Saturday, September 4, 2010

சொல்ல மறந்தகதை!

சொல்ல மறந்தகதை! - என் மனதை
மெல்லத் திறந்தகதை! - என்னுயிரைக்
கொல்லப் பிறந்தகதை!!

புகைவண்டியில் பயணம்! - உன்
சிகையில் சிக்கியது என்மனம்!!

புகைவண்டி சென்றது மெல்லமெல்ல...
என்மனம் உனைக்கண்டு துள்ளத்துள்ள...

புகைவண்டி பறந்தது சென்னைநோக்கி!
என்மனம் விரைந்தது உன்னைநோக்கி!!

என்னெதிரே அமர்ந்தாய்!
என்குறும்பை இரசித்தாய்! - இன்று
என்னுதிரம் பருகிவிட்டாய்!
என்னுயிரைத் திருகிவிட்டாய்!!

உன்வீட்டில் உணவு உண்டேன்!
அங்கேயே கனவு கண்டேன்! - மேலும்
உன்மேல் காதல் கொண்டேன்!!

என்னை உன்நாய்
சிறைவைத்தது உன்வீட்டில்!
உன்னை என்சேய் என
எழுதிவைத்தேன் என்னிதய ஏட்டில்!!

'நன்றாக சாப்பிடு
இன்று சாப்பிடுவது
ஏழு நாட்களுக்கு பசிக்கக்கூடாது' என்றாய்!
உன் பரிவால் எனைநீ வென்றாய்!!

'நான் என்ன ஒட்டகமா?' என்றேன்! - அன்றே
நீதான் என் காதல் பெட்டகமெனக் கண்டேன்!!

உன் பள்ளிப்பருவத்து
புகைப்படத்தைப் பார்த்தேன்!
நெருப்பில்லாமல் புகைந்தது
என் நெஞ்சம்!

புகைப்படத்துடன்
புறப்படலாம் என்றிருந்தேன்!

உன் புன்னகையை
என் விழிகளால்
புகைப்படமெடுத்து
என்னிதய ஏட்டில் பதிவுசெய்தேன்!

உன் வதனத்தில் தவழ்வது
புன்னகையா?
பொன்நகையா?
தெரியவில்லை!

அன்றெனக்கு
எல்லையில்லா மகிழ்ச்சி!
தொல்லையில்லா நிகழ்ச்சி!
இவையெல்லாமே
யார் செய்த சூழ்ச்சி?

உன்னிடம்
'பார்க்கலாம்' என்று
விடைபெற்றேன்!
இன்றும்
பார்த்துத்தான் கொண்டிருக்கிறேன்
உன்னை என் மனத்திரையில்...!!

No comments: