Sunday, May 16, 2010

பிறந்திருப்பேன்!

நீராய் பிறந்திருப்பேன்!
உன்தாகம் தீர்க்க...

காற்றாய் பிறந்திருப்பேன்!
உன் இதயம் துடிக்க...

மரமாய் பிறந்திருப்பேன்!
உனக்கு நிழல்தர...

மழையாய் பிறந்திருப்பேன்!
நீ நனைந்துமகிழ...

கனியாய் பிறந்திருப்பேன்!
உன்பசி போக்க...

பூவாய் பிறந்திருப்பேன்!
உன்கூந்தல் மணம்வீச...

செருப்பாய் பிறந்திருப்பேன்!
உன்பாதம் காக்க...

கால்கொலுசாய் பிறந்திருப்பேன்!
உன் அசைவில் சிணுங்க...

ஆனால்...
என்ன செய்வது?
மனிதனாய் பிறந்துவிட்டேனே!!

இன்னும்பல ஜென்மங்கள் கேட்பேன்!
இவையனைத்தையும் நிறைவேற்ற...

உன்மடியில்...

நீ பட்டாம்பூச்சிதான்!
நெருங்குகிறேன்
பறந்துவிடுகிறாய்!!

நீ கண்ணாடிதான்!
பார்க்கிறேன்
சிதறிவிடுகிறாய்!!

நீ மழைதான்!
மேகமாய் கறுக்கிறேன்
உன்னைக் காணவில்லை!!

நீ நீர்க்குமிழிதான்!
தொடுகிறேன்
உடையப்பார்க்கிறாய்!!

நீ கவிதைதான்!
எழுதத்துடிக்கிறேன்
வார்த்தையாய் உன்
கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை!!

நீ வான்மதிதான்!
அழைக்கிறேன்
எட்டாத்தூரத்தில் தான் இருக்கிறாய்!!

நீ குயில்தான்!
குரல்மட்டும் கேட்கிறது
பார்க்கமுடிவதில்லை!!

காதலின் முடிவு
மரணம்தான் என்றால்
மரிக்க சம்மதம்
உன் மடியில்...

என் அக்கா!

இக்கவிதை என் பெரிய அக்கா மகேஸ்வரிக்கும் என் சின்ன அக்கா பாண்டிலக்ஷ்மிக்கும் சேர்த்து எழுதிய கவிதை


பார்க்கையிலே சிறுபிள்ளை!
பழகையிலே கொடிமுல்லை!! - அவள்
நகைப்பிலே சிற்றழகு!
கோபத்திலே பேரழகு!! - அவள்
அழுகையிலே என் சேய்!
தாலாட்டுகையிலே என் தாய்!! - அவள்
கட்டுப்பாட்டிலேயே எனக்கு வேலி!
நெருக்கத்திலே எனக்குத் தோழி!! - அவள்...
அவள் தான் என் அக்கா!!

பொய் சொல்லாதே!

துரத்தித் துரத்தி காதலித்தேன் உன்னை!
நீ கண்டுகொள்ளவில்லை எனனை!!
வலியவந்து உன் தொலைபேசி எண்ணை
கேட்டு தொல்லை செய்தேன் உன்னை!!
கனவில் தினமும் உன்னை
காதலிப்பதாய் நீ கூறினாய் என்னை!!
பின்னர் எனக்குத்தெரிந்தது உண்மை...
என்காதல் தெரிந்தும் சொன்னாய் பொய்யை!!
நான் சாவதற்கு முன்பாவது பெண்ணே...
உன் கடைக்கண்ணை காட்டிவிடு கண்ணே!!

பிரிவில் மட்டும்...

இருளாய் இருந்தவன் நான்...
ஒளியாய் மாற்றியவள் நீ!
கரையாய் இருந்தவன் நான்...
கலங்கரையாய் மாற்றியவள் நீ!
வார்த்தையாய் இருந்தவன் நான்...
கவிதையாய் மாற்றியவள் நீ!
உன்னுள் ஒளிந்திருப்பவன் நான்...
அதை அறியாதவளாய் நீ!
பிரிவில் மட்டும் நான்...
எங்கோ தொலைவில் நீ!!

கையைக்கொஞ்சம் தட்டு!

கையைக்கொஞ்சம் தட்டு! - உன்
கையைக்கொஞ்சம் தட்டு!! - உன்
கண்ணில்பிறந்த காதலாலே
கவிதைமழையைக் கொட்டு!!

வெட்டிக்கதையை விட்டு - நீ
வெட்டிக்கதையை விட்டு
வேகமாக முன்னேறியே
வெற்றிச்சிகரம் எட்டு!!

வியர்வைத்துளிகள் பட்டு - உன்
வியர்வைத்துளிகள் பட்டு
விதையுங்கூட விருச்சமாகும்
வெற்றிச்சிகரம் எட்டு!!

விண்ணைநீயும் தொட்டு - அந்த
விண்ணைநீயும் தொட்டு
வானவில்லின் வண்ணங்களை
வாரிஇறைத்துக் கொட்டு!!

கையைக்கொஞ்சம் தட்டு! - உன்
கையைக்கொஞ்சம் தட்டு!!

தெரசா!

உணர்வுகளில் உன்னதமானது
அன்னையின் அன்பு!
அந்த அன்பின் விதை
உன்னிலிருந்துதான் துவங்கியதோ...!!

மண்ணுலக உயிர்கள்
வாழ்வதன் நோக்கம்
மகத்துவமான அன்பிற்காய் தான்!
ஆத்மாவின் தாகம்கூட
அன்புதானே அம்மா!!

உன்னைப்பற்றி
சொல்லநினைக்கும்போது
உள்ளம் உருகுகிறது!
கண்ணீர் பெருகுகிறது!!

அன்பின் திருவுருவமாய்
கருணையின் மறுவுருமாய்...
நீ!!

அனைவருக்கும்
தனித்தனியே அன்புகாட்ட
அவரவர்க்கு அன்னையுண்டு!
இப்பிரபஞ்சத்திற்கே அன்னையென
நீ உதித்திருக்கிறாய்!!

இப்பிரபஞ்சத்தின்
எல்லை எதுவென
எனக்கு தெரியாது!
அன்பின் எல்லையும்
அதுபோலத்தான்!!

உணர்வுகள் அனைத்துமே
சிற்றின்பத்தைத் தரக்கூடியதுதான்!
பெருந்துன்பத்தைத் தரக்கூடியதுதான்!!
இவ்வுணர்வுகளில்
அன்புமட்டும் விதிவிலக்கு!
அன்பைத்தேடும் உயிர்களின்
உள்ளங்களில் நீ ஓர் ஒளிவிளக்கு!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. நந்தலாலா (இணைய இதழ்) - 14-01-2012

வானவில்!

மழையரசியாய்
நீ என் பூமிகடந்ததும்
உயிர் பெற்றன
உனக்கான சாதனைகள்!

நீ வந்த
திசைநோக்கி
திரும்பிப்பார்த்தேன்!

உன்பாதச்சுவட்டில்
ஏழுவண்ணங்கள்!!

நேதாஜி!

வீரத்தின் விளைநிலமாய்...
விவேகத்தின் தலைமகனாய்... - நாம்
நேசிக்கின்ற பாரதத்தை
சுவாசிக்கப் பிறந்தவன்
நம் நேதாஜி!!

வெள்ளையனின்
வஞ்சந்தனை வீழ்த்த... - இந்தியனின்
அச்சந்தனை சாகடிக்க... - அந்நியனை
துச்சமென மிதிக்க... - இந்திய
தேசியப் படைதனை நிறுவியவன்
நம் நேதாஜி!!

வேற்று நாட்டிலும்
வெள்ளையனை எதிர்க்க...
இளைஞர்கள் படை அமைத்து
இளைஞர்களுக்கு வழிகாட்டியவன்
நம் நேதாஜி!!

இன்றும்
நெஞ்சில் உரமிக்க இளைஞர்களின்
நெஞ்சமெங்கும் நிறைந்திருக்கிறான்
நம் நேதாஜி!!

கதை சொல்லவா?

கதை சொல்லவா தமிழனே! - புதுக்
கவிதை சொல்லவா தமிழனே!!

எனக்கு
கிடைக்கவில்லை
வேலையென்று...
பணியவில்லை
பணியென்று...
வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கே
வேலைதேடிச் சென்ற
கதை! - என்
கதை!!

என் வீட்டுப் பூட்டிற்கு
கிடைக்கவில்லை
சாவியென்று...
தொலைந்துபோனது
திறவுகோலென்று...
திருடனிடத்திலே
சாவிகேட்ட
கதை! - என்
கதை!!

என் நாட்டில்
வீழ்ந்துபோனது
வீரமென்று...
மறந்துபோனது
மறமென்று...
சாகப்போகும் கோழையிடமே
வீரம் கேட்ட
கதை! - என்
கதை!!

என் பசிக்கு
கிடைக்கவில்லை
உணவு என்று...
அழிந்துவிட்டது
ஆகாரமென்று...
பூதத்திடமே
உணவு கேட்ட
கதை! - என்
கதை!!

என் துன்பத்திற்கு
அமையவில்லை
ஆறுதலென்று...
இனியில்லை
இன்பமென்று...
காலத்திடமே
ஆருடம் கேட்ட
கதை! - என்
கதை!!

என் உயிருக்கு
கிடைக்கவில்லை
உடல் என்று...
மெய்யில்லை
மெய்யென்று...
மந்திரவாதியிடமே
புது உடல் கேட்ட
கதை! - என்
கதை!!

என் கவிதைகட்கு
வறண்டுவிட்டன
வார்த்தைகள் என்று...
செத்துப்போனது
சந்தமென்று...
கவிதையான
என் காதலியிடமே
வார்த்தைகள் கேட்ட
கதை! - என்
கதை!!

கதை சொல்லவா தமிழனே! - புதுக்
கவிதை சொல்லவா தமிழனே!!