Friday, June 18, 2010

நம்பிக்கை!

(2005 ம் ஆண்டு அவள் ஒரு தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாள். அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக நான் அவளுக்கு எழுதிய கவிதை.)

யாமிருக்க பயமேன்? - தமிழர்கள்
நாமிருக்க பயமேன்!!

அழுதகதை போதும்!
எழுந்துவா தோழி!!

மூடர்களின் வெட்டிக்கதைபேச்சு! - துணிந்து
முடிவெடுத்தால் வெறுங்கதையாய்ப் போச்சு!!

விழுந்தால் எழுந்திருப்பாய்! - நம்பிக்கை
விழுதிருந்தால் அழமாட்டாய்! - முயன்று
எழுந்தாலோ மீண்டும் விழமாட்டாய்!!

தினம்தினம் நம்பிக்கை நீண்டால்...
உன் உழைப்பைநம்பி கைநீண்டால்...
உள்ளத்தில் உத்வேகம்
வெள்ளமென உருவாகும்!!

விஜயனுக்கு வில் ஒரு ஆயுதம்! - என்
இளையவளுக்கு புல்லும் ஒரு ஆயுதம்!!

வான்மதி தேய்வதும்
விண்ணொளி கொடுக்கத்தான்!
தோற்றதை ஏற்றமெனக் கருது! - புது
வெற்றியை காலமாற்றமென கருது!!

குனிந்தால் தலையில் குட்டும் உலகம்! - நாம்
துணிந்தால் வழிகாட்டி விலகும்!
நிமிர்ந்தால் நிலைப்படி தலைதட்டும்! - அடக்கமாய்
அமர்ந்தால் நம்புகழ் வான்வரை எட்டும்!!

மனசாட்சிதான் நம் கடவுள்! - இதை
மறவாமல் நினைவில்கொள்!!

யாமிருக்க பயமேன்? - தமிழர்கள்
நாமிருக்க பயமேன்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. அழகப்பா பல்கலைக்கழக அளவில் மூன்றாம் பரிசு – 24-02-2006

2. புதிய சிற்பி – 01-03-2006

Thursday, June 17, 2010

வெற்றிப்பாதை!

2005 ம் ஆண்டு அவள் ஒரு தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாள். அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக நான் அவளுக்கு எழுதிய கவிதை.


சிரிக்கப் பிறந்தவளே! - வெற்றியைப்
பறிக்கப் பிறந்தவளே!!

தோல்வியால் துவள்வதை மறந்தால்
மேற்கெங்கும் மறந்து
உதயமாகும் புதிய கிழக்கு! - இனிஉன்
வெட்கப் போர்வையை விலக்கு! - என்றும்
வெற்றி ஒன்றே உன் இலக்கு!!

துன்பம் தொற்றிக்கொண்டால்
தோழியிடம் சொல்லியழுதுவிடு!
நாளடைவில் துள்ளியெழுந்துவிடு!!

தோல்வியால் துவள்வது இயல்பு! - முயற்சி
வேள்வியால் வெல்வது சிறப்பு!!

தாய்தந்தையை தொழுதுவிட்டு
தலைநிமிர்ந்து தமிழ்மண்ணில் நில்!
வாழ்வியல் நடைமுறைகளை
தெரிந்து கொள்! - அடைந்த
தோல்விக்கு விடைகண்டு உலகை வெல்!!

உன் இலட்சிய வேர்களை விசாலமாக்கு!
விழுதுகளும் விருச்சமாகும்!

விண்மீன்களிடம் விடியலை...
மின்மினியிடம் ஒளியை...
கேசம் கலைக்கும் தென்றலை...
தேகம் சிலிர்க்க திருடிக்கொள்!

நடந்தவையெல்லாம்
கனவாய்ப் போகட்டும்! - இனி
நடப்பவையெல்லாம்
நல்லவை ஆகட்டும்!!

வெல்லப்போவது தமிழகம்! - ஆருடம்
சொல்லிப்பாடுது என் அகம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. அழகப்பா பல்கலைக்கழக அளவில் மூன்றாம் பரிசு – 24-02-2006

2. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 27-08-2007

தைமகளே வா!

2006 ம் ஆண்டு எழுதிய கவிதை இது. ஒரு இளைஞன் தன் உறவுகள் அனைத்தையும் இழந்துவிடுகிறான். அவன் தன் சொந்தங்களோடு வாழ்ந்தபோது நல்ல பணவசதியுடன் இருந்தபோது அனைவருக்கும் உதவினான். இப்போது அவன் ஏழையாகவும் அனாதையாகவும் ஆகியிருக்கிறான். அவன் பிழைக்க வழி தேடுகிறான். அன்று பொங்கல் வருகிறது. இது ஒரு கற்பனை கவிதை. இதற்கான கவிதை இதுதான்.



வறுமைக்கனவுகளில் தூங்கியவன்
வெறுமை நினைவுகளில் ஏங்கினான்!
விடியலைக்கண்டு!!

இடக்கை அறியாமல்
கொடுத்தது வலக்கை!
கொட்டிக்கொடுத்ததால்
அன்று சிவந்தது
இவன் கை!
வறுமையால் விரிக்கமுடியவில்லையே
இன்றிவன் சிறகை!!
விண்ணொளி கொடுத்தது
புதுநம்பிக்கை!
விடியலை நம்பியே இருந்தது
இவனிரு கை!

பகலவன் ஒளிகொடுத்தான்!
இளையவன் முடிவெடுத்தான்!!

வேதனையை சுமந்துகொண்டு
சாதனைக்காய் புறப்பட்டான்!
மெதுவாய்க் கடந்தான் மனவெளியை!
புதிதாய்ப் பார்த்தான் புல்வெளியை!
அமிழ்தாய் இரசித்தான் பனித்துளியை!!

சாலையில் ஓடினான்!
வேலையைத் தேடினான்!
பசியால் வாடினான்!!

உற்றுப்பார்த்தான்!
சற்றே திரும்பினான்!
திரும்பிய திசையெங்கும்
கரும்பு! - மனம்
விரும்பும் மணம்வீசும்
மஞ்சள்!!
பார்க்குமிடமெங்கும்
பனைக்கிழங்கு!

எங்கெங்கும்
மக்கள் கூட்டம்!
வீதிகளெங்கும்
தமிழர்கள் நடமாட்டம்!

ஏழைகளின் அகமெங்கும் குளிர்ச்சி!
இளையவன் முகமெங்கும் மகிழ்ச்சி!!

'என்ன காரணம்?'
என்று கேட்டான்!
சென்றவன் சொன்னான்
'இன்றுதான் பொங்கல்!
தமிழன் உள்ளமெங்கும்
தங்கும் பொங்கல்!!'

உடலெங்கும் புத்துணர்ச்சி! - இளையவன்
உள்ளமெங்கும் புதுஎழுச்சி!!

கோடியில் புரண்டவனை
கோடியில் புரளவைத்தது காலம்!
கொட்டிக் கொடுத்தவனை
எட்டி உதைத்தது காலம்!!

இளையவனுக்கு
கைகொடுத்து கரைசேர்க்க
தைமகள் வந்துவிட்டாள்! - நம்
தமிழ்மகள் வந்துவிட்டாள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 23-12-2011
2. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 31-12-2011

வாழ்கிறேன்!

நீ நடந்தால்
உன் நிழலாய்
நானிருக்கிறேன்!

நீ சுவாசித்தால்
உன் மூச்சுக்காற்றில்
நான் கலந்திருக்கிறேன்!

நீ புன்னகைத்தால்தான்
என் ஆயுட்காலம் நீள்வதாய்
நான் உணர்கிறேன்!

நீ என்னுடன் பேசினாலோ
காற்றில் மிதப்பதாக
கனவுகள் பலகாண்கிறேன்!

நீ கேட்ட கேள்விகளுக்கு
பதில்கள் சொல்ல வாய்திறந்தால்
தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்க...
திக்கித் தடுமாறுகிறேன்!

நீ
என் உயிராகவே இருப்பதால்
நான் இன்னும்
இம்மண்ணில் உயிர்வாழ்கிறேன்!!

