Saturday, July 6, 2013

இவர் இல்லாத் தமிழ்நாடு

தன்னலம் கருதாமல், அரசியலில் பதவிக்கு ஆசைப்படாமல் வாழ்ந்த தலைவரையே 'ஜாதி வளர்த்த தலைவர்' என்று தூற்றும் இந்தத் தமிழ்ச் சமூகம் நன்றி மறந்த தமிழ்ச் சமூகம் தான்.

இவரைப் போன்ற நல்ல தலைவர்கள் கிடைக்கவில்லையே என்று ஏங்கும் என்னைப் போன்றவர்களுக்கு மத்தியில் இவரைத் தேர்தலில் தோற்கடித்த இந்த தமிழ்நாட்டுத் தமிழினம் நன்றி மறந்த இனம் தான்.

அவ்வப்போது நான் சந்திக்கும் நண்பர்களில் ஒரு சிலர் இவரைப் பற்றி 'சாதி வளர்த்த தலைவர், சாதி வளர்த்த முதல்வர்' என்று சொல்லுவார்கள். எனக்கு மனதிற்கு வருத்தமாகவே இருந்தது. அவ்வப்போது அந்த வார்த்தை என் மனதை வலிக்கச் செய்தது. அந்த வலி இன்று இந்தக் கவிதையைத் தந்திருக்கிறது.


யாரு இவரு – எந்த
ஊரு இவரு
விருதுநகரு – இந்த
ஊரு இவரு

விடுதலையும் பெற்றிடவே
பாடு பட்டாரு – அவரு
படிப்பைவிட்டு குடும்பம்விட்டு
சிறையைத் தொட்டாரு
(யாரு இவரு)

மதியஉணவு திட்டத்தினை
கொண்டு வந்தாரு – அவரு
மனிதமதை மதிப்பதற்குக்
கற்றுத் தந்தாரு
(யாரு இவரு)

குழந்தைகளின் கல்விக்காக
உதவி செஞ்சாரு – அவரு
வாழ்வினிலே அனுபவத்தை
மனதில் நெஞ்சாரு
(யாரு இவரு)

குழந்தைகளின் சிந்தனையை
செதுக்கி வச்சாரு – அவரு
அரசியலில் நேர்மைதனை
தினமும் தச்சாரு
(யாரு இவரு)

எந்தப் பள்ளிக்கூடத்தில
அவரும் கற்றாரு – அவரு
படிக்காத மேதையின்னு
பேரும் பெற்றாரு
(யாரு இவரு)

தாய்மொழியில் மேடைதனில்
பேசி வந்தாரு – அவரு
நாடுபல நம்உடையில்
சுற்றி வந்தாரு
(யாரு இவரு)

நாடு,மக்கள் நலம்பெறவே
வாழ்ந்து வந்தாரு – அவரு
தொண்டுசெய்ய வரந்தனையே
வாங்கி வந்தாரு
(யாரு இவரு)

தனக்கென்று திருமணமும்
செய்யாதவரே – தன்
கட்சிவளர்க்க மற்றவரை
வையாதவரே
(யாரு இவரு)

ஏறத்தாழ பத்தாண்டு
முதல்வர் ஆகினார் – இவரு
அரசரையே உருவாக்கும்
திறமை ஏகினார்
(யாரு இவரு)

மொழி வளரப் பாடுபட்ட
தலைவர் இவருதான் – புதுப்
பிரதமரையே பரிந்துரைத்த
இவரு பவருதான்
(யாரு இவரு)

தான்நினைத்த நேருமகளை
தலைவர் ஆக்கினார் – அவள்
யாரென்று இவரையேதான்
திருப்பித் தாக்கினாள்
(யாரு இவரு)

கருப்புநிறக் காந்தியென்று
போற்றி வந்தாங்க – அவங்க
தேர்தலிலே இவருக்குத்தான்
தோல்வி தந்தாங்க
(யாரு இவரு)

விளக்கையணை சொல்லிவிட்டு
படுத்து விட்டாரு – பிறகு
படுத்தவுடன் நிம்மதியாய்
உயிரை விட்டாரு
(யாரு இவரு)

தன்னலமே கருதாத
தங்கத் தேருதான் – அவரைக்
கேட்டாலே பாமரனும்
புகழும் பேருதான்
(யாரு இவரு)

முடிவுகளை எடுப்பதிலே
மன்னன் தானுங்க – அவரு
போலவொரு மனுசனுந்தான்
இன்று வேணுங்க
(யாரு இவரு)

இவர்போல மனுசங்களைப்
பெற்ற நாடுதான் – இன்று
இவரில்லாத் தமிழ்நாடு
ஊழல் காடுதான்
(யாரு இவரு)

4 comments:

நடராஜன் கல்பட்டு said...

தன்னிகரில்லாத் தலைவர் காமராஜர். அவர் போன்றோரை இக்காலத்தில் காண்பது என்பது கனவுதான்.

அவரது மேடைப் பிரசங்கங்களைக் கேட்டு அவரிடம் கையெஃஸுத்தும் நான் பெற்றேன் எனது சிறு வயதில் என நினைக்கப் பெருமையாக இருக்கிறது எனக்கு.

sugan said...

காந்தியத்தின் கடைசி சாட்சி , அவரை பற்றி தவறாக பேச இன்றிய தமிழகத்தில் எந்த ஒரு உயிருக்கும் தகுதியில்லை. தண்டஹி பெரியார் மற்றும் தோழர் ஜீவா அவர்களால் தாங்கள் வாழும் காலத்திலயே போற்றப்பட்ட மனிதன் காமராஜ். கருணாவிற்கும் ஜெயாவிற்கும் வோட்டுப்போடும் தமிழ் இனம் இந்த கர்மவீரர் பற்றி பேச என்ன தகுதி உள்ளது.

தஞ்சை கோ.கண்ணன் said...

தந்தை பெரியாருடன் இணைந்து பணியாற்றிய காமராசர் சாதித் தலைவரே ! அவருக்குப்பின் வந்த முதல்வர்கள் அனைவரும் சாதிகளை ஒழித்த பெரியவர்களே ! ஆம்! உண்மை!

ஏழை எளிய மக்களும் கல்விபெற அனைவருக்கும் கல்வி என்று உயர்நிலைப் பள்ளி இலவயக் கல்வி அளித்த, கல்விக் கண் திறந்த, நீர் வளங்காத்து அணைகள் கட்டி, பொதுத் துறைப் பெரு நிறுவனங்களை தமிழகத்திற்கு கொணர்ந்த, சிறுதொழில் பெருகக் கட்டமைப்புகளை உருவாக்கிய, ஊழலற்ற அரசை, நேர்மையுடன் நடத்திய, கிழிந்த வேட்டியுடன் அரசு மருத்துவ மனையில் கிடந்த நேர்மையாளர் கக்கன் போன்றோரை உள்துறை அமைச்சராகக் கொண்ட இறக்கும்போதும் வெறும் நூறு ரூபாயுடன் இருந்த பெருந்தலைவர் காமராசர் சாதித் தலைவரே !
தமிழ்ச் சாதி என்ற சாதியைச் சேர்ந்த சாதித்த தலைவரே !

முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வை said...

@ நடராஜன் கல்பட்டு

அவர் இல்லாத காலத்தில் வாழ்கிறேனே என்று நான் வருத்தப் படுகிறேன் ஐயா.