Monday, March 20, 2023

தங்கச்சிக்கு பாட்டு - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ -https://youtu.be/JzdcgdV1xiI



பிறந்தநாள் வாழ்த்து
====================

வரும் 24, மார்ச் அன்று என் தங்கை சோபனாவின் பிறந்தநாள்.

வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் கணவர் நே. சுரேந்தர், மகன் விஷ்ணு, மகள் பிரகதி, அண்ணன் முனைவென்றி நா. வேல்முருகன், அண்ணி ஆனந்தி, மறுமகள்கள் ரிதன்யா, நிறைமதி, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்.
------

என் சிறுவயதில் என் அம்மா களையெடுக்க, நாத்து நட அல்லது வெளியூருக்கு செல்லுவாள். செல்லும்போது "சண்டை போடாமல் இருங்கள்" என்று சொல்லி விட்டுப் போவாள்.

அவள் போனபிறகு நான் என் தங்கையோடு சண்டை போட்டது, விவரம் தெரியாமல் அவளை அடித்தது என ஏற்கனவே 


என்ற கவிதையை என் தங்கைக்காக 2005 ல் எழுதியிருந்தேன். 

2004 ல் நான் கவிதை எழுதத் துவங்கிய பிறகே, நான் என் தங்கையை எவ்வளவு கொடுமைப் படுத்தியிருக்கிறேன். அவள் என்னை விட வயதில் இரண்டு வயது இளையவள் என்றாலும் என்னை விட மிகவும் மனப் பக்குவத்தோடு அந்த குழந்தை வயதில் நடந்து கொண்டாள் என்பதை இன்று நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமாகத் தான் உள்ளது.

என் தங்கை ஒரு உன்னதமான ஆன்மா. 

2005 ல் ஒருநாள் 


என  மேற்சொன்ன கவிதையை நாட்குறிப்பேடு (diary) போன்ற ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்தேன். நான் ஏதோ எழுதியிருக்கிறேன் என்பதை தூரத்தில் இருந்து அவள் பார்த்து விட்டு, நான் தூங்கிய பிறகு, அந்த குறிப்பேட்டை எடுத்துப் படித்து விட்டு காலையில் என்னிடம் அந்த பக்கத்தைக் காட்டி என்னிடம் கேட்டாள்.

"நீ சிறுவயதில் என்னை விட மனப்பக்குவத்தோடு நடந்து கொண்டாய். ஆனால், நான் கடந்த சில வருடங்கள் வரை இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் உன்னிடம் நடந்து கொண்டதை நினைத்து வருத்தமாக இருந்தது. ஆனால், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறேன். அதன் விளைவாகத் தான் இந்த கவிதை என்னிடமிருந்து பிறந்திருக்கிறது" என்றேன்.

என் தங்கை "என்னிடம் பாசம் காட்டாத ஒருவன் எனக்கு அண்ணனாகப் பிறந்து விட்டானே என கடந்த சில வருடங்களாக வருத்தப் பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது அந்த வருத்தமில்லை அண்ணே" என்று கண்ணீரோடு சொன்னாள்.

இன்று, என் முதல் மகள் ரிதன்யா மற்றும் என் இரண்டாவது மகள் நிறைமதி முகங்களில் என் அம்மா, என் தங்கை, என் அக்கா, என்  மனைவி மற்றும் என் வாழ்நாளில் நான் பாசம் கொண்டு நேசித்து வியந்த உன்னத ஆன்மாக்களின் முகங்களை பார்த்து மகிழ்கிறேன். என் மகள்கள் செய்யும் குறும்புகளை பார்த்து இரசிக்கும்போதும், என் மகள்கள் இருவரையும் பார்த்துப் பார்த்து பணிவிடைகள் செய்து வளர்க்கும்போதும் என் மகள்களை தூக்கிக் கொஞ்சும்போதும் என் அம்மா, என் தங்கை, என் அக்கா, என்  மனைவி மற்றும் என் வாழ்நாளில் நான் பாசம் கொண்டு நேசித்து வியந்த உன்னத ஆன்மாக்களின்  நினைவுகளே நீங்காமல் என்னுள்  நீக்கமற நிறைந்திருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளாக என் மூத்த மகள் ரிதன்யாவோடும் கடந்த மூன்றாண்டுகளாக என் இளைய மகள் நிறைமதியோடும் எப்போதும் பிரியாமல் இருப்பதால், அவர்கள் அன்பில் என் கடந்த கால வாழ்வின் கண்ணீர் வராத துக்கங்கள் எல்லாம் கடந்த ஐந்தாண்டுகளில் கண்ணீரோடு கரைந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. நான் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்காலத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.







அன்புத் தங்க செல்லத் தங்க
என்றென்றும் தங்கமங்க
வண்ணவண்ணப் பூமுடிச்சு
வற்றாத ஜீவ கங்க

சின்னப் புள்ள சண்டையெல்லாம்
கண்ணுக்குள்ள நிக்குதிங்க
உன்னப்போல பாசங்கொண்ட
உன்னதமே சொக்குதிங்க

ஒழுங்கா படிங்கன்னு
அம்மா சொல்லிட்டு
களையெடுக்க நாத்து நட
போனபின்னே எங்களுக்குள் 

என் சின்ன வயசுல
சண்ட  நடக்குமே
அத துவக்கி வைப்பதும்
நான்தான் நான்தான்

பிச்சைக்காரன் வேசம் போட்டு
கண்ணுங்கூட தெரியாதுன்னு
பொய் சொல்லி சாப்பாட்டையெல்லாம்
பறிச்சுப் பறிச்சுத் தின்னுவேனே 

ஏப்பம் விட்டதும்
மறு சண்டை நடக்குமே
அடிச்சுக் கொஞ்சமும்
வேசம் போட்டு மீதியும்

சாப்பாட்ட மட்டுமில்ல
தின்பண்டம் எல்லாத்தையும்
சண்டை போட்டும் வேசம் போட்டும்
பறிச்சுப் பறிச்சுத் தின்னுவேனே

அழுத தங்கச்சி
அம்மா வந்ததும்
சண்டை நடந்தத
சொல்லாம மறைச்சிடுவா

உன்ன நெனைக்கயில்
கண்ணோரம் கண்ணீர் வரும்
என்ன நெனைக்கயில்
என் மீதே கோபம் வரும் 

அன்புத் தங்க செல்லத் தங்க
என்றென்றும் தங்கமங்க
வண்ணவண்ணப் பூமுடிச்சு
வற்றாத ஜீவ கங்க

சின்னப் புள்ள சண்டையெல்லாம்
கண்ணுக்குள்ள நிக்குதிங்க
உன்னப்போல பாசங்கொண்ட
உன்னதமே சொக்குதிங்க

No comments: