Monday, February 3, 2014

மகாகவி (ஜனவரி ௨௦௧௪) மாத இதழில் என்னுடைய கவிதை "மழையெச்ச நாளொன்றில்..."

மகாகவி (ஜனவரி ௨௦௧௪) மாத இதழில் என்னுடைய கவிதை "மழையெச்ச நாளொன்றில்..." வெளியாகியுள்ளது.


Sunday, February 2, 2014

திரு. வேடியப்பன் (டிஸ்கவரி புத்தகக் கடை உரிமையாளர், திரைப்பட இணை இயக்குநர்) மகள் மதிவதனி பிறந்தநாளிற்காய்...

கடந்த ௨௦௧௩ ல் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் என்னுடைய அழகு ராட்சசி பிரதிகளை டிஸ்கவரி புத்தகக் கடை சார்பில் அங்கு வைக்கப்பட்டிருந்த கடையில் கொடுத்தேன். 

ஆறேழு மாதங்களுக்குமுன்பு திரு. வேடியப்பன் அவர்களின் மகள் மதிவதனியின் பிறந்தநாளுக்கு முகநூலில் அவருக்கு வாழ்த்தை தெரியப்படுத்தியிருந்தேன். 

விடுதலை புலிகளைப் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட எண்ண ஓட்டங்கள், கருத்துவேறுபாடுகள், மாற்றுக்கருத்துகள் என இருந்தபோதும் புலிகளும் தலைவர் பிராபரன் அண்ணாவும் அண்ணி மதிவதனியும் அவர்களின் பிள்ளைகளும் செய்த தியாகங்களை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.



தமிழீழம் கிடைக்க தொடர்ந்து போராடி வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்றவர்கள் புலிகள்.

அண்ணி மதிவதனி, யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் படித்தவர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நான் சென்னை சென்றிந்தபோது அசோக்நகர் டிஸ்கவரி புத்தகக்கடைக்குச் சென்றேன். அங்கு திரு. வேடியப்பனை சந்தித்தபோது அவர் மகளுக்கு மதிவதனி என்று பெயர் வைத்த தருணம் குறித்துக் கேட்டேன். 

ஈழத்தில் உச்சக்கட்டப் போர் நடந்தபோது மகள் பிறந்ததால் அவளுக்கு மதிவதனி என்று பெயர் வைத்தோம் என்று சொன்னார். அப்போதே அந்தக் குழந்தைக்கு பொம்மைகள் அல்லது கல்விக்கான எழுதுபொருட்கள் ஏதாவது வாங்கித்தர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அந்த சந்திப்பில், ௨௦௧௩ புத்தகத் திருவிழாவில் என்னுடைய பிரதிகள் விற்றதற்கான கோப்புகளை கணினியில் காட்டினார். அந்தப் பணம் ஓவியா பதிப்பகத்தில் கிடைக்கப்பெற்றதா? ஒருவேளை கிடைக்கப்பெற்று அப்போது நானும் அவரிடமிருந்து விற்றதற்கான பணத்தை இரண்டாவது முறையாக வாங்க நேரிடுமே என்பதற்காக பணம் ஏற்கனவே கிடைத்ததா அல்லது கிடைக்கவில்லையா என்று சில வாரங்களுக்கு முன்பே உறுதியானது.

இன்று திரு. வேடியப்பன் அவர்களிடம் இது தொடர்பாக பேசினேன். மதிவதனியின் பிறந்தநாள் தொடர்பாக உதவி செய்யவேண்டும் என்ற என்னுடைய ஆவலை தெரிவித்தேன். 

கோவை ஈர நெஞ்சம் தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கு எண்ணை அந்த நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பாளராக பதவி வகிக்கும் திரு. மகேந்திரன் அவர்களிடம் வாங்கி திரு. வேடியப்பனின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தேன். ஏதோ என்னால் முடிந்த உதவி.

எல்லோருடைய ஆத்மாவின் குணமும் தூய்மையான அன்பும் கருணையும் தான்.

Eara Nenjam: 402010157347, 
ING Vaisiya Bank, Coimbatore branch 219, Arunachalam road, R.S.Puram, 641002. 
IFSC Code: VYSA0004020.

உதவி செய்ய முன்வருபவர்கள் மேலே உள்ள ஈர நெஞ்சம் தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கு எண்ணிற்கு அனுப்புங்கள்.




Saturday, February 1, 2014

எத்தனையோ பொய்கள் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: எத்தனையோ பொய்கள் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

('ஒரு பொறியியல் மாணவனின் ஆண்டுக் கட்டணத் தொகை பன்னிரெண்டாயிரமும் நிராதரவாக நின்ற பெண்மணிக்கு பணவுதவி செய்து குவைத்திலிருந்து தாயகம் அனுப்பும் பொருட்டு தொகை எட்டாயிரமும் கொடுத்துதவ வாசகர்களாகிய நீங்களன்றி காரணம் வேறு யாருமல்ல என்பதை முழு நன்றியோடு தெரிவிக்கிறேன்.' என்று இக்கவிதைநூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.)



இக்கவிதை நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கவிதைகளுமே குறுங்கவிதைகளாகவே இடம்பெற்றுள்ளன.

முதல் கவிதையே விதவை படும் அவஸ்தையை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது.

நாம் தமிழர்களாக இருந்துகொண்டு தமிழில் பேசவில்லை என்பதை எவ்வளவு எள்ளல் சுவையோடு சிந்திக்க வைக்கிறார் பாருங்கள்.

'சைக்கிள்...
கார்...
பஸ்...
ஏரோப்ளேன்...
எல்லாம் நிறைய போகின்றன
தமிழனை மிதித்துக் கொண்டு...!'

நம் பண்டைய தமிழகத்தில் வயல்வெளிகளுக்கு களையெடுக்கப் போகும்போதோ, ஏர் ஓட்டச் செல்லும்போதோ சோறு வடித்த நீராத்தண்ணீரோடு வத்தல் மிளகாய், ஊறுகாய் போன்றவற்றை எடுத்துக் கொண்டு போய், மரநிழலில் அமர்ந்து அதனை இரசித்து ருசித்துச் சாப்பிடுவது தனிசுகம். இதெல்லாம் காலப்போக்கில் அழிந்துபோனதை இந்தக் குறுங்கவிதையின்மூலம் உணர்த்துகிறார்.

'ஊறுகாயும்
வத்தல் மிளகாயும்
பிரியாணியில் ஒழிந்துபோனது
விலை ஒரு நூறு.'

தன் குழந்தையை அடித்துவிட்டு தவிக்கும் ஒரு சராசரித் தந்தையாக தவிப்பை வெளிப்படுத்துகிறார் இந்தக் கவிதையில்...

'உன்னை அடித்த
ஒரு அடியின் நுனியில்
சிக்கிக் கொண்டு தவிக்கிறது
என் உயிர்.'

இந்தக் கவிதைநூலினை படிக்கும் வாசகர்கள் அனைவர் மனதிலும் நிச்சயமாகப் பதிந்து போகக் கூடிய அற்புதமான ஒரு காதல் சார்ந்த குறுங்கவிதை.

'காதலுக்கு
எந்த இலக்கணமும்
கற்கவில்லையடி
உன்னைப் பார்த்ததைத் தவிர...'

சாதிக்கொடுமைகளுக்கு சாட்டையடி கொடுக்கிறார்

'மழிக்க மழிக்க
முளைக்கிறது
தாடியும் சாதியும்'

என்ற வரிகளில்...

மனிதம் சார்ந்து புத்தியில் பதியும்படி சொல்கிறார்

'கல்லும் கல்லும் உரசினால்
நெருப்பு வரும்
என்றறிந்த மனிதனுக்கு
கத்தியும் கத்தியும் உரசினால்
மரணம் வருமென்பது உணர்ந்தும்
நீள்கிறது போர்.'

மத ஒற்றுமையை ஒரு குறுங்கவிதையில் மிக நேர்த்தியாகவும் எளிமையாவும் சொல்கிறார்.

'எந்த இதழிலாவது தன்னுடைய படைப்பு பிரசுரமாகாதா?' என்று ஏங்கித் தவிக்கும் ஒரு ஆரம்பநிலை படைப்பாளியை, அவனுடைய படைப்பு எந்தவொரு இதழிலும் வரவில்லை என்றறிந்த போது அவனுடைய தவிப்பையும் ஒரு குறுங்கவிதை உணர்த்துகிறது.

நம்பிக்கை சார்ந்து சில கவிதைகளும், சாதிகளை ஒழிக்க புறப்பட்டு கடைசியில் கட்சிகளை ஒழிக்கும் நிலை வருமோ என்று சிந்திக்க வைக்கும் வரிகளோடு ஒரு கவிதையும், அனைத்துமே இரசிக்கும்படி உள்ள பட்டாம்பூச்சி பற்றிய கவிதைகளும் இந்நூலை அலங்கரிக்கின்றன.

'நிறைய அம்மாக்களுக்குத்
தெரிவதேயில்லை
தன் மகன்களின்
வங்கிக் கணக்கிலிருந்து
வலைப்பூ வரை
அவள்பெயர் தான்
கடவுச்சொல்லென்று...'

