Sunday, September 4, 2011

கவிபாடுகிறேன்!

அத்தையவள் பெற்றமகள் அழகாகப் பூத்தமலர்
தத்திவந்து என்னருகே தளிராடை காட்டிநின்றாள்
புத்தனாக இருந்தநானும் பூமொட்டு முகம்பார்த்து
மொத்தமாக வீழ்ந்தேனே மூர்ச்சையாகிக் கிடந்தேனே

எத்தனையோ அழகுண்டு இயற்கையெனும் படைப்பினிலே
அத்தனையும் உனைப்போல அழகில்லை அழகில்லை
நித்திலமே உன்வதனம் நெஞ்சோடு வாழுதடி
சத்தியமாய் உன்நினைவு செத்தபின்பும் நீளுமடி!

தென்னவளே என்னவளே மன்னவளே சின்னவளே
கண்களிலே அன்புகாட்டி கைகளிலே வளையும்பூட்டி
கொண்டையிலே தாழைசூட்டி கோதைமகள் மதுவூற்றி
என்னருகே வந்துநின்றாள் எழில்கொஞ்சும் முகம்காட்டி!!

முத்துதிரும் இரத்தினமாய் மோகனமாய் சித்திரமாய்
கத்திவிழி போர்செய்தாய் கவிதையெனப் பத்திரமாய்!
மெத்தையிலே வந்தமர்ந்து முத்தங்கள் நீதந்து
தத்தையவள் விழிமூட தந்தனத்தோம் கவிபாட...!!

மோனமாக வந்துவந்து மோகமதைக் கூட்டிவிட்டாய்
தேனொழுக நீபேசி தெள்ளமுதைத் தந்துவிட்டாய்
ஆனவரை ஆனதடி ஆவிபறி போனதடி
ஆணாக நான்பிறந்த அர்த்தமின்று விளங்குதடி!!


இக்கவிதைகள் வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம்கோணம் (இணைய இதழ்) - 09-12-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) – 23-12-2011

No comments: