Sunday, September 18, 2011

சிரித்துவிடு அக்கா!

டிசம்பர் 24, 2005 சனிக்கிழமை wipro ல் quantitative aptitude exam சம்பந்தமாக நானும் என்னோடு பழகிய இராம்குமார் என்பவரும் டிசம்பர் 23, 2005 வெள்ளிக்கிழமை மாலை பரமக்குடியிலிருந்து கிளம்பி மறுநாள் காலை சனிக்கிழமை சென்னை வந்தோம். அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள ஒரு பள்ளியில் exam முடித்து விட்டு இராம்குமாரின் வீட்டில் வேளச்சேரியில் தங்கினோம். ஞாயிறு காலை என் உறவினர் பையன் கார்த்திக் என்பவர் என்னை வேளச்சேரியில் உள்ள மகேஸ்வரி அக்கா வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மகேஸ்வரி அக்கா என்னை அன்போடு வரவேற்றாள். அந்த வீட்டில் நான் அமர்ந்திருந்த இடம், அப்போது நான் அணிந்திருந்த ஆடைகளின் நிறம் அனைத்தும் இப்போதும் எனக்கு தெளிவாக நினைவில் இருக்கின்றன. ‘எப்படி இருக்கிற க்கா?’ என்று கேட்டேன். ஒன்றுமே சொல்லாமல் இருந்தவள் அழ ஆரம்பித்து விட்டாள். ‘அழாத க்கா’ என அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டேன். அவளின் முகம் மலர்ந்திருந்தது. அவளின் அண்ணன் உடல்நிலை சரியில்லாததால் தான் அவள் அழுதாள் என்பது எனக்குப் புரிந்தது. வெளியே வந்தமர்ந்த நான் அவள் அழுத தாக்கத்தில் நானும் அழ ஆரம்பித்து விட்டேன். நான் அழுததை அவள் பார்த்துவிட்டாள். அன்று மாலை கார்த்திக் தாம்பரத்திலிருந்து இராமேஸ்வரத்திற்கு செல்லும் புகைவண்டியில் பரமக்குடிக்கு அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சி நடந்து ஒரு வாரம் கழித்தபின் ஒரு நாள் முனைவென்றியில் என் தாத்தா அமரும் சாய்வுநாற்காலியில் அமர்ந்திருந்தேன். அப்போது எழுதிய கவிதை இது.


காலம் நம்மை அழவைத்தாலும்
சிரித்துவிடு அக்கா! – நாளும்
சிலிர்த்தெழு அக்கா!!

நாமெல்லாம்
சிரிக்கப் பிறந்தவர்கள்!
வெற்றியைப்
பறிக்கப் பிறந்தவர்கள்!

உனக்கு
உற்றதுணை அண்ணனிருக்க
கற்றகல்வி கைகொடுக்கும்!
உறுதுணையாய் நானிருக்க - நன்றாய்
உறங்கிவிடு அக்கா!!

பட்டதுன்பம் மாறிவிடும்! – நம்
பரிசுத்த மனம் வென்றுவிடும்!!
கவலைவேண்டாம் அக்கா!!

காலம் கொடுத்த வேதனையை
வேதனை கொடுத்த சோதனையை
நாம் மாற்றுவோம் சாதனையாய்!

காலம் செய்த பாதகத்தை
நாம் மாற்றுவோம் சாதகமாய்!

பசித்துவிட்டால்
புசித்துவிடு அக்கா! – உணவை
புசித்துவிடு அக்கா!!
சிரித்துவிடு அக்கா! – கவலைமறந்து
சிரித்துவிடு அக்கா!!
இரசித்துவிடு அக்கா! – இயற்கையை
இரசித்துவிடு அக்கா!!

இறைத்தன்மை என்றுமே ஒன்று! – நம்
இன்பத்தமிழைப் பேசிக்கொண்டு
நம்பிக்கையோடு நேர்வழி சென்று
காலங்கொடுத்த துன்பத்தை வென்று
பழைய வரலாறு உடைப்போம்!
புதிய சரித்திரம் படைப்போம்!!

இக்கரையில் நாங்கள்!
அக்கரையில் நீங்கள்!
அக்கறையுடன் உன் வேலை செய்!
சிக்கனமாய் பணச்செலவு செய்!
எக்கணமும் மன மகிழ்ச்சிகொள்!
இப்படி நான்
சொல்லவில்லை அறிவுரை!
இவற்றை நீ
இன்றே செய் பரிந்துரை!!

நீ அழுதுவிட்டாய் கண்ணீர்வழி!
நானும் அழுதுவிட்டேன்! – உயிர்நோக
எழுதிவிட்டேன் இன்றே கவிதைவழி!
என்றுமாறும் நம்மிதய வலி?

உன் அழுகை கண்டு
நான் எழுதினேன் இக்கவிதையை!
காலம் மாற்றும் நம் சோகக்கதையை!!

உன் மழலைகொஞ்சும் ஓசை
மனம்மகிழும் ஓசை
என் காதில் விழும்நாள்
வெகுதொலைவில் இல்லை!!

உன் புன்னகை போதுமே அக்கா!
எனக்கு வேறெதுவும் வேண்டாமே அக்கா!!

No comments: