பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/UyYgXQkoefU
சில நாட்களுக்கு முன், என் இளைய மகள் நிறைமதி தூக்கத்திலிருந்து எழுந்து கண்ணை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவள் அம்மாவைத் தேடினாள். புட்டிப் பாலை குடித்து விட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள். கடைக்குச் சென்றிருந்த அவள் அம்மாவான என் மனைவியை அழைத்து வர இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றேன். அப்போது தோன்றிய மெட்டும் பாடல் வரிகளும் இவை.
நான் மெட்டமைத்து எழுதிய தாய்மையோடு தொடர்புடைய தாலாட்டுப் பாடலிது.
அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.
ஆராரோ பாடும்
தாயைத்தான் தேடும்
தாயங்கே இல்லையென்றால்
துயில் கலைந்தே வாடும்
பாலுண்ணும் போதும்
தாலாட்டே கீதம்
தாயென்ற தெய்வம் பேசும்
கொஞ்சல் மொழி வேதம்
விளையாடும் மானே
விரல் பிடித்துத் தானே
தலையாட்டி நடக்கின்ற
தித்திக்கும் தேனே
கவிபாடும் உள்ளம்
கண்டாலே துள்ளும்
புவிமேலே அழகாக
பூப்பூக்கும் செல்லம்
என்னோட பாட்டு
இளந்தென்றல் காற்று
கண்மூடித் தூங்கம்மா
காதோரம் கேட்டு
No comments:
Post a Comment