Friday, May 7, 2010

சுதந்திர தாகம்!

நள்ளிரவில் வாங்கினோமே
சுதந்திரம்!
நல்ல இரவில் வாங்கினோமா
சுதந்திரம்?

வணிகம் செய்ய
பணிந்து வந்தான்
பறங்கியன்!
கனிந்து விட்டன
பாரத இதயங்கள்!
துணிந்து விட்டான்! - அடி
பணிய வைத்தான்
இனித்த இதயங்களை!!

கூடிவிட்டான் குள்ளநரியாய்! - மனிதத்தை
கூவிவிற்றான் சிறுபொரியாய்!!

கொடிபிடித்தன
அடிபணிந்த கைகள்!
அடிகொடுத்தன அகிம்சைகள்!
அந்நியனுக்கு அது இம்சைகள்!!

விடாமல் பிடித்தான்! - கொடியை
விழாமல் பிடித்தான்!!
(திருப்பூர் குமரன்)
முடிவெடுத்தான்! - அகிம்சையால்
அடிகொடுத்தான்! - தடியை
தேடிப்பிடித்தான்!!
(மகாத்மா காந்தி)
கவிபிறந்தான்!- மகா
கவிபிறந்தான்! - தமிழ்க்
கவிபிறந்தான்!
செவிநனைத்தான்! - கவித்தேனால்
செவிநனைத்தான்! - பாரதப்
புவியும் உய்யத்தான் - அவன்
கவியும் வளர்த்தான்! - அன்று
புவிக்குள் புதைந்தான்! - புதைந்தும்
தாகம் தீர்த்தான்! - சுதந்திர
தாகம் தீர்த்தான்!!
(மகாகவி பாரதி)

வெள்ளையன் வேடத்தில்
விதி செய்தது சதி! - இந்தியனின்
மதி செய்தது புதுவிதி!!

வேல்கொண்டு
வேரோடு சாய்க்கத்தான் - சுதந்திர
வெறியோடு தொடுத்தான்
'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை!!

பதறிவிட்டன பறங்கிப்படை! - குண்டுகளை
சிதறவிட்டன பீரங்கிப்படை!!
சிந்திவிட்டன உதிரமடை! - எனினும்
சிந்தவில்லை உறுதிமடை!!

அடிபணிந்தான் அந்நியன்! - மனிதத்தின்
அடிமைசாசனம் எரித்தான்!!

சுவாசித்தோம் சுதந்திரத்தை! - நாம்
நேசித்தோம் தேசத்தை! - சோர்வில்
வாசிக்க மறந்தோமே மனிதத்தை!!

சாவிஎடுத்தன ஜாதிகள்! - மனித
ஆவிகுடித்தன ஜாதிகள்!!

குருதிகுடித்தன ஜாதிகள்! - மன
உறுதிகெடுத்தன ஜாதிகள்!!

மதங்கொண்டன மதங்கள்! - மனித
மனங்கொன்றன மதங்கள்!!

திருந்திய இந்தியாவில்
விருந்தோம்பல் போய் - இன்று
வீறுகொண்டன தீவிரவாதம்! - கொடுமைகளால்
வீதிகளில் பரவியது தீரதம்! - இதனால்
கோவில்களில் பரவியது தீமிதிவிரதம்!!

காலமே...
ஏனிந்தக் கோலம்?
நீயே எங்களை
காலமாக வைப்பாயோ?
நீயே எங்களின்
காலனாக மாறுவாயோ?

பாரிலினி பிறப்பானா பாரதி?
விண்ணிலிருந்து குதிப்பானா திருப்பூர்குமரன்?
கண்ணிலினி தெரிவானா காந்தி?
மண்ணிலினி ஜனிப்பானா மனிதன்?

காலங்கள் மாறினால்... - மரண
ஓலங்கள் மாறினால்...
ஜாதிகள் செத்தால்...
மதங்கள் மாய்ந்தால்...
தீவிரவாதம் தீர்ந்தால்...
ஊழல் ஒழிந்தால்...
மனிதமனங்கள் மாறினால்...
மனிதநேயம் வளர்ந்தால்...
அன்புமட்டுமே
உலகப்பொதுமொழியானால்...
அன்று கிடைக்கும்
தந்திரமில்லா சுதந்திரம்!!

நள்ளிரவில் வாங்கினோமே
சுதந்திரம்!
நல்ல இரவில் வாங்கினோமா
சுதந்திரம்?

No comments: