Sunday, May 7, 2023

ரிதன்யா பிறந்தாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...


பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/PBpoAYhbBrg


வரும் மே 9ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் என் மூத்த மகள் ரிதன்யாவுக்காக நான் மெட்டமைத்து, எழுதி, பாடிய பாடல்.

நான் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக மெட்டமைத்து, எழுதி, பாடி வருகிறேன். இதுவரை என்னிடமிருந்து மெட்டும் பாடல் வரிகளும் ஒரே நேரத்தில் தான் வந்தன. ஆனால், முதல் முறையாக இந்தப் பாடலுக்கு மெட்டு மட்டும் சில தினங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தோன்றியது. உடனே வாகனத்தை நிறுத்தி, இந்தப் பாடலுக்கான மெட்டை, குரல் பதிவாக பதிவு செய்து கொண்டேன். ஏனெனில், மற்ற இசையமைப்பாளர்கள் போல் இசைக் குறிப்பு எடுத்துக் கொள்ளுமளவுக்கு இசைப் பயிற்சி பெற்றவனில்லை நான். கேள்வி ஞானத்தில் மட்டுமே என்னிடமிருந்து மெட்டு வருகிறது.  இந்தப் பாடலின் மெட்டை, தத்தகாரத்தில் இந்த விழியத்தின் முதல் இருபது நொடிகள் நான் பாடியதை முதலில் பதிவு செய்து வைத்துக் கொண்டு, அதன்பிறகு வீட்டிற்கு வந்தபிறகு பாடல் வரிகளை நான் எழுதினேன். 

என் மகள் ரிதன்யா பொதுவாகவே நான் கேட்காமலேயே என்னை செல்லம் கொஞ்சுவாள். என்மேல் மிகவும் அன்பு கொண்ட ஒரு உன்னதமான ஆன்மா. நான் அன்பை எதிர்பார்த்த பலபேரிடமும் கிடைக்காத அன்பை நான் கேட்காமலேயே எனக்கு அன்பை அள்ளி அள்ளிக் கொடுப்பவள் என் மகள் ரிதன்யா. அதனால் தான் என்னவோ பாடல் வரிகள் மிகவும் அருமையாகவே வந்திருக்கிறன்றன. நானும் மிகவும் மகிழ்வோடு இரசித்துப் பாடினேன். நீங்களும் கேட்டுப் பாருங்கள். மகிழுங்கள். வாழ்த்துங்கள்.








என்னை என்னை என்னைத் தாலாட்டும்
வண்ண வண்ண நிலவே
கண்ணைக் கண்ணைக் கண்ணை ஏமாற்றி
மின்னும் மின்னும் அழகே

உந்தன் முகத்தைக் கண்டபொழுதில்
உற்சாகம் நெஞ்சில் வா
உந்தன் குறும்பைக் கண்டபொழுதில்
உண்டாகும் சந்தோசம் வா 

மெல்ல மெல்ல மெல்லப் பூவாகும்
முல்லை முல்லை மலரே
செல்லச் செல்லச் செல்ல மான்போலே 
துள்ளும் துள்ளும் மகளே 

எந்தனுயிரை என் கண்ணே பார்க்கும்
வரம் பெற்றேன் கண்ணே வா
எந்தன் குழந்தைப் பருவத்தை நானும்
என் கண்ணால் பார்த்தேன் வா

கொஞ்சிக் கொஞ்சிக் கொஞ்சிப் பாராட்டும் 
கொஞ்சல் கொஞ்சல் மொழியே
கெஞ்சிக் கெஞ்சிக் கெஞ்சி வாயாடும் 
வஞ்சி வஞ்சித் தமிழே

உந்தன் பிறந்தநாளில் நானும்
புதிதாய் பிறந்தேன் வா
உந்தன் சிரிப்பில் ஒவ்வொரு நாளும்
சொர்க்கத்தைக் கண்டேன் வா

என்னை என்னை என்னைத் தாலாட்டும்
வண்ண வண்ண நிலவே
கண்ணைக் கண்ணைக் கண்ணை ஏமாற்றி
மின்னும் மின்னும் அழகே

No comments: