிழகத்தின் ஹரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது. கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன.

அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குஜராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார். அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். ‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார். தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம்.