என்ற கவிதையை படிக்கும்போது பெரும்பாலான வாசகர்கள் தங்களின் பழைய நினைவுகளை பெருமூச்சோடு நிச்சயம் மீட்டிப் பார்ப்பார்கள்.

மாலை போட்டு விரதம் இருந்து சாமியைக் கண்டேனோ இல்லையோ சாமிக்குள் இருக்கும் மனிதத்தை உணர்ந்ததாக அருமையாக கவிதையில் சொல்லியிருக்கிறார்.

'மிக அன்பும்
ஈர்ப்பும் உள்ள
கணவன் மனைவிக்கிடையே
தோற்றுத்தான் போகின்றன
சில விரதங்களும்
கட்டுப்பாடுகளும்'

என கணவன் மனைவிக்கிடையே உள்ள நெருக்கத்தை, காதலை மென்மையாக சொல்லியிருக்கிறார்.

இன்னும் வேறுவேறு பாடுபொருட்களில் பல கவிதைகள் இடம்பெற்றுள்ளன இக்கவிதை நூலில்...

உடைந்த கடவுள் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: உடைந்த கடவுள் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்



ஈழத்து சகோதரி திருமதி. இரா. முத்து லட்சுமி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் இந்நூலின் ஆசிரியர்.

இப்போதெழுல்லாம் கொள்ளையடிப்பதும் கொலைசெய்வதும், அடுத்தவனின் இயலாமையை பயன்படுத்தி தட்டிப் பறிப்பதும் மலிந்துபோன இந்த உலகத்தில் இவற்றையெல்லாம் கேட்க வந்தால் கடவுளும் உடைந்து போவான் என்றே சிந்தித்திருக்கிறார்.

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றே படித்து வளர்ந்தும் தத்தமது சுயநலத்திற்காக ஆங்காங்கே பிரிவினைவாதத்தையும் கொடூரத்தையும் நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன வெட்டி வீழ்த்த முடியாமல் வளர்ந்து நிற்கும் பல அரசியல் கட்சிகள்.

நம் கண்முன்னே நடக்கும் கொடுமைகளை எதிர்த்து தட்டிக் கேட்கவேண்டிய நம்மில் பலர் ஏனோ எழுதக் கூட, பேசக்கூடத் தயங்குகின்றனர் என்பதே வேதனை கலந்த உண்மை.

உண்மையான கட்சித் தொண்டனைப் பற்றி பேசுகிறது. தொண்டன் கடைசிவரை ஏழையாகவே துயரப்பட்டு சாகிறான். மேல்மட்டத்தில் இருப்பவன் குடிமக்கள் பணத்தில் ஏகபோகமாய் வாழ்ந்து அனுபவித்து சாகிறான். தலைவன், தலைவி என்று சொல்ல அருகதையற்றவர்களின் புகைப்படங்கள் எல்லாம் அந்தத் தொண்டன் வீட்டு வழிபாட்டு அறையில் இருப்பதை சாடுகிறார் இந்தக் கவிதைநூலின் முதல் கவிதை வழியே.

மனிதம் சார்ந்தே பல கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழிப்பற்று சார்ந்து சில கவிதைகள் சாட்டையடியாகவே வந்து விழுகின்றன.

'என்றோ
பல ஆண்டுகளாய் பூமியில்
புதைந்து கிடக்கிறது
தங்கம்.
தோண்டியெடுத்தவன்
தானே செய்ததாகச் சொன்னான்.
செம்மொழி!'

என்கிறார்.

'ஒரு கிலோ கத்தரிக்காய்
இரண்டு ரூபாய்.
இரண்டு கிலோ உப்பு
ஒரு ரூபாய்.
ஒரு கிலோ பருப்பு
பத்து ரூபாய்.
பத்து கிலோ அரிசி
நானூறு ரூபா என்று
கணக்கெழுதும் அண்ணாச்சிக்கும்
வாங்குவோருக்கும்
கிலோ என்பது
தமிழ் வார்த்தையென்றே
தெரியப்பட்டுள்ளது'

என்ற வரிகளிலும்

'என்ன அருமையாய்
ஆங்கிலம் பேசுகிறாள்
ட்டமில் மட்டும் தகராறாம்

சிறுக்கியை
தமிழச்சியென்று சொல்லிக்கொள்ள
ஒருவேளை
நான் இறந்தபிறகு என் உதடுகள்
அசைந்து கொடுக்கலாம்
அசையாமலும் போகலாம்'

போன்ற வரிகளில் வேதனை கலந்த கோபம் தெரிகிறது.

'உடைந்த கடவுள்', 'விபத்து', 'சில அப்பாக்கள் உறங்குவதில்லை', 'உலகமும் ஒரு சின்ன எச்சரிக்கையும்', 'சிவப்பு இரத்தத்தின் கருப்பு ஜூலை', 'வாகனம் ஓட்டுபவரா நீங்கள்?', 'வாழ்க்கையை படி', 'அதென்ன காத்துக்கருப்பு பில்லி சூனியம்', 'யாரை காக்க யாரை கொள்வதோ பராபரமே' என்ற தலைப்புகளில் மட்டுமே இடம்பெற்றுள்ள இந்த நூலில் பெரும்பாலான கவிதைகள் 'உடைந்த கடவுள்' என்ற தலைப்பிலேயே குறுங்கவிதைகளாகவே, சில கவிதைகள் நீள்கவிதைகளாவே இடம்பெற்றுள்ளன.

'ஐந்து ரூபாய் கொடுத்து 
இட்லி சாப்பிட மறுத்து 
ஏழை என்கிறான்.
இட்லி பணக்காரத்தனம் எனில்
ஐம்பது ரூபாய் விஸ்கி??'

என குடிக்கு அடிமையாகி வாங்கும் சொற்ப கூலியையுமே மதுவருந்தி சீரழியும் குடிகாரர்களைப் பார்த்துக் கேட்கிறார்.

ஏழைகளின் பசியைக் கண்டு ஏங்குகிற மனம், குடிகாரனின் நிலை கண்டு வருந்தும் மனம், தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளச் சொல்லும் மனம், இலவச விளம்பரங்களைக் கண்டு ஏமாறும் ஏழைகளைக் கண்டு பதைக்கும் மனம், பிச்சைக்காரர்கள் படும் வேதனைகளை புரிந்துகொள்ளும் மனம், திரைப்படம் மற்றும் சமூகம் என இவையிரண்டிற்குமிடையே உள்ள உறவு, விபத்தில் அடிபட்ட பெரியவருக்காக இரங்கும் மனம், பிள்ளைகளுக்காக உழைக்கும் அப்பாக்களின் பொருளாதார நிலையை புரிந்துகொள்ளும் மனம், தனக்காக வரதட்சணை கொடுக்க அப்பா படும் கஷ்டத்தை எண்ணி அழக்கூட முடியாத நிலையில் உள்ள புகுந்த வீடு சென்ற பெண்ணின் மன உணர்வுகள், தன் காதலியைப் பார்க்கவேண்டி தான் எதிரில் நின்றிருந்தும் தன்னை கவனிக்க மறுக்கும் தன் மகனை நினைத்து வருந்தும் அப்பாவின் மனம், ஏழைக் குழந்தைக்கு உதவி செய்யும் மனம், பிச்சை எடுப்பவர்கள் போல் மற்றவர்களை ஏமாற்றும் சொம்பேறிகளை இனம் கண்டுகொள்ளும் மனம், கணக்கெடுக்கும் நிலையில் தான் சமுதாயப் பற்று உள்ளதென உரைக்கும் மனம், வீடின்றி வாழும் மனிதர்களின் நிலையைப் புரிந்துகொள்ளச் சொல்லும் மனம், கருப்பு ஜூலை தமிழனின் வரலாற்றில் கருமையாகவும் வெறுமையாகவுமே பதிவு செய்யப்பட்டிருப்பதை கவிதையாக பதிவுசெய்யும் மனம், மரங்களை வெட்டுவதை தடுக்க முற்படும் மனம், மூட நம்பிக்கைகளை சாடும் மனம், விதவையென பெண்ணைச் சாடும் சமூகத்தை சுட்டெரிக்கும் மனம், கணிதத்தில் தோல்வியடையும் மாணவனின் நிலையை உணரும் மனம், மகிழுந்து வாங்கிய பிறகு வேறு எதையும் அதைவிட பெரிதாய் எண்ணத்தோன்றாத மனம், போலிச்சாமியார்களைக் கண்டு மனம் கொதித்தெழும் மனம், வரதட்சணை என்ற பெயரில் கடன் வாங்கி வாங்கிய பொருட்கள் யாருக்கும் பயன்படாமல் பரண்மேல் கிடக்கும் நிலையைக் கண்டு கவலைப்படும் மனம், பேரக்குழந்தையை தன்னிடம் விட்டுப் போகச்சொல்லும் அம்மாவிடம் தன் கணவனின் உரையாடலும் அதன்பின் தன் அம்மாவின் மன ஓட்டங்களும் என மனக்கண் கொண்டு கவிதைக்குவியல்களை இந்நூல் வழியே உலவ விட்டிருக்கிறார்.