Sunday, September 4, 2011

காதல் குழந்தைகள்!

பிரம்மனின் ஆணுருவம்
உன் அப்பா!
பிரம்மனின் பெண்ணுருவம்
உன் அம்மா!!
பேரழகியான
உன்னைப் படைத்ததனால்...

தேநீர் அருந்திவிட்டு
அந்தக் கோப்பையை
கீழே எறிந்துவிடாதே...
என்னிடம் கொடுத்துவிடு!
என் செல்லக் குழந்தையான
உன் இதழ்கள் பட்ட
அந்தக் கோப்பையிலும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
நம்முடைய காதல்!!

உன் முகத்தில் வழியும்
வியர்வைத் துளிகளை
உன் கைக்குட்டையால்
அடிக்கடித் துடிக்கிறாய்!
உன்னைப் போலவே
உன் கைக்குட்டையும்
அழகாகிக் கொண்டே
வருவதைப் பார்...!!

பொதுவாக காதலிக்க
ஆண் பெண் என
இருவர்தான் தேவை!

ஆனால்...
நம் காதலுக்கு மட்டுந்தான்
நீ நான் நாம்காதல்
என மூவர் தேவை!

நீ என்
பார்வைஎல்லைக்குள்
வாழும்போதெல்லாம்
நான்
உன்னை நேசிக்கிறேன்!

நீ என்
பார்வையை விட்டு
மறைந்தபின்
நான்
நம் காதலை நேசிக்கிறேன்!!

நான்
திருமணம் செய்துகொள்ள
இவ்வுலகில்
எத்தனையோ பெண்களில்
ஒருத்தி உண்டு!
நான் காதலிக்க
என்னுள்ளத்தில்
நீ ஒருத்தி மட்டுந்தான்!!

என் தேவதை
உன் நினைவுகளே
உலகமென்று வாழும்
காதல் பக்தன்நான்!!

இவ்வுலகில் நம்மைப்போல்
காதலிப்பவர்கள் அனைவருமே
மேல்ஜாதி மக்கள்!
காதலிக்காதவர்கள் அனைவருமே
கீழ்ஜாதி மக்கள்!!

நாமிருவரும் பேசிச்சிரித்த
பொழுதுகளிலெல்லாம்
நாம்காதல் கருவுற்று
பல குழந்தைகளை
பெற்றெடுத்து விட்டது!

இன்றுநான் தற்செயலாய்
நாம் பேசிச்சிரித்த
இடங்களுக்கெல்லாம்
போக நேர்ந்தபோது
நம் காதலின் குழந்தைகள்
ஒவ்வொருவரும் தனித்தனியே
தவக்கோலத்தில் அமர்ந்திருப்பதைக்
கண்டேன்!

‘குழந்தைகளே...
ஏனிப்படி அமர்ந்திருக்கிறீர்கள்?’
என வாஞ்சையோடு கேட்டேன்!

‘உன்னையும் உன்காதலியையும்
சேர்த்துவைக்க விருப்பப்பட்டாள்
எங்களின் அம்மா!

நீயுன் காதலியை
முதல்முதலில் சந்தித்த
அந்தப் பேருந்துக்குள்
கடுந்தவம் செய்கிறாள்
எங்களின் அம்மாவான
உங்களின் காதல்!

அவளின் விருப்பத்தை
நிறைவேற்ற
நாங்கள் பிறந்த
இதே இடங்களில்
கடவுளை நோக்கி
தவமிருக்கிறோம்’
என்று சொல்லிவிட்டு
மீண்டும் தவத்தைத் துவக்கின
நம் காதலின் குழந்தைகள்!!

உனக்காக...

கண்ணே கனியமுதே கட்டித்தயிரே கரும்புச்சாறே
பொன்னே பூச்சரமே புன்னகையே கண்ணிமையே
பெண்ணே பேரழகே புதுமலரே மதுரசமே
என்னே உன்னழகு இயற்கையே வியக்குதடி!

கண்மையிலே கறுப்பே கனியிதழின் சிவப்பே
பொன்மயிலே பெண்ணழகே பேரழகே தேவதையே
உண்மையிலே நீஓர் உயிருள்ள மெழுகுச்சிலை
என்மயிலே என்னுயிரே என்தாயே பெண்பூவே

அன்பே ஆருயிரே அருமருந்தே திருவிருந்தே
முன்பே நீயிருந்தால் முழுநிலவும் தோற்குமடி
என்பேன் அன்பன்நான் எழுதுகிறேன் அழுதபடி
உண்பேன் ஓர்துளிவிஷம் உனக்காக கண்மணியே!!

கடற்கரை நினைவுகள்!

கடற்கரை மணலில்
நம்மிருவர் கால்த்தடங்கள்!

உன்பெயரை நானும்
என்பெயரை நீயும்
எழுதிய அக்கணமே
நம்மிருவர் மனங்களும்
நமையறியாமல்
காதலை எழுதிவிட்டன!

மணல்வீடு கட்டி
வாசல்வைத்து
கள்ளங்கபடமில்லாமல்
சிறுகுழந்தையென சிரித்தாய்!

அலைவந்து அடித்தவுடன்
சிதைந்ததையெண்ணி
சீற்றங்கொண்டு அழுதாய்!

உன்னை ஆறுதல்படுத்தி
மறுபடியும் மணலால்
மாளிகை கட்டினேன்!

கடற்கரை மணலில்
இப்படித் தொடர்ந்த
நம்காதல் பயணம்
கல்யாணத்தில் முடிந்தது!

இன்பமான வாழ்க்கைதான்!
இரண்டு குழந்தைகள்தான்!!

அன்றும் வழக்கம்போல்
கடற்கரை மணலில்
நம்குடும்பத்தின் குதூகலம்!

குதூகலம் முடிந்ததோடு
சுனாமியின் சீற்றத்தால்
நீமட்டும் சிதைந்துபோனாய்!

இன்று
நீயின்றி நான்மட்டும்
நம்மிரண்டு குழந்தைகளோடு
அதே கடற்கரைமணலில்!

அன்று போலவே
அலையின் சீற்றம்
இன்றும்!

ஐந்தாண்டுகள் ஆனாலும்
என்னுயிரில் உறைந்திருக்கின்றன
கடற்கரை மணலில் உரு(கரு)வான
நம்காதல் நினைவுகள்!!

புத்தாண்டே வருக!

சத்தான புத்தாண்டே! – நித்தமும்
முத்தான புத்தாண்டே!!
வருகவருக நீ! – புத்துணர்வைத்
தருகதருக நீ!!

சித்திரைமாதத்தை முதலாய்க் கொண்டு – உன்
முத்திரைப்பாதத்தை தடம்பதிக்க – தமிழ்ப்
புத்தாண்டே வருகவருக! – நித்தம்
புத்தொளியைத் தருகதருக!!

இருள்விலக்கும் ஒளியாய் – வாழ்வின்
பொருள்விளக்கும் மொழியாய் – தமிழ்ப்
புத்தாண்டே வருகவருக! – நித்தம்
புத்தொளியைத் தருகதருக!!

எத்தனை மொழிகள் வந்தாலும்
பத்தரைமாற்றுத் தங்கம்போல்
மாசுமறுவற்று மங்காப்புகழுடன் – தமிழ்ப்
புத்தாண்டே வருகவருக! – நித்தம்
புத்தொளியைத் தருகதருக!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 01-04-2012

தமிழ்மகளே வா!

சங்கத்தமிழ் மூன்றுபடைத்தும் – தமிழன்
தங்கச்சிமிழால் சீராட்ட – உனைத்
தரணியெல்லாம் பாராட்ட...
நீ நீடூழி வாழ்வாய் தமிழ்மகளே!
பிரபஞ்சத்தில் மாறாது உன்புகழே!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 01-04-2012

துளிப்பா!

உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
புணர்ந்தபின்பு உரு(கரு)வான
எழுத்துப் பிழை!
உடல் ஊனமுற்ற குழந்தை!!

இந்தியா?

உலக வரலாற்றிலேயே
முதல்முறையாய்
வாக்காளர்களுக்கு பணம்கொடுத்து
வாக்களிக்க வைத்த
அரசியல் கட்சிகளைக் கொண்ட
பெருமை மிக்க
பண(ஜன)நாயக நாடு!
உலக வங்கியில்
கோடிக்கணக்கில் கடன்வாங்கிய
பிச்சைக்கார நாடு!!

Saturday, September 3, 2011

கறைபடிந்த தேசம்!

கறைபடிந்த தேசம்! – கட்டுக்
கதையைதானே பேசும்!!
கலையிழந்த தேசம்! – நம்
நிலையென்று மாறும்?

நட்போடு பழகி
கற்போடு வாழ்ந்தாலும்
தப்பாய் நினைக்கும் சமுதாயம்! – இதை
நினைத்தாலே எனுளத்தில் பெரும்காயம்!!

காதலை விட்டுவிட்டு
காமத்தைமட்டும் தொட்டு
பெண்டிர் தேகம்தீண்டும்
ஓரிரு கூட்டம்! – அவர்
நோக்கமெலாம் இளமைக்களியாட்டம்!!

தமிழ்த்திரைகளில்கூட – ஆபத்
பாண்டவர்களைவிட
துகிலுரிக்கும் துரியோதனர்களே அதிகம்!
மனஉறைகளில்கூட – மதங்கொண்ட
யானைகளைவிட
மதங்கொண்ட மனிதர்களே அதிகம்!
மதக்கறைகளை பரப்பிவிட...

பாசத்தாலான அறைகள் காணோம்!
எங்கும் பாசறைகள்தான் வீணாய்!!

ஜாதிக்கொரு சங்கம்தான்!
வீதிக்கொரு கம்பம்தான்!
நீதியைக் காணோம் எங்கும்! – இதை
நினைத்தா லெனுளம் பொங்கும்!!

தீரதமாய்
வீதிகளில் பரவுகிறது தீவிரவாதம்!
பூரதமாய்
என்றுமாறும் நம் புன்னகைதேசம்?

கறைபடிந்த தேசம்! – கட்டுக்
கதையைதானே பேசும்!!
கலையிழந்த தேசம்! – நம்
நிலையென்று மாறும்?

கவிஞானி!

நடையில் பயங்காட்டி – கவிதையில்
தொடைநயம் கூட்டி – பறங்கிப்
படைகள்தனை
தொடைநடுங்க வைத்தவன்!

தமிழ் பாட்டுத்திறத்தாலே
அந்நியனுக்கு வேட்டுவைத்தவன்!
தமிழ்க்கவிதைகளால்
வெள்ளையன்மேல்
வெடிகுண்டு வீசிய
தமிழ்வீரன்!

அடிமை இந்தியாவை
சுதந்திர இந்தியாவாக
மாற்றத் துடித்தவன்!

ஏழ்மைநிலையில் தானிருந்தும்
வாய்மைநிலை தவறாதவன்!
தாயன்பை போதித்தவன்!
தமிழ்க்கவிதையால் சாதித்தவன்!!

மூடநம்பிக்கைகளை
ஓட ஓட விரட்டியவன்!

எட்டயபுரத்தில் பிறந்து
வாரணாசிக்குப் போய்
புராண இதிகாசங்களை
கரைத்துக் குடித்தவன்!

புத்தனைப் போலவே
சித்தனிவன்! – பரி
சுத்தனிவன்! – கவி
பித்தனிவன்! – தேச
பக்தனிவன்!

மண்ணுலகில் வாழும்
நீசர்கள் நலனுக்காய்
ஈசனிடம் வேண்டிய
துறவி இவன்!

எண்ணங்களை நெறிப்படுத்தி
வேலியமைக்க
காளியிடம் வேண்டியவன்!

தனக்குள்ளே
கடவுளைக் கண்டவன்!
காதலின் புகழை
பாடலாய்ப் பாடியவன்!

மண்ணுலக உயிர்களின்
உள்ளங்களில் வாழும்
கவிஞானி இவன்!!

காதல் சிலுவை!

உன்னை நேசிப்பதை
உன்னிடம் சொல்வதற்கு
மலர்களை கொண்டுவராமல்
மலர்களைவிட மென்மையான
என் காதலை கொண்டுவந்தேன்!

நீயோ
உன் மௌனமெனும்
ஆயுதமெடுத்து
என் இதயத்தின் கைகளில்
ஆணிகளிடித்து
எனை சிலுவையில் அறைகிறாய்!

இயேசு
முதல் நாள் மரித்து
மூன்றாம் நாள்
உயிர்த்தாராம்!
நானும்
ஒவ்வொரு நாளும்
உறக்கம் என்ற பெயரில்
மரித்து உயிர்க்கிறேன்!!

உன்மீது என்மனதிலுள்ள
அன்பின் ஆழத்தை
உணர்த்துவதற்காக...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012