Thursday, April 24, 2014

பிறந்தநாள் வாழ்த்து



௨௬-௦௪-௨௦௧௪ அன்று என் மருமகன் விஷ்ணு பாப்பாவின் மூன்றாவது பிறந்தநாள். அவனின் பிறந்தநாளுக்காக நான் எழுதிய வாழ்த்துக்கவிதை.

வாழ்த்துகிறேன் பிறந்தநாளில் வந்துதித்த எங்களய்யா
தாழ்த்திதலை வணங்குகிறேன் தங்கச்சி மகனாரே
ஆழ்ந்துரைக்க முடியுமெனில் அழகான குழவியடா
வாழ்க்கையிங்கு உன்னோடு வரம்நூறு தாயேன்டா

வழமையாக நானிங்கு விளையாட உன்னோடு
குழவியாகிச் சிரித்தடவே குதித்தாடு எம்மிறையே
விளையாடும் அழகைத்தான் விழியசந்து பார்ப்போமே
பழம்பெருமைத் தமிழ்பேசி பண்புடனே வளர்வாயே

அம்பாரி யானையாகி உனையாட்டிடவே நானுண்டு
கொம்புடைய மான்போலே குதித்தோடும் பொன்வண்டு
நம்முடைய தமிழ்போலே நானிலத்தில் நீநின்று
தெம்புடனே நடைபோடு தமிழெங்கள் மூச்சென்று

அம்மையென அப்பனென அழகாக வகுத்தளித்த
செம்மையான சிறப்புடனே சீர்மிகுந்த தமிழைத்தான்
பொம்மையுடன் விளையாடும் புதுமையான பொம்மையே
இம்மைக்கும் மறுமைக்கும் எப்போதும் கற்பாயே

மாமனென்று அழைத்திட்ட மருமகனே மலைத்தேனே
உம்மைவிட அன்பான உறவில்லை இங்கெனக்கு
ஆமென்றும் இல்லையென்றும் ஆராயும் மனிதர்காள்
நமக்குள்ளே இறையுண்டு நீங்காத அன்பினிலே

மழலையிலே தமிழ்பேச மலைத்தேனும் செவிமுட்டும்
அலைகடலும் ஆர்ப்பரிக்கும் அழகேயுன் நடைபார்த்து
சிலைகெஞ்சும் சிரிப்பழகே சொத்தான நல்முத்தே
மலைமுட்டும் வான்போலே மனங்கொண்டே வாழ்வாயே 

இந்திய தேசிய திரைப்பட விருதுகள் - ஒரு பார்வை

தொகுப்பும் ஆக்கமும்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும். 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருதினை இந்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்கம் 1973ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது.

இந்தியத் திரைப்படத் துறையில் அழகிய கலை உணர்வை வெளிப்படுத்துவதாகவும், தொழில்நுட்பம் மிக்கதாகவும், அறிவை போதிக்கக் கூடியதாகவும், இந்தியப் பண்பாட்டின் புகழை உயர்த்தக் கூடியதாகவும் உள்ள திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருது வழங்கப்படுகிறது.

சிறந்த ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, சிறந்த இசையமைப்பாளர் என திரைப்படத் துறையின் வெவ்வேறு துறைகளுக்கும் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் தங்கத் தாமரை, வெள்ளித்தாமரை, வெண்கலத் தாமரை விருதுகள் வழங்கப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு விருதுக்குரியவர்களை/படைப்புகளை தெரிந்தெடுக்கிறது. விருதுகள் குடியரசுத் தலைவரால் தலைநகர் புது தில்லியில் வழங்கப்படுகிறது. இவ்விழாவினைத் தொடர்ந்து துவங்கும் தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன. நாட்டின் பலபகுதிகளில் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களும் திரைக்கலைஞர்களும் அடையாளம் காணப்படுகின்றனர். தவிர, ஒவ்வொரு பிராந்திய மற்றும் மொழி படங்களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.இது இந்தியாவின் ஆசுகார் விருதாகக் கருதப்படுகிறது.

61-வது தேசிய திரைப்பட விருதுகள்:

மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில், 61-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு அதிக தேசிய விருதுகளை அள்ளியவை, தென் இந்திய மொழிப் படங்கள்தான். குறிப்பாக தமிழ். இந்த ஆண்டு மூன்று தமிழ்ப் படங்கள், ஐந்து விருதுகளைக் குவித்துள்ளன. இந்தப் படங்கள் தமிழ் உணர்வாளர்களால் உருவாக்கப்பட்டவை என்பது ஒரு கூடுதல் பெருமை.

சிறந்த தமிழ் திரைப்படமாக ராம் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளிவந்த ‘தங்கமீன்கள்’ படம் தேர்வாகியுள்ளது. இப்படம் ஏற்கெனவே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

மேலும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு இப்படத்தில் நடித்த சாதனா தேர்வாகியுள்ளார். சிறந்த பாடலாசிரியராக இப்படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்...’ என்ற பாடலை எழுதியதற்காக நா.முத்துக்குமார் தேர்வாகியுள்ளார்.

சிறந்த கதையமைப்பிற்காக ‘தலைமுறைகள்’ படம் தேர்வாகியுள்ளது. சிறந்த எடிட்டிங்கிற்காக வல்லினம் படத்திற்கு வி.ஜே.சபு ஜோசப் தேர்வாகியுள்ளார்.

விருதுப் பட்டியல்:

* சிறந்த திரைப்படம்: ஷிப் ஆஃப் தீசிஸ் (Ship of Theseus) (ஆங்கிலம் - இந்தி)

* சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது: ஃபாண்ட்ரி (Fandry) (மராத்தி)

* சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - பாக் மில்கா பாக்

* தேசிய ஒறுமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது - தலைமுறைகள்

* சமூகப் பிரச்சினைகளைக் காட்டிய சிறந்த படம்: தூஹியா தர்மா கோச்சா (Tuhya Dharma Koncha) (மராத்தி)

* சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படம் : பெரறியாதவர் (Perariyathavar) (மலையாளம்)

* சிறந்த குழந்தைகள் படம் - காபல் (Kaphal) (இந்தி)

* சிறந்த இயக்குநர் - ஹன்ஷல் மேத்தா (படம்: ஷாஹித்) (இந்தி)

* சிறந்த நடிகர் - ராஜ்குமார் (ஷாஹித் - இந்தி) மற்றும் சூரஜ் வெஞ்சராமூடு (பேரறியாதவர் - மலையாளம்)

* சிறந்த நடிகை - கீதாஞ்சலி தாபா (படம்: லயர்ஸ் டைஸ் - Liar's Dice - இந்தி)

* சிறந்த உறுதுணை நடிகர்: செளரப் சுக்லா (ஜாலி எல்.எல்.பி - இந்தி)

* சிறந்த உறுதுணை நடிகை: அமிருதா சுபாஷ் (அஸ்து - மராத்தி) மற்றும் ஆயிடா எல்-காஷெஃப் (ஷிப் ஆஃப் தீசஸ்- ஆங்கிலம், இந்தி)

* சிறந்த குழந்தை நட்சத்திரம்: சோம்நாத் அவ்காடே (ஃபாண்ட்ரி - மராத்தி) மற்றும் சாதனா (தங்கமீன்கள் - தமிழ்)

* சிறந்த பின்னணி பாடகர்: ரூபன்கர் (படம் - ஜாதிஸ்வர் - பெங்காலி)

* சிறந்த பின்னணி பாடகி: பெலா ஷிண்டே (படம்: துஹ்யா தர்மா கோச்சா - மராத்தி)சிறந்த ஒளிப்பதிவு - ராஜீவ் ரவி (Liar's Dice - இந்தி)

* சிறந்த திரைக்கதை (அசல்) - ஷேசாத்திரி (டிசம்பர் 1 - கன்னடம்)

* சிறந்த திரைக்கதை (தழுவல்) - பஞ்சாக்‌ஷரி (பராக்ருதி - கன்னடம்)

* சிறந்த திரைக்கதை (வசனம்) - சுமித்ரா பாவே (அஸ்து - மராத்தி)

* சிறந்த ஆடியோகிரபி (Location Sound Recordist): நிகர் ரஞ்சன் சமல் (மெட்ராஸ் கபே - இந்தி)

* சிறந்த ஆடியோகிரபி (Sound Design) - பிஸ்வாதீப் சட்டர்ஜி (மெட்ராஸ் கபே - இந்தி)

* சிறந்த ஆடியோகிரபி (Re-recordist of the final mixed track) - யுவராஜ் - ஸ்வப்னம் (மலையாளம்)

* சிறந்த எடிட்டிங் - சாபு ஜோசப் (வல்லினம்)

* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - ஆஷிம் அலுவாலியா, தப்ஷீர் ஸுத்சி, பரிசித் பரால்கர் (மிஸ் லவ்லி - இந்தி)

* சிறந்த ஆடை வடிவமைப்பு - சபர்னி தாஸ் (ஜாதிஷ்வர் (Jaatishwar) - பெங்காலி)

* சிறந்த ஒப்பனை கலைஞர் - விக்ரம் கெய்க்வாட் (ஜாதீஷ்வர் - பெங்காலி)

* சிறந்த இசை (பாடல்கள்) - கபிர் சுமன் (ஜாதீஷ்வர் - பெங்காலி)

* சிறந்த இசை (பின்னணி இசை) - சாந்தனு மோஹித்ரா (நா பங்காரு தாலி - தெலுங்கு)

* சிறந்த பாடலாசியர்: நா.முத்துகுமார் (ஆனந்த யாழை - தங்கமீன்கள்)

* சிறப்பு நடுவர் விருது: எல்லோ (மராத்தி) மற்றும் மிஸ் லவ்லி (இந்தி)

* சிறந்த கிராபிக்ஸ்: இன்டர்மெஸ்ஸோ ஸ்டூடியோ, ஏலியன் சென்ஸ் ஃபிலிம் லிட் (ஜல் - இந்தி)

* சிறந்த நடனம்: கணேஷ் ஆச்சார்யா (பாக் மில்கா பாக் - இந்தி)

* சிறந்த அசாமி மொழி படம்: அஜேயோ (Ajeyo)

* சிறந்த வங்கமொழி திரைப்படம் - பாகிதா பியாக்திகடோ (Bakita Byaktigato)

* சிறந்த இந்தி திரைப்படம்: ஜாலி எல்.எல்.பி

* சிறந்த கன்னடத் திரைப்படம்: டிசம்பர் 1

* சிறந்த கொங்கானி திரைப்படம்: பாகா பீச்

* சிறந்த மலையாள திரைப்படம்: நார்த் 24 காதம்

* சிறந்த மராத்தி திரைப்படம் - அஞ்சா திவாஜ் மாஜ்ஹா (Aajcha Diwas Majha)

* சிறந்த தமிழ் திரைப்படம் - தங்க மீன்கள்

* சிறந்த தெலுங்கு திரைப்படம் - நா பங்காரு தாலி (Na Bangaaru Talli)

* சிறந்த ஆங்கில திரைப்படம் - தி காஃபின் மேக்கர் (The coffin Maker)

தங்க மீன்கள் குறித்து:

அப்பாவிடம் விளம்பரத்தில் வருவது போன்ற நாய் வாங்கித் தாப்பா என்று கேட்கும் மகள் .அந்த நாயின் விலை 22500 என்று மகள் கேட்டதால் எப்படியாவது வாங்கித் தர உழைக்கிறான். “விளம்பரத்தைப் பார்த்து கேட்பதையெல்லாம் வாங்கித் தரலாமா?” என்று கேலி பேசுகிறாள் சகோதரி .

குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று பெற்றோர்களுக்கு உணர்த்தும் படம் .பெற்றோர்களும் திருமணம் ஆன மகனின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று உணர்த்தும் படம் .

தனியார் பள்ளியில் படிக்கும் தன் குழந்தைக்கு ஃபீஸ் கட்ட முடியாத ஒரு தந்தைக்கும் மற்ற குழந்தைகள் போலல்லாமல் சற்று கற்றல் குறைபாடுடைய மகளுக்கும் இடையிலான அன்பையும், கூடவே சீர்கெட்டுப்போயிருக்கும் கல்வி சூழலையும் பற்றி பேசுகிறது தங்க மீன்கள்.

சிறந்த மாநில மொழிப் படம் என்ற பரிசுபெற்றுள்ள இந்தப் படத்துக்கு ரூ 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். உடன் பதக்கமும் சான்றிதழும் தரப்படும்.

நா. முத்துக்குமார்:

பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாக கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார்.

தேசியவிருது பெற்றுள்ள நா. முத்துக்குமார் கீழ்க்கண்டவாறு தன்னுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“அன்புள்ள பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி, இணையதள நண்பர்களுக்கு வணக்கம். உங்களில் ஒருவனாக என் வளர்ச்சியை நீங்கள் உணர்கிறீர்கள் என்பதை நானறிவேன். உங்கள் அன்பும், ஆதரவும் என் பயணத்தில் கிடைத்த பூங்கொத்துக்கள். "தங்கமீன்கள்" திரைப்படத்தில் நான் எழுதிய "ஆனந்த யாழை"பாடலுக்காக சென்ற ஆண்டின் சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளது என்பதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னும் தரமான பாடல்களை தமிழ் மக்களுக்கு தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை இவ்விருது என் தோள்களின் மீது ஏற்றி வைத்திருக்கிறது. தாய், மகன் பாசம் பற்றி நிறைய பாடல்கள் நம்மிடம் உண்டு. தந்தை, மகள் பாசம் குறித்த பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்விருதை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கும், இயக்குனர் ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதிக்கும், என் மகன் ஆதவன் நாகராஜனுக்கும், இந்த பாடலுக்காக என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட பெற்றோர்களுக்கும் சமர்பிக்கிறேன். மீண்டும் உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி.”

தலைமுறைகள்:

அமரர் பாலு மகேந்திராவின் கடைசிப் படம். தமிழையும் இந்தத் தாத்தாவையும் மறந்துடாதப்பா... என்று தழுதழுத்தபடி பேரனிடம் சொல்லும் பாலு மகேந்திரா குரல் இன்னும் காதுகளை விட்டு நீங்கவில்லை. சின்ன பட்ஜெட்டில், ஆனால் பெரிய விஷயத்தை எளிமையாய்ச் சொன்ன படம்தமிழ் தெரியாத தன் பேரனுக்கு தாத்தா எளிமையாக தமிழ் கற்றுத் தந்ததும், பதிலுக்கு தாத்தாவுக்கு பேரன் ஆங்கிலம் கற்றுத் தருவதுமான காட்சிகள் இந்தத் தலைமுறை அவசியம் பார்க்க வேண்டியவை. அடுத்த தலைமுறையில் எந்த தமிழ்க் குழந்தையும் தமிழ் தெரியாது என்று சொல்லும் அவலமே இருக்கக் கூடாது என்ற பாலு மகேந்திராவின் ஆதங்கத்துக்கு வெள்ளி ரஜத் கமல் வழங்கி கவுரவித்திருக்கிறது மத்திய அரசு!



வல்லினம்:

கூடைப் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் வல்லினம். நகுல் - மிருதுளா நடித்த இந்தப் படத்தில் முதல் பாதியைவிட, பின் பாதியில் எடிட்டருக்கு சவால் இருந்தது. அதற்காகவே சிறந்த எடிட்டருக்கான விருது சாபு ஜோசப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய திரைப்பட விருதுகளை வாங்கிய நம்முடைய தமிழ் திரைப்படக் கலைஞர்களை நாமும் மனதார வாழ்த்துவோம்.

Tuesday, April 22, 2014

என் தங்கச்சிப்பிள்ள பாமினி (திரைப்படப் பாடலாசிரியை) க்கு நான் எழுதிய வாழ்த்துக்கவிதை




தங்கச்சி சாமியார் 'எஸ்விஆர் பாமினி' - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/12/blog-post_29.html என்ற என்னுடைய முந்தைய பதிவில் சொன்னபடி கடந்த ௨௦௧௩ ஜூன் மாதம் என் தங்கச்சிப்பிள்ள பாமினி கவிதைநூல் வெளியிடுவது தொடர்பாக என்னிடம் கேட்டாள்.

அதன்பிறகு கடந்த ௨௦௧௪ பிப்ரவரி மாத இறுதியில் என்னிடம் பேசும்போது 'அடுத்த கவிதைநூலை எப்போது அண்ணா வெளியிடப் போகிறீர்கள்?' என்றாள். 'இப்போது இல்லப்பா' என்றேன். 'என்னுடைய முதல்கவிதைநூலை வரும் ஏப்ரல் ௨௭ அன்று வெளியிட வேண்டும். அனைத்தும் ஈழம் சார்ந்த கவிதைகள். அதற்கு தங்களின் வாழ்த்துச்செய்தியொன்று வேண்டும் அண்ணா' என்றாள். 'மகிழ்ச்சிப்பா. விரைவில் அனுப்பி வைப்பா' என்றேன். 



வரும் ஞாயிறு (ஏப்ரல் ௨௭, வ௦௧௪) அன்று நடைபெறும் 'கலைகளுக்குள் ஓர் சங்கமம்' விழாவில் தன்னுடைய 'உன்னிடம் திருடிய பொய்கள்' பாடல் தொகுப்பு வெளியிடுவதோடு தன்னுடைய முதல் கவிதைநூலையும் வெளியிட்டு விடலாம் என்ற எண்ணத்தில் தங்கச்சி இருந்தாளென்று இப்போது புரிகிறது. 

அவள் என்னிடம் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பேசியபிறகு சில நாட்களில் மருத்துவமனை, சிகிச்சை என கடந்த ஒன்றரை மாதங்கள் ஓடிப்போயின. 

தங்கச்சி,

இந்த அண்ணா எழுதிய "‘ஆற்றுங்கவிச் செல்லம்’ பாமினி - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2014/04/blog-post_6858.html" என்ற என்னுடைய இந்த கவிதையை என்னுடைய கையெழுத்துபிரதியோடு பத்திரமா வச்சுக்கடா. சரியா? 

நான் முதுநிலை கணினிப்பயன்பாட்டியல் (M.C.A.,) படிக்கும்போது ௨௦௦௬ ல் அழகப்பா பல்கலைக்கழக தமிழ் நண்பர்களோடு சேர்ந்து 'புதிய சிற்பி' என்ற மாத இதழை நடத்தினோம். அந்த இதழின் பொறுப்பாசிரியர்களுள் ஒருவராக என்னை நியமித்த அந்த இதழின் ஆசிரியர் முதல்மாத இதழின் தலையங்கத்தில் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வந்தவர் என்னுடைய கவிதையேடுகளை படித்துவிட்டு என்னை இப்படித்தான் அறிமுகப்படுத்தினார். 

ஒரு சங்கீதக் கலாநிதியைப் போல், தொடையில் தட்டிப் பாடச்சொல்லும் கவிதைகளைத் தருபவர் முனைவென்றி நா. சுரேஷ்குமார்.

சந்தமும் தொடைநயமும் துள்ளலோசையும் சேர்ந்துவருவதே நான் எழுதும் கவிதைகளுக்கான இயல்பான கவிதைநடை. இந்த எனக்கான இயல்பான கவிதைநடையிலேயே உனக்கான வாழ்த்துக்கவிதையும் என்னால் எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துச்செய்தி கேட்டாய். வாழ்த்துக்கவிதை அனுப்பியிருக்கிறேன். 

முதல் கவிதைநூலை வெளியிட முடியவில்லை என நீ வருத்தப்படாதே. விரைவில் நல்லபடியாக வெளியிடுவோம். 

ஒரு மாதத்திற்கு முன்பு நீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது skype IM ல் நலம் விசாரித்தேன். மறுமுனையிலிருந்து 'பாமினியில்லை' என்று பதில் வந்தது. 'தங்கச்சியை நான் மிகவும் கேட்டேன் என்று சொல்லுங்கள்" என்றேன். 'சரி' என்று பதில் வந்தது. சில நாட்கள் கழித்தபிறகு skype IM ல் 'தங்கச்சி எப்டி இருக்கா? அவளுக்கு என்மேல ரொம்ப பாசம்' என்று அனுப்பினேன். மறுமுனையிலிருந்து 'நீங்கள் நலம் விசாரித்ததை ஏற்கனவே சொல்லிவிட்டேன். பாமினி சிரிச்சுக்கிட்டே சொன்னவ, அண்ணாவுக்கு என்மேல ரொம்ப பாசம் என்று.'

பிறகொருநாள் நான் skype IM ல் பேச முயற்சித்தேன். காணொளி அழைப்பு வந்தது. மருத்துவமனையில் நீ நன்றாக உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாய். நான் ஞாபகமில்லாமல் 'தங்கச்சி ஏன் தூங்குது?' என்று கேட்டபிறகே எனக்கு புரிந்தது நீ இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறாய் என்று. அதற்குள் யாரோ பக்கத்தில் உன்னை எழுப்ப முயற்சித்தனர். 'தங்கச்சி நல்லா ஓய்வெடுக்கட்டும். அவள தொந்தரவு செய்யவேண்டாம்' என்று சொன்னேன். 

நீ சென்னைக்கு வரும்போது மறக்காம என்னுடைய அலைபேசிக்கு அழைத்து நீ வந்த தகவலை சொல்லிவிடு. உன்னை நேரில் சந்திக்க நான் எங்கிருந்தாலும் ஓடோடி வந்துவிடுகிறேன். சரியா? உனக்கு பொம்மைகள் வேணும் னா நான் வாங்கித்தர்றேன். நீ ஏற்கனவே ஒரு புலிபொம்மை வச்சிருக்கிற தானே. உனக்கு கரடி பொம்மை பிடிக்குமா? நான் ஏற்கனவே சொன்னமாதிரி ஒரு பெரிய்ய்ய கரடி பொம்மை வாங்கித்தர்றேன்.

ஆத்தா, நம்முடைய பாசமும் மழலைகள் போன்ற அன்பும் நம்முடைய மரணத்தைத்தாண்டியும் இப்படியே தொடரணும். இதுதான் இந்த அண்ணாவோட விருப்பம்.

‘ஆற்றுங்கவிச் செல்லம்’ பாமினி - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2014/04/blog-post_6858.html

------------



---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்
Date: 2014-03-16 12:21 GMT+05:30
Subject: என் தங்கைக்கு இன்று பிறந்தநாள்.
To: 


என் தங்கைக்கு இன்று பிறந்தநாள். அவள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள். 

என்னுடைய அன்பும் வேண்டுதல்களும் அவளை நல்லபடியாக நீண்ட ஆயுளோடு தொடர்ந்து உயரத்தில் அவளை கொண்டுபோய் சேர்க்கும்.

அவ இன்னும் நிறைய சாதிப்பா.


‘ஆற்றுங்கவிச் செல்லம்’ பாமினி








என் தங்கச்சிப்பிள்ள பாமினி (திரைப்படப் பாடலாசிரியை) க்கு நான் எழுதிய கவிதையிது.


அண்ணனென்று எப்போதும் அழைக்கின்ற மங்கை
எண்ணமதில் நினைவாக இருக்கின்ற தங்கை
வண்ணவண்ணக் கவியிசைக்க வார்த்தைவழி கங்கை
அன்னையிங்கு தூரநிற்க அரவணைக்கும் செங்கை

செல்லச்செல்லப் பிள்ளையென சொல்லியுளம் துள்ளும்
கள்ளமில்லா உள்ளமதில் காணுமன்பு வெள்ளம்
சொல்லச்சொல்லக் கரைந்துவிழும் கள்ளமிலா உள்ளம்
அள்ளஅள்ளக் குறையாமல் ஆற்றுங்கவிச் செல்லம்

கங்கைநதி வைகைநதி காவிரியும் காயும்
தங்கையிவள் தமிழ்கேட்க திரையுலகே சாயும்
மங்கையிவள் மொழிகேட்டே மாண்டபுலி பாயும்
சிங்களவன் சிங்கத்தின் செருக்கெல்லாம் மாயும்

கற்பனையின் உச்சம்நின்று கவிக்குயிலும் பாடும்
சொற்குவியல் வற்றாமல் சிந்தைவழிந் தோடும்
கற்றதமிழ் பாடல்களில் களிநடன மாடும்
உற்றதுணைச் சுற்றமெலாம் இவளெங்கே தேடும்

கவிக்குயிலின் பாடல்களை கேட்பவன்தான் நானும்
செவியோரம் கேட்டுவிட்டால் சொட்டும்மலைத் தேனும்
தெவிட்டாத வார்த்தைகளில் துள்ளுமிசை நாணும்
புவியிலிங்கு கூவுகின்ற புதுக்குயிலின் கானம்

அழுதழுது எழுதிவைத்தேன் அன்பிலிந்த மெட்டு
விழுந்தெழுந்து தொழுததமிழ் விளையாடும் தொட்டு
பழகுந்தமிழ் அழகுறவே பாடி;கைகள் தட்டு
இளங்குயிலே உமதுபுகழ் இமயமதில் நட்டு

வாசமுள்ள நமதுதமிழ் வார்த்தைகளால் பாட்டு
நேசமிக்க நெஞ்சமதில் நிறையுமூச்சுக் காற்று
பேசுந்தமிழ் குழவியிந்த பாமினியும் கேட்டு
அசைந்திசைந்து ஆடிடுவாள் அண்ணனிவன் கூற்று