தமிழ்நாடு அரசு நூலகத்துறை சார்பில் என்னுடைய இரு நூல்கள் (அழகு ராட்சசி, குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்) தேர்வாகியுள்ளன. இனிமேல் என்னுடைய இரு நூல்களையும் தமிழ்நாட்டில் உள்ள எல்லா நூலகங்களிலும் வாசகர்கள் படிக்கலாம்.
௨௦௦௪ ம் ஆண்டு என் மனதில் உதயமான காதல் ௨௦௦௫ ல் தொடங்கி வைத்த கவிதைப்பயணம் இன்றும் அதே ஆர்வத்தோடு தொடர்கிறது.
௨௦௦௬ ல் அழகப்பா பல்கலைக்கழக ஐந்தாம் பருவத்தின் தேர்வுக்காக படிக்க விடுமுறைக்கு (Study holidays) செல்ல அனைவரும் நூலகங்களுக்கு சென்று Internet Programming, Java என்று எடுக்க, நான் நூலகத்திலிருந்து பட்டுக்கோட்டையார் பாடல்கள் மற்றும் சில கவிதைநூல்களை எடுத்துக்கொண்டு மார்போடு அவற்றை அணைத்துக்கொண்டு அழகப்பர் சிலைக்கருகே நடந்து வந்துகொண்டிருந்தேன். அப்போது 'திமிரு' படத்தின் 'மானாமதுர குதிர' என்ற பாடலுக்கான நடனக்காட்சிகள் நடந்தேறிக்கொண்டிருந்தன.
என்னுடைய தாத்தா பொதுவுடைக்கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு சிறை, போராட்டம் என்று வாழ்ந்தவர். அவர் நடத்திய மளிகைக்கடை இருந்தவரை அந்த கடையில் தோழர் ஜீவானந்தம் புகைப்படம் இருந்தது. தாத்தாவுக்கு பட்டுக்கோட்டை திரு. கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல்கள் அடங்கிய நூலை தாத்தா தன்னுடைய மரப்பெட்டியில் பாதுகாத்து வந்தார் என்பது பின்னர் தெரியவந்தது.
சாய்வு நாற்காலி - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/12/blog-post_17.html
௨௦௦௮ ஆம் ஆண்டில் அமரர் திரு எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் நடத்திய மக்கள் சக்தி இயக்க உறுப்பினராக இருந்தபோது திருவான்மியூரில் அப்போதிருந்த அலுவலத்தில் இயக்க நண்பர்கள் சிலரோடு அவர்களுக்கு தேவையான உதவிகளை என்னால் முடிந்தவரை செய்துகொண்டிருந்த தருணம் அங்கு என் கண்களில் பட்டது ஒரு மாதஇதழ். அதன் பெயர் 'மகாகவி'. அதன்பிறகு அஞ்சலட்டை வழியே திரு. வதிலைபிரபா அவர்களுடனான தொடர்பு ஏற்பட்டது.
என்னுடைய முதல் கவிதைநூலான 'அழகு ராட்சசி' க்கு அணிந்துரைக்காக ஒரு அறிமுக பாடலாசிரியரிடம் அணுகினேன். ஒருசில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக கிடைக்காமற்போனது.
அதனைத் தொடர்ந்து ஐயா வதிலைபிரபா, மன்னாரமுதன் மற்றும் இன்னொமொரு அறிமுக பாடலாசிரியர் என மூவரின் அணிந்துரையோடு வெளிவரவிருந்தது என்னுடைய அழகு ராட்சசி. சென்னை சத்யம் திரையரங்கிற்கு அந்த அறிமுக பாடலாசிரியர் இசைவெளியீட்டு விழாவிற்கு வருவதாக முகநூல் ஊடாக சொன்னபோது என்னுடைய அலைபேசி எண்ணை கொடுத்து வைத்து அவரை நான் பார்க்க அங்கு வருவதாகச் சொல்லியிருந்தேன். சென்னையில் அதுவும் திருவல்லிக்கேணியிலேயே ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்தும் முதன்முறையாக அந்த பாடலாசிரியரை அப்போது அவர்மீதிருந்த அன்பால் நேரில் பார்க்க இரண்டு மணிநேரத்திற்கு முன்பே போனேன். ஆனால், அவரை நான் நேரில் சந்திக்க இயலாமல் போனது.
மன்னாரமுதனோடு முகநூலின்வழியே மட்டுமே அப்போதைய சூழலில் பேசிவந்த போதிலும் ஐயா வதிலைபிரபா மற்றும் மன்னாரமுதன் என இருவரின் அணிந்துரையுடன் வெளிவந்த அழகு ராட்சசியில் மன்னாரமுதன் எழுதிய அணிந்துரையில் சொல்லப்பட்ட கீழ்க்கண்ட வரிகள் என்மனம் கவர்ந்தவை.
'பணத்தை மாத்திரமே தேடும் இன்றைய உலகில் அன்புதான் பெரிய பொக்கிஷம் என உணர்த்த முயற்சிக்கிறது இந்த கவிதைநூல்.'
என்னுடைய முதல்கவிதைநூலை அச்சகத்திலிருந்து வாங்கிய அன்று திருவல்லிக்கேணியில் ஒரே அடைமழை. ஐயா வதிலைபிரபா என்னிடம் தந்த பத்துப்பிரதிகளை மார்போடு அணைத்துக்கொண்டு தூரலில் நடந்தேன். என்னோடு நடந்து வந்த ஐயா வதிலைபிரபா என் முகத்தை உற்றுப்பார்த்தவாறு 'முதல்நூலை பெற்ற உங்கள் முகம் எப்படி உள்ளது' என்பதை பார்த்ததாக சொன்னார்.
என்னுடைய இரண்டாவது நூல் 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' க்கான அணிந்துரையை ஐயா மு. முருகேஷ், கவிஞர் இரா. இரவி, 'கூடுகள் சிதைந்தபோது' புகழ் திரு. அகில் என்ற அகிலேஷ்வரன் (கனடா) மற்றும் வித்யாசாகர் அண்ணா ஆகியோரிடம் வாங்க முயற்சித்து கவிஞர் இரா. இரவி அவர்களை தவிர மற்ற மூன்று பேர்களின் அணிந்துரைகளோடு வெளிவந்தது என்னுடைய ஹைக்கூநூல்.
என்னுடைய இரண்டாவது நூல் 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' க்கான பாடுபொருள் தொடர்பாக கவிஞர் இரா. இரவி அவர்கள் இந்த நூலுக்கு அணிந்துரை தரமுடியாமை குறித்து அலைபேசி ஊடாக என்னிடம் தெளிவாக விளக்கினார்.
என்னுடைய இரண்டாவது நூல் 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' வெளிவர நான்கு மாதங்கள் இருக்கும்போது என்னுடைய அடுத்த ஹைக்கூ நூலிற்கான அணிந்துரையை கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு அஞ்சலில் அனுப்பினேன். அவருக்கு கிடைத்த அடுத்த சில நாட்களிலேயே அணிந்துரையை இணையம் வழியே அனுப்பி வைத்தார்.
இதுவரை என்னுடைய இருநூல்களுக்கும் அணிந்துரை வழங்கிய மேற்சொன்ன என் அன்புக்கினிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
என்னுடைய முதல்நூலை வெளிவந்த அப்போதைய காலகட்டத்தில் சென்னையில் உள்ள ஒருசில புத்தகக் கடைகளின்மூலம் ஈழத்தில் வைக்க இருமுறை முயற்சி செய்தேன். தோற்றுப்போனேன். சில மாதங்களுக்குமுன்பு சென்னையில் நான் சந்தித்த ஒரு ஈழத்து இசையமைப்பாளரிடம் என்னுடைய இருநூல்களின் பிரதிகளை கொடுத்து 'உங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைத்து அதில் கிடைக்கும் பணத்தை உங்கள் பகுதிகளில் உள்ள உதவிபெற இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்' என்று சொன்னேன்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பிலிருந்து காலம் ஒருசில இக்கட்டான சூழலில் சிக்கவைத்தாலும் கிடைத்ததை பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறேன். உதவி என்று கேட்டவுடன் நான் என்ன சூழ்நிலையிலிருந்து கேட்கிறேன் என்று அறியுமுன்னே தான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேரப்போகும் முன்னே எனக்கான உதவிகளை செய்ய ஏற்பாடு செய்து வைத்த, எப்போதும் 'அண்ண்ண்ண்ணா அண்ண்ண்ண்ணா' என பள்ளிக்கூட சிறுமிபோல என்னை எப்போதும் அன்போடு அழைக்கும் என் தங்கச்சி பாமினியின் அன்பையும் என்னுடைய சூழ்நிலையை சொன்னவுடன் எனக்காக ஏதாவது உடனடியாக உதவிசெய்ய முடியுமா என்று முயற்சித்து தொடர்ந்து என்னை முன்னேற்றிப் பார்க்கவேண்டும் என எண்ணும் வித்யாசாகர் அண்ணாவின் அன்பையும் பத்திரமாய் என்னுள்ளே வைத்திருக்கிறேன்.
என்னுடைய இரு கவிதைநூல்களோடு சேர்த்து என்னுடைய இரண்டாவது கவிதைநூலிற்கு சமர்ப்பணம் பகுதியில் என் தங்கச்சி பாப்பா சோபனாவையும் எங்க வீட்டு விஷ்ணு பாப்பாவையும் (மூன்று மாத புகைப்படம்) நூலகங்களுக்கு சென்று வாசிக்கும் வாசகர்கள் வாழ்த்தி மகிழ்வார்கள். அதோடு என்னுரை பகுதியில் என்னுடைய இளவரசி பாப்பா, மகேஸ்வரி அக்கா, பாண்டிலக்ஷ்மி அக்கா, மகாலட்சுமி கன்னுக்குட்டி, தோழி பிரியதர்சினி பாப்பா, விசாலம் அக்கா, தோழி ஸ்வேதா தேவி மற்றும் தம்பி துரைமுருகன் இவர்கள் மீதுள்ள அன்பை வாசகர்கள் வாசிப்பார்கள்.
என்னுடைய இரு நூல்களும் தமிழ்நாடு அரசு நூலகங்களில் வாசிப்பதற்கு வைக்கப்படவுள்ளன என்ற செய்தியை கேட்டவுடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அணிந்துரை வாங்க அனுப்பி வைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட (முழுக்க முழுக்க காதல்) ஒரு கவிதைநூலுக்கான கவிதைகளை தூசிதட்டி எடுத்திருக்கிறேன்.
இரண்டாவது காதலும் கானலாகிப் போனாலும் மனதில் பூத்த முதற்காதல் மட்டும் பத்திரமாய் அழியாமல் இருக்கிறது என்னுள்ளே.
----------
பிரம்மனின் ஆணுருவம்
உன் அப்பா!
பிரம்மனின் பெண்ணுருவம்
உன் அம்மா!!
பேரழகியான
உன்னை படைத்ததனால்...
- அழகு ராட்சசி கவிதைநூலிலிருந்து
-------------------------------------------------------------