காதல் ஓவியம்!

என் காதலை
சொல்லித்தான் பார்த்தேன்! - உன்னை
பார்த்தேதான் சொன்னேன்!!

நகைத்துவிட்டாய்! - முகம்
புதைத்துக்கொண்டாய்!!

பள்ளிக்குழந்தைபோல்
எள்ளி நகையாடினாய்!

மெல்லச்சிரித்த கள்ளியாய்
தள்ளித்தான் போனாய்!

எதையெதையோ நினைத்தாய்! - எனை
அள்ளிவந்து அணைத்தாய்!!

இதுதான் என் காதல் ஓவியம்!
நிஜமாகுமா என் காதல் காவியம்?

நீ பேசினாய்!

நீ என்னிடம்
'பள்ளத்தில் விழுந்துவிட்டாயா?
இல்லை என்
உள்ளத்தில் விழுந்துவிட்டாயா?'
என்றாய்!

'இரண்டில்
எதில் விழுந்திருந்தாலும்
எழுந்திருப்பது கடினம்'
என்றேன்!!

Wednesday, June 16, 2010

சுனாமியின் நினைவால்...

ஆழிநீர் பொங்கியதால்
விழிநீர் தேங்கியதோ...!
வழிகாட்ட வருகிறான்! - புது
ஒளியேற்ற வருகிறான்
எம்மிளைஞன்!
சீற்றம் ஓய்ந்தாலும் - சுனாமியின்
தாக்கம் ஓயவில்லை!
துன்பம் வேண்டாம்
தமிழ்ச்சிங்கங்களே!
கவலை வேண்டாம்
கடலோரக் கவிதைகளே!!
நம்பிக்கைப்படகிலே
வியர்வைத்துடுப்பெடுத்து
முயற்சிவலை வீசி - சுனாமியின்
நினைவலைகள் தாங்கி - மன
மகிழ்ச்சிமீன்களை பிடித்து
தைமகளை வரவேற்போம்! - வருந்
தைமகளை வரவேற்போம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 26-12-2005

2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

3. வார்ப்பு (இணைய இதழ்) – 26-12-2011

நம்நினைவில் சுனாமி!

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!
கரைமீறும் கண்ணீர்தான் ஏழையின் பாடு!
ஆழிக்குள் பூகம்பத்தின் நினைவோடு
நம்நினைவில் நம்பிக்கைகீதம்பாடு!
நினைத்துப் பார்த்தால் சோகம்! - சுனாமியை
நினைக்கமறந்தால் பாவம்!!
கண்ணீர்வழி உருகியது தேகம்!
சுனாமியால் பழியான உயிர்கள் போதும்!
கடலையால் இயற்கையின் சீற்றம்!
காலம் கொடுக்குமே புதுப்புது மாற்றம்!!
போதும்கண்ணே நம்மனதில் ஏக்கம்!
விடியும்வரை தாய்மடியில் தூக்கம்!!
இனிமாறிவிடும் தமிழனின் துக்கம்!
துணிந்தால் வெற்றியெல்லாம் நம்பக்கம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 26-12-2005

2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

3. வார்ப்பு (இணைய இதழ்) – 26-12-2011

காதலே சொர்க்கம்!

கண்ணை காப்பது இமை!
உன்னைக் காப்பதென்ன சுமை?
கண்ணில் இல்லை புவிகாந்தம்!
உன்னில் கண்டேன் புதுசொந்தம்!!
உன்னைக்கண்டால் என்வாழ்வே சொர்க்கம்!
உன்னைக் காணாவிடில் அகிலமே அற்பம்!!

உனக்கொரு கடிதம்!

சுவரின்றி இல்லை சித்திரம்! - எனக்கு
நீயின்றி உலகிலில்லை விசித்திரம்!!
விண்ணில் கண்டேன் பலநட்சத்திரம்! - என்
கண்ணில் கண்டேன் ஒரு பெண்சித்திரம்!!
உன்னை பேருந்தில் கண்ட அத்தினம்
உன்நினைவே என்மனதில் நித்தம்நித்தம்!!