Friday, January 14, 2022

வயலோடு உறவாடி... புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்

பாடல் வரிகளுக்கான காணொளி - https://youtu.be/OfQaLfJHcQ4

என்னிடமிருந்து வெளிவந்த புத்தம்புது மெட்டு இது. நான் ஒரு ஆகச் சிறந்த பாடகனுமில்லை. எனக்கு இசையைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், கவிதைகளை, பாடல்களைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும். சிறுவயதில் என் அம்மா, அப்பா சொல்லித் தந்த தமிழ், சிறுவயதில் பாடசாலை வகுப்பறைகளில் நான் உன்னிப்பாக கவனித்தவை இவை மட்டுமே தமிழ் மீது தீராத காதலை உண்டாக்க வைத்தவை. மற்றபடி, இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் நான் கணினித்துறையில் படித்தமையால் தமிழை தொடர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு பறிபோனது. 

இருந்தபோதிலும் சமீப காலமாக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, இணையம் வழியே தூய தமிழ் தேசியம் குறித்த ஆராய்ச்சிக் காணொளிகள், கட்டுரைகள் போன்றவற்றை படித்ததன் விளைவாய் கவனித்ததன் விளைவாய், நான் இப்போது எண்ணிப் பார்க்கிறேன் "நாம் ஆரம்ப காலகட்டத்தில் நம்முடைய கவிதைகளில், கவிதை நூல்களில் தவறான வரலாற்றை முன்னுதாரணமாக பல இடங்களில் உவமையாக எழுதியிருக்கிறோம். இனி அந்த மாதிரியான தவறுகளை செய்யக் கூடாது. உவமையாகச் சொல்ல வேண்டிய இடங்களில் தமிழர் சார்ந்த உண்மை வரலாற்றை மட்டுமே முன்னுதாரணமாகச் சொல்ல வேண்டும். ஒரு போதும் நாம் சிறுவயதில் படித்த தமிழர்களைப் பற்றிய தவறான, கட்டுக் கதையான வரலாற்றை எந்த இடத்திலும் என்னையறிமல் கூட என் கவிதைகளில், பாடல்களில், பதிவுகளில் வெளிவந்து விடக்கூடாது, எழுதக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்".

நம்மிடமிருந்து வெளியே வரும் வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட மாத்திரை அளவில் அதாவது ஒரு குறிப்பிட்ட ஒலி அளவில், ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் அமைந்தால் போதும். அந்த வார்த்தைகளே தனக்குள் ஒரு மெட்டை தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டு நம்மை துள்ளலிசையோடு மெல்லிசையோடு பாட வைத்து விடும். அப்படித்தான் இந்தப் பாடலும். 

நான் கவிதை எழுதத் துவங்கிய 2004 ஆண்டு தொடங்கி என்னுடைய கவிதைகளை எழுதும் போதும் சரி, எழுதி முடித்தவுடன் மனதிற்குள் வாசிக்கும் போதும் சரி, என்னுடைய பெரும்பாலான கவிதைகள் பாடல்களாக ஏதோவொரு மெட்டுடன் ஒலித்ததை நான் கவனித்தே வந்திருக்கிறேன். அன்று முதல் கடந்த ஆண்டு வரை "நாம் எழுதும் கவிதைகளும் சரி. நமக்கு கிடைக்கும் மெட்டும் சரி, படிக்கும் வாசகர்களாலும் அதே மெட்டை பாடலாக பாடி உணர முடியும்" என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் 26 அன்று என் மருமகன் விஷ்ணுவின் பிறந்தநாளிற்காய் நான் எழுதிய பாடலை குரல் பதிவாக பகிரியில் (whatsapp) என் நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன். 

மருமகன் விஷ்ணுவின் பிறந்தநாளிற்காய் நான் எழுதிய பாடல் - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/04/blog-post_25.html

நான் B.Sc (C.S) படிக்கும்போது என்னோடு எமனேஸ்வரத்திலிருந்து B.Com படித்த என் நண்பர் சபரீஷ் பாண்டியன் பதில் அனுப்பியிருந்தார் "நீ அனுப்பியதை நாங்களாவே வாசித்திருந்தால் சாதாரணமாகத் தான் இருந்திருக்கும். ஆனால், நீ குரல் பதிவில் அனுப்பியதை கேட்ட பிறகு தான் அந்த மெட்டோடு கேட்கும் பாடல் வரிகள் இனிமையாகவும் கேட்பதற்கு சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. வாழ்த்துகள் ".

இவரின் பதிலை கேட்ட பிறகுதான் "நமக்குக் கிடைத்த மெட்டோடு பாடலை நாமோ அல்லது யாரோ ஒருவரோ பாடிக் காட்டினாலோ தான் வாசகர்களுக்குப் புரிகிறது. அவர்களாகவே வாசித்தால் பெரும்பான்மையோருக்கு அந்த மெட்டு புலப்படுவதில்லை. அவர்களுக்கு பாடிக் காட்டுவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார்" என்ற பேருண்மையை புரிந்து கொண்டேன். 

இந்தக் காணொளி என்னுடைய இரண்டாவது காணொளி. என்னுடைய முதல் காணொளி என் இரண்டாவது மகள் நிறைமதிக்கு எழுதிய பாடல் - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/07/blog-post.html

ஒரு இசையமைப்பாளரின் அடிப்படைத் திறமையே புதிது புதிதான மெட்டுக்களை உருவாக்குவது தான். குறிப்பிட்ட உணர்விற்கேற்ப குறிப்பிட்ட மெட்டு தான் பாடலுக்கு அடிப்படை. அதன் பிறகுதான், பாடல் வரிகள், பக்க வாத்தியங்கள், துணை இசைக்கருவிகள் அனைத்தும். மெட்டு மக்களுக்குப் பிடித்திருந்தால், அந்தப் பாடல் வெற்றியடைகிறது. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது.

கடந்த செப்டம்பர் 19, 2021 ஞாயிறு அன்று அதிகாலை 3 மணிக்கு என்னை தூக்கத்திலிருந்து என்னுடைய மன மகிழ்ச்சி என்னை எழுப்பி ஒரு மெட்டையும் "வயலோடு உறவாடி" என்று இந்தக் பாடலையும் தட்டச்சு செய்ய வைத்தது. பாடல் முதலில் வெளிவந்ததா மெட்டு முதலில் வெளிவந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், மெட்டோடு சேர்ந்தே பாடலின் ஒவ்வொரு வரிகளும் வெளிவந்தன.

இந்தப் பாடல் உருவான விதத்தை இங்கு சொல்வது மிகவும் விறுவிறுப்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும் என்பதால் இங்கு தொடர்ந்து சொல்கிறேன்.

கடந்த செப்டம்பர் 18, 2021 சனி மாலை 3.30 மணிக்கு மஞ்சள்பட்டினத்தில் இருக்கும் என் வீட்டிலிருந்து என் இரு சக்கர வாகனத்தில்  (bike) முனைவென்றிக்கு என் அம்மாச்சிக்கு (அம்மம்மா) சாப்பாடு கொடுத்து விட்டு நெல் விதைத்த வயலையும் பார்த்தது விட்டு வரலாம் என கிளம்பி ஊர் செல்லும் வழியில் ஊருக்கு வெளியே உள்ள எங்கள் வயலை பார்த்தேன். அப்போது தான் நெல் விதைத்திருந்தோம். பயிர்கள் முளை விட்ட நிலையில் மழையில்லாமல் கருகிப் போயிருந்தன. மிகவும் நான் அப்போது அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. அதே வேதனையோடு அம்மாச்சியைப் பார்க்க வீடு வந்து சேர்ந்தேன். மாலை 4 மணிக்கு வீடு வந்தபிறகு வயலில் விழுந்து கிடந்த பனம்பழத்தை ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ருசித்துத் தின்று கொண்டிருந்தேன். அப்போது இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். 

