என்னைப் பெற்றவள்
என் அம்மா!
என்அம்மாவைப் பெற்றவள்
நீதான்!!
என்னைப் பெற்றவள்
என்தாயென்றாலும்
நான் தரையில் தவழ்ந்த
நாள் தொடங்கி
நிலைபிடித்து நின்ற நாள்வரை
‘என்னுயிரே நீதான்’ என்று
உன்மடியிலள்ளி எனைக்
கொஞ்சிமகிழ்ந்தவள் நீ!
என்தாய் எனக்குத்
தாலாட்டு பாடியதில்லை!
உன்தாலாட்டைக் கேட்டு
நான் உறங்காத நாளில்லை!!
தொட்டிலில் கிடந்தபடியே
உன் வாய்க்குள்ளும் உடல்முழுதும்
நான் பீச்சியடித்த சிறுநீரைக்கூட
புனிதகங்கையின் தீர்த்தமென்றே
குளித்து மகிழ்ந்தவள் நீ!
அரிதாய்க் கிடைக்கும்
அமிர்தமென்றே
அருந்தி மகிழ்ந்தவள் நீ!!
நான் செய்தசெயல்
தவறென்று தெரிந்தபோதெல்லாம்
தண்டித்து வளர்க்காமல் – எனைக்
கண்டித்து வளர்த்தவள் நீ!
இன்று...
நோயோடு படுக்கையில்
கிடந்த உன்னைப் பார்த்தபோது
நானுருகிப் போனேனே...!!
வலியோடு துடிக்கிறாய்!
விழிமூட மறுக்கிறாய்!
வழியொன்று பிறக்குமடி! – உன்
வலியுங்கூட மறக்குமடி!!
நீயாய் எழுந்துநடப்பாயென்ற
நம்பிக்கையை என்மனதில் நிறுத்தி
உனைப் பிரிந்து நடக்கிறேன்!!
No comments:
Post a Comment