Showing posts with label கவிதைகள் (பாகம் - 10). Show all posts
Showing posts with label கவிதைகள் (பாகம் - 10). Show all posts

Sunday, September 4, 2011

கவிபாடுகிறேன்!

அத்தையவள் பெற்றமகள் அழகாகப் பூத்தமலர்
தத்திவந்து என்னருகே தளிராடை காட்டிநின்றாள்
புத்தனாக இருந்தநானும் பூமொட்டு முகம்பார்த்து
மொத்தமாக வீழ்ந்தேனே மூர்ச்சையாகிக் கிடந்தேனே

எத்தனையோ அழகுண்டு இயற்கையெனும் படைப்பினிலே
அத்தனையும் உனைப்போல அழகில்லை அழகில்லை
நித்திலமே உன்வதனம் நெஞ்சோடு வாழுதடி
சத்தியமாய் உன்நினைவு செத்தபின்பும் நீளுமடி!

தென்னவளே என்னவளே மன்னவளே சின்னவளே
கண்களிலே அன்புகாட்டி கைகளிலே வளையும்பூட்டி
கொண்டையிலே தாழைசூட்டி கோதைமகள் மதுவூற்றி
என்னருகே வந்துநின்றாள் எழில்கொஞ்சும் முகம்காட்டி!!

முத்துதிரும் இரத்தினமாய் மோகனமாய் சித்திரமாய்
கத்திவிழி போர்செய்தாய் கவிதையெனப் பத்திரமாய்!
மெத்தையிலே வந்தமர்ந்து முத்தங்கள் நீதந்து
தத்தையவள் விழிமூட தந்தனத்தோம் கவிபாட...!!

மோனமாக வந்துவந்து மோகமதைக் கூட்டிவிட்டாய்
தேனொழுக நீபேசி தெள்ளமுதைத் தந்துவிட்டாய்
ஆனவரை ஆனதடி ஆவிபறி போனதடி
ஆணாக நான்பிறந்த அர்த்தமின்று விளங்குதடி!!


இக்கவிதைகள் வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம்கோணம் (இணைய இதழ்) - 09-12-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) – 23-12-2011

கலியுகம் வீழட்டும்!

காதலோ டொருகாலம்! – தமிழ்க்
கவிதையோ டொருகாலம்!!
மோதித்தான் பார்ப்போமே! – என்
முன்னே வாடாகாலா!!
ஜாதிப் பிரிவோ டொருகாலம்!
சமயப் பூசலோ டொருகாலம்!!
பாதியில் வந்தவன் நானே! – இப்
பிரபஞ்சமு மென்னுள் தானே!!
ஆதிசிவன் மைந்தனும் நானே! – அந்த
ஆண்டவனின் பிள்ளையும் நானே!!
நீதி நெறியோடு வாழத்தானே – இங்கு
நீசனாய்ப் பிறந்தவன் நானே!!
வீதிகளில் நடக்கின்ற போது – விதி
வலிமைகொண்டு தாக்குதடி தாயே!
ஓதுவேன் உன்பெயரை தினமும் – இங்கு
ஓட்டுவாய் கலியை இன்றே!!
மேதினியில் நிலவட்டும் அன்பு! – இனி
மேவட்டும் கிருதயுகம் தொடர்ந்து!!

அண்ணன் எழுதிய பாடல்!

அன்பான தங்கச்சிப்பாப்பா
அன்பான தம்பிப்பாப்பா
அண்ணன் எழுதிய பாடல்கேட்க
ஆனந்தமாய் வாருங்கள்!

தாயிடம் அன்பைக் கற்க வேண்டும்
தந்தையிடம் பண்பைக் கற்க வேண்டும்
நீயும் நாளை உயர வேண்டும்
நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்!!

துள்ளித் திரிந்து விளையாட வேண்டும்
தூய்மையா யுடலைப் பேண வேண்டும்
பள்ளிக்குத் தவறாமல் செல்ல வேண்டும்
பாடங்களைக் கவனமாய் படிக்க வேண்டும்!!

உள்ளத்தில் தூய்மை உனக்கு வேண்டும்
உறுதியும் வாய்மையும் உனக்கு வேண்டும்
கள்ள மில்லா நட்பு வேண்டும்
கருணை பொங்கி வழிய வேண்டும்!!

கலாமின் அறிவுரைகள் கேட்க வேண்டும்
காந்தியின் அகிம்சையும் உனக்கு வேண்டும்
நாளைய இந்தியா உயர வேண்டும்
நம்பிக்கை எப்போதும் உனக்கு வேண்டும்

தடைகளை எதிர்த்து சாதிக்க வேண்டும்
தங்கமாய் நீயும் ஜொலிக்க வேண்டும்
படைகள் பலவந்து எதிர்த்த போதும்
பாசம் மட்டும் மிஞ்ச வேண்டும்

எதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
‘ஏனெதற்கு’ என்று கேட்க வேண்டும்
புதியதோர் உலகு படைக்க வேண்டும்
பழைய வரலாறு உடைக்க வேண்டும்

சாதியின் பெயரும் உனக்கு வேண்டாம்
சமயத்தின் பெயரும் உனக்கு வேண்டாம்
வீதிகளில் பரவும் தீவிர வாதம்
வேதனை தரு முனக்கு வேண்டாமே!!


இக்கவிதைகள் வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 03-12-2011

உன் நினைவில்...

பூச்சூடி வந்தமகள் பாவையவள் தந்தபுகழ்
மச்சந்தான் கொஞ்சமடி மதிமயக்கும் நெஞ்சமடி
அச்சமில்லை உனைப்பாட ஆசைவந்து அணைபோட
கச்சணிந்த முன்னழகு காவியமோ உன்னழகு!!

எத்தனையோ தமிழிலுண்டு எழில்கொஞ்சும் உனைக்கண்டு
சுத்தமான தங்கமடி சூழ்ந்தபலா அங்கமடி
இரத்தத்தில் வேகமடி இரதியே புதுஇராகமடி
சித்தத்தில் உன்நினைவு சிறுபெண்ணே உன்நினைவு!!

ஓம்சக்தி!

அன்பே தாயே சக்தி சக்தி!
அறிவே பலமே சக்தி சக்தி
அண்டமெலாம் நீயே சக்தி சக்தி
அகிலமெலாம் தாயே சக்தி சக்தி
துன்பமில்லா நிலையே சக்தி சக்தி
துயரில்லா மதியே சக்தி சக்தி
மண்ணுலகில் நீயே சக்தி சக்தி
மாயையைக் கடந்த நிலையே சக்தி சக்தி

உண்மையான உணர்வே சக்தி சக்தி
உருவமில்லாத் தெளிவே சக்தி சக்தி
வன்மையான தோளே சக்தி சக்தி
வலிமையான உளமே சக்தி சக்தி
கண்களில் ஒளிர்வாய் சக்தி சக்தி
காற்றுவழி உடல்புகுவாய் சக்தி சக்தி
பெண்களில் இருப்பாய் சக்தி சக்தி
பேருவகை கொள்வேனே சக்தி சக்தி

அன்பினிலே வாழ்வாய் சக்தி சக்தி
அறிவினிலே உணர்வேன் சக்தி சக்தி
என்னோடு இருப்பாய் சக்தி சக்தி
ஏகாந்த வாழ்வே சக்தி சக்தி
முன்வினைகள் தீர்ப்பாய் சக்தி சக்தி
முக்திபெற வைப்பாய் சக்தி சக்தி
இன்பமான நிலையே சக்தி சக்தி
இருகைகளால் தொழுவேன் சக்தி சக்தி

எப்படி முன்னேறுவாய்?

எப்படி முன்னேறுவாய்?
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

நம் தமிழ்நாட்டில்
தமிழை முதன்மையாய் படித்தால்
வேலை கிடைப்பது உறுதி
என்றநிலை சாத்தியமில்லாதவரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

குளிப்பதற்குத் தண்ணீரில்லாவிட்டாலும்
குடிப்பதற்குத் தண்ணீரில்லாவிட்டாலும்
உண்பதற்கு ஒருவேளைகூட
உணவில்லாவிட்டாலும்
‘மடக் மடக்’ என்று
மாட்டுமூத்திரத்தைக் குடிப்பதுபோல
குடிப்பதற்கு சாராயம்மட்டும் போதும்
என்று நீ வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

முதுகு முழுவதையுமே
ஊரார் பார்க்கும்படி
ஜாக்கெட் அணிவதை
பெருமையாகக் கருதும்
குடும்பக் குத்துவிளக்குகள்
வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

யார் மேடையேறி
எதைப் பேசினாலும்
யோசிக்காமல் கைதட்டும்
பாமரனாய் நீவாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

பெற்ற குழந்தைக்கு
பால்கொடுக்க மட்டுமே
வெளியே திறந்துகாட்டவேண்டிய
முன்னிரண்டு முலைக்காம்புகளை
துருத்திக்கொண்டு வெளியே தெரியும்படி
டி-சர்ட், சுடிதார் அணிவதுதான்
நவநாகரீகம் என்று கருதும்
அதிகம் படித்த யுவதிகள் வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

நட்பு என்ற போர்வைக்குள்
பல்லாண்டுகளாய்
உல்லாசமாய் சல்லாபமாய்
நள்ளிரவுவரை படுக்கையைப்
பகிர்ந்துவிட்டு
அன்றிரவே கருவைக்
கலைத்துவிட்டு
மறுநாள் இன்னொரு ஆணுக்கு
மனைவியாகும் பெண்கள் வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

கட்டிய மனைவியியே – காசுக்காக
கூட்டிக்கொடுக்கும் கணவனைப்போல்
பற்றிய கொள்கைகளையே
காற்றில் பறக்கவிடும்
அரசியல்வாதிகளை
நீ தலைவனென்று கோஷமிடும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

நான்கு சுவர்களுக்குள்
கணவன் மட்டுமே காணவேண்டிய
உடல் வளைவுநெளிவுகளை...
குண்டுகுழிகளை...
மேடுபள்ளங்களை...
ஊரார்முன்னே
காட்டிக்கொண்டும்
ஆட்டிக்கொண்டும்
அலைந்து திரிந்துவிட்டு
முதலிரவில் கணவனிடம்
புதிதாய்த் திறந்துகாட்ட
ஒன்றுமே இல்லாத
கற்புக்கரசிகள் வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

தாய்க்கும் பிள்ளைக்குமுள்ள
புனிதத்தை உணர்த்தும்
தொப்புளைக் கூட
கொச்சைப்படுத்திக் காசுபார்க்கும்
திரைப்படங்களை நீ ஆதரிக்கும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

வாக்களிப்பது உன்கடமை
எனக் கருதாமல்
கடமையைச் செய்ய
வாயை பிளந்துகொண்டு
காசுவாங்கும் நீ வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

எப்படி முன்னேறுவாய்?
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

அம்மாச்சி!

என்னைப் பெற்றவள்
என் அம்மா!
என்அம்மாவைப் பெற்றவள்
நீதான்!!

என்னைப் பெற்றவள்
என்தாயென்றாலும்
நான் தரையில் தவழ்ந்த
நாள் தொடங்கி
நிலைபிடித்து நின்ற நாள்வரை
‘என்னுயிரே நீதான்’ என்று
உன்மடியிலள்ளி எனைக்
கொஞ்சிமகிழ்ந்தவள் நீ!

என்தாய் எனக்குத்
தாலாட்டு பாடியதில்லை!
உன்தாலாட்டைக் கேட்டு
நான் உறங்காத நாளில்லை!!

தொட்டிலில் கிடந்தபடியே
உன் வாய்க்குள்ளும் உடல்முழுதும்
நான் பீச்சியடித்த சிறுநீரைக்கூட
புனிதகங்கையின் தீர்த்தமென்றே
குளித்து மகிழ்ந்தவள் நீ!

அரிதாய்க் கிடைக்கும்
அமிர்தமென்றே
அருந்தி மகிழ்ந்தவள் நீ!!

நான் செய்தசெயல்
தவறென்று தெரிந்தபோதெல்லாம்
தண்டித்து வளர்க்காமல் – எனைக்
கண்டித்து வளர்த்தவள் நீ!

இன்று...
நோயோடு படுக்கையில்
கிடந்த உன்னைப் பார்த்தபோது
நானுருகிப் போனேனே...!!

வலியோடு துடிக்கிறாய்!
விழிமூட மறுக்கிறாய்!
வழியொன்று பிறக்குமடி! – உன்
வலியுங்கூட மறக்குமடி!!

நீயாய் எழுந்துநடப்பாயென்ற
நம்பிக்கையை என்மனதில் நிறுத்தி
உனைப் பிரிந்து நடக்கிறேன்!!