Sunday, September 18, 2011

தாயன்பைத் தேடி...

என் மூன்றரை வயதில்
என் நெற்றியில் ஒன்று
என் வலது கன்னத்தில் ஒன்று
என் இடது கன்னத்தில் ஒன்று
என வாஞ்சையோடு
நீ கொடுத்த மூன்று முத்தங்கள்
நினைவுகளாய் இன்னுமும்
என் நியூரான்களில்
கண்ணீரோடு கலந்திருக்கிறது!

நான் சிரித்தபோது
நீ சிரித்தாய்!
நான் அழுதபோது
நீ அழுதாய்!
உன் உணர்வுகளை மறந்து
என் உணர்வுகளை மட்டுமே
உன் உலகமென நினைத்த
என் உலகம் நீ!
நான் வணங்கும் தெய்வம் நீ!!

என் செவிலித்தாயான
தமிழன்னையை
எனக்கு முதல்முதலில்
கற்றுக்கொடுத்த
தமிழாசான்
என் அன்னையே...
நீ தான்!

இலக்கணம் படித்ததில்லை! – உனக்குத்
தலைக்கனமும் பிடித்ததில்லை!! – தமிழ்
இலக்கியம் படித்ததில்லை! – உனக்கென
இலக்குகள் எதுவுமில்லை!!

நீ கற்றுக்கொடுத்த
தமிழ்மொழியால்
உன்மகனான நான் – தமிழ்
இலக்கியத்தில்
மூழ்கிக் கொண்டிருப்பதைப்
பார் அம்மா...!

பல ஆண்டுகளாய்
நம்மிருவரையும் பிரித்துவைத்தே
வேடிக்கை பார்க்கிறது
காலம்!

பிணந்தின்னும் கழுகுகள் போல்
பணம்பண்ணும எந்திரங்களாய்
மாற்றிவிட்டது காலம்!

பசிதூக்கத்தை மறக்கவைத்து
பாசத்தைத் துறக்கவைத்து
உணர்வுகளை இழக்கவைத்து
மனிதநேயத்தை மறக்கவைத்து
மரக்கட்டைகள் போல
மாற்றிவிட்டது காலம்!

மீசை முளைத்தபின்னும் – முகத்தில்
முடி முளைத்தபின்னும்
உருவமது மாறியபின்னும் –என்
பருவமது மாறியபின்னும்
கலப்படமில்லாத தாய்ப்பாலைப்போன்ற
பரிசுத்தமான உன் அன்பைத்தேடும்
மூன்றரை வயதுப் பாலகன் நான்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் - 25-11-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) – 03-12-2011

3. வார்ப்பு (இணைய இதழ்) – 27-11-2011

No comments: