அடிமன வெளியினில்
ஆடிடும் முகிலே
மடியினில் தவழும்
மரகத மணியே
கொடிபோல் கைகள் குறுவாய்ச்
சிரிப்பு
விடியலைத் தந்தாய் வெள்ளி
நிலாவே
கண்ணுங் காதும்
கவிதைகள் பாடும்
கண்ணா உனையென்
கண்கள் தேடும்
அன்பே நிறைந்த
அன்னையு முனக்கு
உன்னா லெமது
உறவுகள் கூடும்
நம்முடைத் தமிழை
நாவில் பழக்கு
தெம்புட னெழுவாய்
தென்படும் கிழக்கு
கொம்புடைக் காளை குழவியும்
நீயே
தும்பியைப் போலே சோம்பலை
விலக்கு
விழிகள் திறந்து
வெளிச்சம் பார்ப்பாய்
ஒலியும் கேட்டு உளத்தில்
ஏற்பாய்
வலியும் தாங்கும் வலிமையும் வேண்டும்
அழியாப் புகழை
அதிகம் சேர்ப்பாய்
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) -
31-07-2012