பாடல் வரிகளுக்கான காணொளி - https://youtu.be/OfQaLfJHcQ4
என்னிடமிருந்து வெளிவந்த புத்தம்புது மெட்டு இது. நான் ஒரு ஆகச் சிறந்த பாடகனுமில்லை. எனக்கு இசையைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், கவிதைகளை, பாடல்களைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும். சிறுவயதில் என் அம்மா, அப்பா சொல்லித் தந்த தமிழ், சிறுவயதில் பாடசாலை வகுப்பறைகளில் நான் உன்னிப்பாக கவனித்தவை இவை மட்டுமே தமிழ் மீது தீராத காதலை உண்டாக்க வைத்தவை. மற்றபடி, இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் நான் கணினித்துறையில் படித்தமையால் தமிழை தொடர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு பறிபோனது.
இருந்தபோதிலும் சமீப காலமாக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, இணையம் வழியே தூய தமிழ் தேசியம் குறித்த ஆராய்ச்சிக் காணொளிகள், கட்டுரைகள் போன்றவற்றை படித்ததன் விளைவாய் கவனித்ததன் விளைவாய், நான் இப்போது எண்ணிப் பார்க்கிறேன் "நாம் ஆரம்ப காலகட்டத்தில் நம்முடைய கவிதைகளில், கவிதை நூல்களில் தவறான வரலாற்றை முன்னுதாரணமாக பல இடங்களில் உவமையாக எழுதியிருக்கிறோம். இனி அந்த மாதிரியான தவறுகளை செய்யக் கூடாது. உவமையாகச் சொல்ல வேண்டிய இடங்களில் தமிழர் சார்ந்த உண்மை வரலாற்றை மட்டுமே முன்னுதாரணமாகச் சொல்ல வேண்டும். ஒரு போதும் நாம் சிறுவயதில் படித்த தமிழர்களைப் பற்றிய தவறான, கட்டுக் கதையான வரலாற்றை எந்த இடத்திலும் என்னையறிமல் கூட என் கவிதைகளில், பாடல்களில், பதிவுகளில் வெளிவந்து விடக்கூடாது, எழுதக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்".
நம்மிடமிருந்து வெளியே வரும் வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட மாத்திரை அளவில் அதாவது ஒரு குறிப்பிட்ட ஒலி அளவில், ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் அமைந்தால் போதும். அந்த வார்த்தைகளே தனக்குள் ஒரு மெட்டை தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டு நம்மை துள்ளலிசையோடு மெல்லிசையோடு பாட வைத்து விடும். அப்படித்தான் இந்தப் பாடலும்.
நான் கவிதை எழுதத் துவங்கிய 2004 ஆண்டு தொடங்கி என்னுடைய கவிதைகளை எழுதும் போதும் சரி, எழுதி முடித்தவுடன் மனதிற்குள் வாசிக்கும் போதும் சரி, என்னுடைய பெரும்பாலான கவிதைகள் பாடல்களாக ஏதோவொரு மெட்டுடன் ஒலித்ததை நான் கவனித்தே வந்திருக்கிறேன். அன்று முதல் கடந்த ஆண்டு வரை "நாம் எழுதும் கவிதைகளும் சரி. நமக்கு கிடைக்கும் மெட்டும் சரி, படிக்கும் வாசகர்களாலும் அதே மெட்டை பாடலாக பாடி உணர முடியும்" என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் 26 அன்று என் மருமகன் விஷ்ணுவின் பிறந்தநாளிற்காய் நான் எழுதிய பாடலை குரல் பதிவாக பகிரியில் (whatsapp) என் நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன்.
மருமகன் விஷ்ணுவின் பிறந்தநாளிற்காய் நான் எழுதிய பாடல் - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/04/blog-post_25.html
நான் B.Sc (C.S) படிக்கும்போது என்னோடு எமனேஸ்வரத்திலிருந்து B.Com படித்த என் நண்பர் சபரீஷ் பாண்டியன் பதில் அனுப்பியிருந்தார் "நீ அனுப்பியதை நாங்களாவே வாசித்திருந்தால் சாதாரணமாகத் தான் இருந்திருக்கும். ஆனால், நீ குரல் பதிவில் அனுப்பியதை கேட்ட பிறகு தான் அந்த மெட்டோடு கேட்கும் பாடல் வரிகள் இனிமையாகவும் கேட்பதற்கு சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. வாழ்த்துகள் ".
இவரின் பதிலை கேட்ட பிறகுதான் "நமக்குக் கிடைத்த மெட்டோடு பாடலை நாமோ அல்லது யாரோ ஒருவரோ பாடிக் காட்டினாலோ தான் வாசகர்களுக்குப் புரிகிறது. அவர்களாகவே வாசித்தால் பெரும்பான்மையோருக்கு அந்த மெட்டு புலப்படுவதில்லை. அவர்களுக்கு பாடிக் காட்டுவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார்" என்ற பேருண்மையை புரிந்து கொண்டேன்.
இந்தக் காணொளி என்னுடைய இரண்டாவது காணொளி. என்னுடைய முதல் காணொளி என் இரண்டாவது மகள் நிறைமதிக்கு எழுதிய பாடல் - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/07/blog-post.html
ஒரு இசையமைப்பாளரின் அடிப்படைத் திறமையே புதிது புதிதான மெட்டுக்களை உருவாக்குவது தான். குறிப்பிட்ட உணர்விற்கேற்ப குறிப்பிட்ட மெட்டு தான் பாடலுக்கு அடிப்படை. அதன் பிறகுதான், பாடல் வரிகள், பக்க வாத்தியங்கள், துணை இசைக்கருவிகள் அனைத்தும். மெட்டு மக்களுக்குப் பிடித்திருந்தால், அந்தப் பாடல் வெற்றியடைகிறது. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது.
கடந்த செப்டம்பர் 19, 2021 ஞாயிறு அன்று அதிகாலை 3 மணிக்கு என்னை தூக்கத்திலிருந்து என்னுடைய மன மகிழ்ச்சி என்னை எழுப்பி ஒரு மெட்டையும் "வயலோடு உறவாடி" என்று இந்தக் பாடலையும் தட்டச்சு செய்ய வைத்தது. பாடல் முதலில் வெளிவந்ததா மெட்டு முதலில் வெளிவந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், மெட்டோடு சேர்ந்தே பாடலின் ஒவ்வொரு வரிகளும் வெளிவந்தன.
இந்தப் பாடல் உருவான விதத்தை இங்கு சொல்வது மிகவும் விறுவிறுப்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும் என்பதால் இங்கு தொடர்ந்து சொல்கிறேன்.
கடந்த செப்டம்பர் 18, 2021 சனி மாலை 3.30 மணிக்கு மஞ்சள்பட்டினத்தில் இருக்கும் என் வீட்டிலிருந்து என் இரு சக்கர வாகனத்தில் (bike) முனைவென்றிக்கு என் அம்மாச்சிக்கு (அம்மம்மா) சாப்பாடு கொடுத்து விட்டு நெல் விதைத்த வயலையும் பார்த்தது விட்டு வரலாம் என கிளம்பி ஊர் செல்லும் வழியில் ஊருக்கு வெளியே உள்ள எங்கள் வயலை பார்த்தேன். அப்போது தான் நெல் விதைத்திருந்தோம். பயிர்கள் முளை விட்ட நிலையில் மழையில்லாமல் கருகிப் போயிருந்தன. மிகவும் நான் அப்போது அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. அதே வேதனையோடு அம்மாச்சியைப் பார்க்க வீடு வந்து சேர்ந்தேன். மாலை 4 மணிக்கு வீடு வந்தபிறகு வயலில் விழுந்து கிடந்த பனம்பழத்தை ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ருசித்துத் தின்று கொண்டிருந்தேன். அப்போது இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
எங்கள் கடை மற்றும் வீட்டிற்கு எதிரே உள்ள முருகன் கோயிலின் கோபுரத்தை புகைப்படக் கருவியால் பத்தி செய்து கொண்டிருந்தார். நான் "நீங்கள் யார்?" என்று கேட்டேன். இரண்டு நபர்களில் ஒருவர் என்னருகே வந்து "என் பெயர் இராஜேந்திரன். நான் ஒரு தமிழ் பேராசிரியர். கோவையில் ஒரு கல்லூரியில் பணிபுரிகிறேன். இங்கு முனைவென்றி கொளஞ்சித் திடலில் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழியை நான் கண்டறிந்தேன். இது குறித்து பதிவு செய்து செய்தியாக வெளியிட News TN என்ற ஊடகத்திலிருந்து வந்தவர் அவர்" என சொல்லிவிட்டுச் சென்றார். அவர் சொன்ன செய்திகள் எனக்கு அவ்வளவு எளிதில் புரியாமலும் மிகவும் நம்ப முடியாமல் ஆச்சர்யமாகவும் இருந்தது. அவர்கள் சென்ற பிறகு மாலை 5 மணியளவில் கடுமையான மழை. மாலை 5 மணிக்குத் துவங்கி 7.30 மணி வரை இரண்டரை மணி நேரமாக வெளுத்து வாங்கியது.
எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை. சற்றுமுன் தான் கருகிய பயிர்களை பார்த்து விட்டு "மழை பெய்தால் தான் பயிர்கள் பிழைக்கும். மழை பெய்ய வேண்டும்." என வேண்டிக் கொண்டே மிகவும் மன வேதனையோடு வீடு வந்து சேர்ந்தேன். அந்த வேதனையில் இருந்த எனக்கு இரண்டரை மணி நேரமாக பெய்த மழையால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மாலை ஆறு மணிக்கு இருள் சூழ்வதற்குள் மஞ்சள்பட்டணம் செல்ல வேண்டும் என நினைத்த எனக்கு இரு சக்கர வாகனத்தை எடுக்க முடியாத அளவிற்கு வாசலில் அன்று வெள்ளம் கரை புரண்டோடியது. அதனால் வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு பரமக்குடிக்கு செல்லும் பேருந்தில் இரவு 9 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். "கடுமையான மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. பயிர்கள் நன்றாக வந்து விடும்." என்ற மகிழ்ச்சியில் உறங்கினேன்.
அடுத்த நாள் ஞாயிறு அன்று அதிகாலை 3 மணிக்கு என்னை தூக்கத்திலிருந்து என்னுடைய மன மகிழ்ச்சி என்னை எழுப்பி ஒரு மெட்டையும் "வயலோடு உறவாடி" என்று இந்தக் பாடலையும் தட்டச்சு செய்ய வைத்தது. இந்தப் பாடலை எழுதும்போது எனக்குக் கிடைத்த மெட்டும் பாடல் வரிகளும் என்னை அளவு கடந்த மகிழ்ச்சியை அடைய வைத்தன. சில நாட்கள் கழித்து, முகநூலிலும் தினமணி, indian express போன்ற செய்தித்தாள்களிலும், youtube லும் என் சொந்த ஊர் முனைவென்றியைப் பற்றி 3500 ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊர் முன்னோர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழியைப் பற்றி செய்திகள் வெளிவந்ததை பார்த்த பிறகுதான் என்னால் நம்ப முடிந்தது. அன்று இராஜேந்திரன் சொன்ன செய்திகள் முழுமையாகப் புரிந்தன.
முதுமக்கள் தாழி பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்பே இந்தப் பாடல் வரிகளில் என் ஊரைப் பற்றியும் வார்த்தைகள் வெளிவந்திருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்தபோது ஏதோவொரு உள்ளுணர்வும் என் ஊரின் மேல் உள்ள அளவு கடந்த பற்றுமே என் ஊரைப் பற்றியும் இந்தப் பாடலில் எழுத வைத்திருக்கின்றன என்பதை அதன்பிறகு உணர்ந்து மகிழ்ந்தேன்.
அதன்பிறகு என் ஊர் முனைவென்றியின் முதுமக்கள் தாழி குறித்து நான் நேரில் சென்று எடுத்த புகைப்படத்துடன் கூடிய என்னுடைய பதிவு - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/10/3200.html
வைகை ஆற்றின் நீர் ஆயூர் கண்மாய்க்குச் செல்லும் கால்வாயின் கரையில் தான் எங்கள் வயல் அமைந்துள்ளது. ஆனாலும் அந்த நீரை எங்கள் வயலுக்கு பாய்ச்ச மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். முனைவென்றி கண்மாயும் எங்கள் வயலிலிருந்து சுமார் மூன்று மைல் கல் தொலைவில் இருக்கிறது. அங்கிருந்து தண்ணீர் பாய்ச்சலாம் என நினைத்தால் அந்த நீர் எங்கள் வயலுக்கு வருவதற்கு பழைய வாய்க்காலும் பாராமரிக்கப் படவில்லை. அதைத்தாண்டியும் வரும் வழியில் உள்ள வயல் காரர்கள் மறைத்துக் கொள்வார்கள். எனவே எங்கள் ஊர் கண்மாய் தண்ணீரை பாய்ச்சுவது என்பது கடினமான ஒன்று. மழையை மட்டுமே நம்பி நாங்கள் நெல் விவசாயத்தை மேற்கொள்கிறோம். எனக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக வீட்டிலிருந்த படியே வேலை (work from home) என்பதால் சனி மற்றும் ஞாயிறு போன்ற வார விடுமுறை நாட்களில் கடந்த 2020 ல் வயலில் நான் களையெடுத்தேன். நாற்று நட்டேன். உதவி செய்தேன். அதோடு கடந்த ஆண்டு எங்கள் ஊரிலும் சரி சென்னையிலும் சரி நல்ல மழை. ஆனால் இந்த 2021 ல் கடந்த செப்டம்பர் 18 அன்று இரண்டரை மணி நேரம் பெய்த மழையைப் போல் சென்னையில் பெய்தாலும் எங்கள் ஊரில் மழை பொய்த்ததால் எங்கள் வயல் நான்கில் மூன்று பங்கு பயிர்கள் கருகி வீணானது.
செப்டம்பர் 18 அன்று இரண்டரை மணி நேரம் பெய்த மழையால் நான் அடைந்த மகிழ்ச்சி தொடர்ந்து இன்று வரை நிலைக்கவில்லை. நான் எழுதிய இந்தப் பாடலை கடந்த செப்டெம்பருக்குப் பின் நான் சென்னையில் அதிக நாட்களும் பரமக்குடியில் எப்பொழுதாவதும் இருக்கும்படியான சூழலாலும் அதன்பிறகு "சென்னையில் வீடுகளில் நீர் புகும் அளவிற்கு பெய்த தேவையில்லாத மழை நம்மூரில் பெய்யாமல் போனதே. விவசாயத்திற்குத் தேவையான குறிப்பிட்ட கால அளவில் தேவைப்படும் மழைநீர் போன ஆண்டைப் போல் இந்த ஆண்டு பெய்யவில்லையே" என்ற வருத்தத்தாலும் இந்தப் பாடலை காணொளியாக பதிவு செய்யாமல், செய்ய மனம் வராமல் வைத்திருந்தேன்.
இன்று தமிழர் திருநாள். நம் வயல் தான் முறையான பராமரிப்பு இல்லாமல் வீணானது. மற்ற வயல்கள் நல்ல செழிப்புடன் இருக்கிறதே என்ற மன மகிழ்வோடு விவசாயத் தொழில்நுட்பத்தை கதிர்காமத்தில் முதலில் தொடங்கிய நம் முப்பாட்டன் முருகனை வணங்கி இந்தப் பாடலையும் காணொளியையும் பெருமகிழ்ச்சியோடு வெளியிடுகிறேன்.
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
பொன்வண்டின் பாட்டு பூங்காற்றும் கேட்டு
மண்வாசம் பார்த்து மனமெங்கும் பாட்டு
மண்வாசம் பார்த்து மனமெங்கும் பாட்டு
கன்னங்கள் வழிந்திடும் நீர்
எண்ணங்கள் உயர்ந்திடும் பார்
வண்ணங்கள் நிறைத்திடும் ஊர்
சின்னங்கள் காத்திடும் பேர்
ஏ இடியிடிக்குது மின்னலடிக்குது
மழையடிக்குது சாரலடிக்குது
கொடைபிடிக்கல கூந்தல் நனையுது
உள்ளம் மகிழுது பள்ளம் நிறையுது
உயிர் உருகுது பயிர் செழிக்குது
பச்சை தெரியுது உச்சி குளிருது
இளந்தென்னைக் காற்று இதமான பாட்டு
உளவானில் நேற்று உருவான பாட்டு
மண்ணுக்குள் புதைந்திடும் வேர்
கண்ணுக்குள் ஒளிந்திடும் நீர்
மண்மீது நிலைத்திடும் வார்
மழையாகப் பொழிந்திடும் கார்
ஏ உச்சி வெளுக்குது மச்சும் குளிருது
வெயிலடிக்குது குளிரடிக்குது
மரமசையுது இலையசையுது
மின்னலடிக்குது இடியிடிக்குது
மறுபடியுமிங்கு மழையடிக்குது
மனம் குளிருது சனம் மகிழுது
வெயிலடிக்குது குளிரடிக்குது
மரமசையுது இலையசையுது
மின்னலடிக்குது இடியிடிக்குது
மறுபடியுமிங்கு மழையடிக்குது
மனம் குளிருது சனம் மகிழுது
என்னோடு ஆடும் மழையிங்கு பாடும்
மண்ணோடு கூடும் மண்வாசம் பாடும்
மண்ணோடு கூடும் மண்வாசம் பாடும்
கண்கூசும் அழகினைப் பார்
வெண்மேகம் தவழ்ந்திடும் ஊர்
என்தேகம் சிலிர்த்திடும் பார்
என்னுள்ளம் மகிழ்ந்திடும் பார்
வெண்மேகம் தவழ்ந்திடும் ஊர்
என்தேகம் சிலிர்த்திடும் பார்
என்னுள்ளம் மகிழ்ந்திடும் பார்
ஏ தென்றலடிக்குது சிலுசிலுக்குது
நீர் உயருது நெல் உயருது
வரப்புயருது வளம் கொழிக்குது
நலம் பெருகுது உளமுருகுது
இறையருளிது மறைபொருளிது
மழை பொழியுது மனம் குளிருது
(பொன்வண்டின் பாட்டு)
நீர் உயருது நெல் உயருது
வரப்புயருது வளம் கொழிக்குது
நலம் பெருகுது உளமுருகுது
இறையருளிது மறைபொருளிது
மழை பொழியுது மனம் குளிருது
(பொன்வண்டின் பாட்டு)
No comments:
Post a Comment