எங்கள் கடை மற்றும் வீட்டிற்கு எதிரே உள்ள முருகன் கோயிலின் கோபுரத்தை புகைப்படக் கருவியால் பத்தி செய்து கொண்டிருந்தார். நான் "நீங்கள் யார்?" என்று கேட்டேன். இரண்டு நபர்களில் ஒருவர் என்னருகே வந்து "என் பெயர் இராஜேந்திரன். நான் ஒரு தமிழ் பேராசிரியர். கோவையில் ஒரு கல்லூரியில் பணிபுரிகிறேன். இங்கு முனைவென்றி கொளஞ்சித் திடலில் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழியை நான் கண்டறிந்தேன். இது குறித்து பதிவு செய்து செய்தியாக வெளியிட News TN என்ற ஊடகத்திலிருந்து வந்தவர் அவர்" என சொல்லிவிட்டுச் சென்றார். அவர் சொன்ன செய்திகள் எனக்கு அவ்வளவு எளிதில் புரியாமலும் மிகவும் நம்ப முடியாமல் ஆச்சர்யமாகவும் இருந்தது. அவர்கள் சென்ற பிறகு மாலை 5 மணியளவில் கடுமையான மழை. மாலை 5  மணிக்குத் துவங்கி 7.30 மணி வரை இரண்டரை மணி நேரமாக வெளுத்து வாங்கியது. 

எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை. சற்றுமுன் தான் கருகிய பயிர்களை பார்த்து விட்டு "மழை பெய்தால் தான் பயிர்கள் பிழைக்கும். மழை பெய்ய வேண்டும்." என வேண்டிக் கொண்டே மிகவும் மன வேதனையோடு வீடு வந்து சேர்ந்தேன். அந்த வேதனையில் இருந்த எனக்கு இரண்டரை மணி நேரமாக பெய்த மழையால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மாலை ஆறு மணிக்கு இருள் சூழ்வதற்குள் மஞ்சள்பட்டணம் செல்ல வேண்டும் என நினைத்த எனக்கு இரு சக்கர வாகனத்தை எடுக்க முடியாத அளவிற்கு வாசலில் அன்று வெள்ளம் கரை புரண்டோடியது. அதனால் வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு பரமக்குடிக்கு செல்லும் பேருந்தில் இரவு 9 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். "கடுமையான மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. பயிர்கள் நன்றாக வந்து விடும்." என்ற மகிழ்ச்சியில் உறங்கினேன். 

அடுத்த நாள் ஞாயிறு அன்று அதிகாலை 3 மணிக்கு என்னை தூக்கத்திலிருந்து என்னுடைய மன மகிழ்ச்சி என்னை எழுப்பி ஒரு மெட்டையும் "வயலோடு உறவாடி" என்று இந்தக் பாடலையும் தட்டச்சு செய்ய வைத்தது. இந்தப் பாடலை எழுதும்போது எனக்குக் கிடைத்த மெட்டும் பாடல் வரிகளும் என்னை அளவு கடந்த மகிழ்ச்சியை அடைய வைத்தன. சில நாட்கள் கழித்து, முகநூலிலும் தினமணி, indian express போன்ற செய்தித்தாள்களிலும், youtube லும் என் சொந்த ஊர் முனைவென்றியைப் பற்றி 3500 ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊர் முன்னோர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழியைப் பற்றி செய்திகள் வெளிவந்ததை பார்த்த பிறகுதான் என்னால் நம்ப முடிந்தது. அன்று இராஜேந்திரன் சொன்ன செய்திகள் முழுமையாகப் புரிந்தன. 

முதுமக்கள் தாழி பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்பே இந்தப் பாடல் வரிகளில் என் ஊரைப் பற்றியும் வார்த்தைகள் வெளிவந்திருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்தபோது ஏதோவொரு உள்ளுணர்வும் என் ஊரின் மேல் உள்ள அளவு கடந்த பற்றுமே என் ஊரைப் பற்றியும் இந்தப் பாடலில் எழுத வைத்திருக்கின்றன என்பதை அதன்பிறகு உணர்ந்து மகிழ்ந்தேன்.

அதன்பிறகு என் ஊர் முனைவென்றியின் முதுமக்கள் தாழி குறித்து நான் நேரில் சென்று எடுத்த புகைப்படத்துடன் கூடிய என்னுடைய பதிவு - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/10/3200.html

வைகை ஆற்றின்  நீர் ஆயூர் கண்மாய்க்குச் செல்லும் கால்வாயின் கரையில் தான் எங்கள் வயல் அமைந்துள்ளது. ஆனாலும் அந்த நீரை எங்கள் வயலுக்கு பாய்ச்ச மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். முனைவென்றி கண்மாயும் எங்கள் வயலிலிருந்து சுமார் மூன்று மைல் கல் தொலைவில் இருக்கிறது. அங்கிருந்து தண்ணீர் பாய்ச்சலாம் என நினைத்தால் அந்த நீர் எங்கள் வயலுக்கு வருவதற்கு பழைய வாய்க்காலும் பாராமரிக்கப் படவில்லை. அதைத்தாண்டியும் வரும் வழியில் உள்ள வயல் காரர்கள் மறைத்துக் கொள்வார்கள். எனவே எங்கள் ஊர் கண்மாய் தண்ணீரை பாய்ச்சுவது என்பது கடினமான ஒன்று. மழையை மட்டுமே நம்பி நாங்கள் நெல் விவசாயத்தை மேற்கொள்கிறோம். எனக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக வீட்டிலிருந்த படியே வேலை (work from home) என்பதால் சனி மற்றும் ஞாயிறு போன்ற வார விடுமுறை நாட்களில் கடந்த 2020 ல் வயலில் நான் களையெடுத்தேன். நாற்று நட்டேன். உதவி செய்தேன். அதோடு கடந்த ஆண்டு எங்கள் ஊரிலும் சரி சென்னையிலும் சரி நல்ல மழை. ஆனால் இந்த 2021 ல் கடந்த செப்டம்பர் 18 அன்று இரண்டரை மணி நேரம் பெய்த மழையைப் போல் சென்னையில் பெய்தாலும் எங்கள் ஊரில் மழை பொய்த்ததால் எங்கள் வயல் நான்கில் மூன்று பங்கு பயிர்கள் கருகி வீணானது.

செப்டம்பர் 18 அன்று இரண்டரை மணி நேரம் பெய்த மழையால் நான் அடைந்த மகிழ்ச்சி தொடர்ந்து இன்று வரை நிலைக்கவில்லை. நான் எழுதிய இந்தப் பாடலை கடந்த செப்டெம்பருக்குப் பின் நான் சென்னையில் அதிக நாட்களும் பரமக்குடியில் எப்பொழுதாவதும் இருக்கும்படியான சூழலாலும் அதன்பிறகு "சென்னையில் வீடுகளில் நீர் புகும் அளவிற்கு பெய்த தேவையில்லாத மழை நம்மூரில் பெய்யாமல் போனதே. விவசாயத்திற்குத் தேவையான குறிப்பிட்ட கால அளவில் தேவைப்படும் மழைநீர் போன ஆண்டைப் போல் இந்த ஆண்டு பெய்யவில்லையே" என்ற வருத்தத்தாலும் இந்தப் பாடலை காணொளியாக பதிவு செய்யாமல், செய்ய மனம் வராமல் வைத்திருந்தேன். 

இன்று தமிழர் திருநாள். நம் வயல் தான் முறையான பராமரிப்பு இல்லாமல் வீணானது. மற்ற வயல்கள் நல்ல செழிப்புடன் இருக்கிறதே என்ற மன மகிழ்வோடு விவசாயத் தொழில்நுட்பத்தை கதிர்காமத்தில் முதலில் தொடங்கிய நம் முப்பாட்டன் முருகனை வணங்கி இந்தப் பாடலையும் காணொளியையும் பெருமகிழ்ச்சியோடு வெளியிடுகிறேன்.

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.


பொன்வண்டின் பாட்டு பூங்காற்றும் கேட்டு
மண்வாசம் பார்த்து மனமெங்கும் பாட்டு

கன்னங்கள் வழிந்திடும் நீர்
எண்ணங்கள் உயர்ந்திடும் பார்
வண்ணங்கள் நிறைத்திடும் ஊர்
சின்னங்கள் காத்திடும் பேர்

ஏ இடியிடிக்குது மின்னலடிக்குது
மழையடிக்குது சாரலடிக்குது
கொடைபிடிக்கல கூந்தல் நனையுது
உள்ளம் மகிழுது பள்ளம் நிறையுது
உயிர் உருகுது பயிர் செழிக்குது
பச்சை தெரியுது உச்சி குளிருது

இளந்தென்னைக் காற்று இதமான பாட்டு
உளவானில் நேற்று உருவான பாட்டு

மண்ணுக்குள் புதைந்திடும் வேர்
கண்ணுக்குள் ஒளிந்திடும் நீர்
மண்மீது நிலைத்திடும் வார்
மழையாகப் பொழிந்திடும் கார்

ஏ உச்சி வெளுக்குது மச்சும் குளிருது
வெயிலடிக்குது குளிரடிக்குது
மரமசையுது இலையசையுது
மின்னலடிக்குது இடியிடிக்குது
மறுபடியுமிங்கு மழையடிக்குது
மனம் குளிருது சனம் மகிழுது

என்னோடு ஆடும் மழையிங்கு பாடும்
மண்ணோடு கூடும் மண்வாசம் பாடும்

கண்கூசும் அழகினைப் பார்
வெண்மேகம் தவழ்ந்திடும் ஊர்
என்தேகம் சிலிர்த்திடும் பார்
என்னுள்ளம் மகிழ்ந்திடும் பார்

ஏ தென்றலடிக்குது சிலுசிலுக்குது
நீர் உயருது நெல் உயருது
வரப்புயருது வளம் கொழிக்குது
நலம் பெருகுது உளமுருகுது
இறையருளிது மறைபொருளிது
மழை பொழியுது மனம் குளிருது
(பொன்வண்டின் பாட்டு)

Monday, November 29, 2021

வானொலிப் பைத்தியமாகிய நான்... - ஒப்புதல் வாக்குமூலம். வானொலி என் தொப்புள்கொடி சொந்தம்.

கடந்த 2021 தீபாவளி அன்று நான் வாங்கிய வானொலிப்பெட்டி.




நான் பிறந்த ஆண்டு 1984, ஆகஸ்டு 21. எனக்கு விவரம் தெரிய 1990 க்குப் பிறகு வானொலியின் மத்திய அலையில் (Medium waves) தூத்துக்குடி 100 Mega Waat, திருச்சி 100 Mega Waat மற்றும் இலங்கை ஆகிய நிலையங்கள் அதிக ஒலிபரப்புத் திறனுடன் கேட்கும். 

அப்போதெல்லாம் பண்பலை நிலையங்கள் (FM) எங்கள் ஊர் பக்கம் கிடையாது. எல்லாமே தூத்துக்குடி, திருச்சி மற்றும் இலங்கை நிலையங்கள் தான். 

இருந்தாலும் சென்னை முதல் அலைவரிசை (Chennai PC) 200 Mega Waat திறனுடன் என்னுடைய ஊர் முனைவென்றியில் எப்பொழுதாவது காற்று வீசும்போது காலை மற்றும் இரவு நேரங்களில் ஏறத்தாழ 700 மைல் கல் தொலைவில் உள்ள சென்னையிலிருந்து பதுங்கிப் பதுங்கிக் கேட்கும்.

இன்னும் சொல்லப்போனால், அதாவது நான் பிறப்பதற்கு முன், சென்னை வானொலி முதல் அலைவரிசையை மத்திய அலையில் ஒலிபரப்புத் துவங்கியபோது கதிர்வீச்சினால் பலர் பாதிப்படைந்தனராம். பறவைகள் மயங்கி விழுந்தனவாம். அதனாலேயே 200 Mega waat திறனாக குறைக்கப் பட்டதாம்.

இந்த 200 Mega Waat திறனால் தான் சென்னையிலிருந்து ஏறத்தாழ 700 மைல்கல் தொலைவில் உள்ள என் ஊர் முனைவென்றியில் என்னால் கேட்க முடிந்தது.

இவை தவிர சிற்றலையில் (Short Waves) விடுதலை புலிகள் தொடர்பான இலண்டன் பிபிசி செய்திகள், சீன வானொலி மற்றும் சிங்கப்பூர் வானொலி (இன்றைய ஒலி 96.8 FM) ஆகியவற்றை என் தாத்தாவின் கடையில் என் மாமா வைத்திருந்த பெரிய panasonic வானொலிப் பெட்டியில் கேட்டதுண்டு.

என் வீட்டில் என் அப்பா, அம்மா மற்றும் நெருங்கிய நண்பர்கள் உறவினர் என்னை வானொலிப் பைத்தியம் என்றே அழைத்தனர்.

மதுரை, திருநெல்வேலி ஆகிய வானொலி நிலையங்கள் மத்திய அலையில்(Medium Waves) குறைந்த ஒலிபரப்புத் திறனுடன் கேட்கும். வானொலிப்பெட்டியை அந்தந்த வானொலி நிலையங்கள் இருக்கும் திசைநோக்கித் திருப்பினால் இன்னும் தெளிவாக கேட்கும்.

2000 க்குப் பிறகு கோடைக்கானல், மதுரை, காரைக்கால், திருச்சி, திருநெல்வேலி, கோவை போன்ற பண்பலை ஒலிபரப்புகள் (FM) கிடைக்கத் துவங்கின.

இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் யாழ், இலங்கை வானொலி தென்றல், capital, வசந்தம், சூரியன், சக்தி, இலங்கை வானொலி தமிழ்ச்சேவை, தமிழ்ச்சேவை இலக்கம் ஒன்று (இணைய வானொலி), மற்றும் தர்மபுரி, கன்னியாகுமரி போன்ற வானொலி நிலையங்களையும் இணையம் வழி  கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

2009 ல் நடந்த யுத்தத்தால் இலங்கை வானொலியின் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது. 

கடந்த ஓராண்டாக, தூத்துக்குடி வானொலியின் மத்திய அலை 100 கிலோ வாட் திறனுடன் இருந்த ஒலிபரப்பு கோரோனாவை காரணங்காட்டி நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக 100.1 பண்பலையாக (FM) உள்ளூர் வானொலியாக மாற்றப் பட்டிருக்கிறது.

அதன்பிறகு 2007 தொடங்கி சென்னையில் பண்பலை ஒலிபரப்புகளை குறிப்பாக சென்னை வானவில் (Chennai FM Rainbow), FM Gold, Vivid Bharti, சூர்யன், மிர்ச்சி, ரேடியோ சிட்டி, ஹலோ மற்றும் பிக் ஆகிய பண்பலை நிலையங்களோடு சேர்த்து மத்திய அலையில் (MW) சென்னை அலைவரிசை இரண்டு ஒலிபரப்புகளை கேட்டபோதும் செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு சென்னை முதல் அலைவரிசையில் ஒலிபரப்பாகும் "இலக்கியம் பேசுவோம்" நிகழ்ச்சியை தவறாமல் கேட்கும் நேயர்களில் நானும் ஒருவன்.

என் வாழ்க்கையை விட்டு பிரிக்க முடியாதபடி என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது வானொலிப் பெட்டியும் வானொலி நிலையங்களும்.
கடந்த சில ஆண்டுகளாக DRM என்று அழைக்கப் படுகிற டிஜிட்டல் ஒலிபரப்பை சென்னை அலைவரிசை 1, திருச்சி அலைவரிசை 1 ஆகியவை ஒலிபரப்புகின்றன.

இவை தவிர DTH (Direct To Home) என்ற  செயற்கைக்கோள் அலைவரிசைகள் மூலமும் Air Tamil என்ற பெயரில் சென்னையின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.
ஒலிபரப்பின் வடிவங்கள் மாறினாலும் நிலையங்களின் பெயர் மாறினாலும் என் போன்ற நேயர்களின் வனொலியோடு தொடர்புடைய உணர்வுகள் ஒன்று தான்.
ஒருவேளை நான் சென்னையில் இல்லாமல் பரமக்குடியில் இருந்தால் கூட தற்பொழுதெல்லாம் இணையம் வழி தவறாமல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான் வளர்த்த ஆடு மாடுகள் போல வானொலியும் வானொலி நிலையங்களும் என் போன்றவர்களுக்கு தொப்புள் கொடி உறவு போன்றது.

வானொலி கேட்டு வளர்ந்த கடைசித் தலைமுறை நாம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், வானொலி காற்றலை தொடங்கி இணையம், DTH, DRM என தன்னை உருமாற்றிக் கொண்டு நமக்கு சிரமமின்றி நம்மை வந்தடைகிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் நாம் வானொலியைத் தான் கேட்கிறோம் என்ற உணர்வின்றி கூட  smartphone ல் FM app வழியாக, இணையம் வழி, News on Air செயலி (App) வழியாக, இன்று உற்பத்தியாகிற வண்டிகளில் DRM களில் நவீன தொழில்நுட்பத்தில், DTH வழியாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, வானொலியை கேட்கும் கடைசித் தலைமுறை நாம் இல்லை.

வானொலி பல்வேறு பரிமாணங்களில் தன்னைத்தானே உருமாற்றிக் கொண்டு, மலையிருந்து உதித்து கடல் நோக்கிப் பாயும் ஆறு போல என்றும் சிரஞ்சீவியாய் நம்முடைய காலத்திற்குப் பிறகும் நிலைத்திருக்கும்.

Saturday, November 20, 2021

புயல்மழையும் பெருவெள்ளமும்...

 




பூமிக் குழந்தைக்கு
வானம் என்ற தாயின்
தனங்களான 
மேகங்கள் சுரக்கும் 
தாய்ப்பாலே மழை

பூமி தன் சத்துக்களை 
கொழுப்பாக புரதமாக
பாதுகாத்து வைக்க
தேர்வு செய்யப்பட்ட
இடங்கள் தான்
எலும்பு மஜ்ஜைகளான
ஏரி குளங்கள் கண்மாய்கள்

குழந்தையை ஏமாற்றி
உணவை திருடித் தின்னும்
திருடர்கள் போல்
பூமியின் ஏரி குளங்களை
குடியிருப்புகளாய் மாற்றினோம்

இன்று
ஊட்டச்சத்து குறைந்த
குழந்தை போல 
வறண்டு கிடந்த
பூமியில்
தாயப்பாலெனப் பெய்த
பெருமழையை
சேமித்துவைக்க
இடமின்றி
இயற்கை வளங்களை
சூறையாடிக் கொண்டிருக்கும்
நம்மை தண்டிக்க
பெய்துவிட்டுப் போனது
புயல்மழையும் பெருவெள்ளமும்
வீடுகளில் குடியிருப்புகளில்
புகுந்து...

Wednesday, October 27, 2021

உன் சுவாசக் காற்றாய்...

 உன் 
அன்பு மழையில்
நனைந்து நனைந்து
கரைந்துருகிக் கொண்டிருக்கிறேன்
மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க...

உருகி உருகி - நீயெனைப் 
பருகிப் பருகி
உன் இதழ்வழி
தொண்டைக்குழி நனைக்கிறேன்
நான்.

உன் இதழோரேம்
உடல்சூட்டால் 
நான் சில துளிகளாய்
ஆவியாகி 
காற்றோடு கலந்து
உன் மூச்சின்வழி
உன் இதயம்தொட்டு
உன் நுரையீரல் தொட்டுத்
திரும்பிக் கொண்டிருக்கிறேன்
என்றென்றும் 
உன் சுவாசக் காற்றாய்...