பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/X4XWZO2i3Gg
இன்று என் கோகிலா அண்ணிக்குப் பிறந்தநாள்.
2004 ம் ஆண்டு நான் கவிதைகள் எழுத ஆரம்பித்த போது என் மீது அன்பு கொண்டவர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே நான் கவிதைகள் எழுதிக் கொடுத்தேன். இப்படித்தான் என் கவிதைப் பயணம் துவங்கியது.
கடந்த ஆண்டு இதே ஏப்ரல் 9 ம் தேதி என் மனைவியின் தம்பியின் ஆண் குழந்தைக்கு காதுகுத்துக்குச் செல்ல நான், என் மனைவியின் அக்கா (என் அண்ணி), என் மனைவி மூவரும் என் மனைவியின் ஊரான சதுரகிரி மலையடிவாரமான சாப்டூரில் என் மாமனாரின் வீட்டில் இருந்தோம். அன்று என் அண்ணிக்குப் பிறந்தநாள் என்று எனக்குத் தெரியாது. மாலை 6.30 மணி இருக்கும். என் மனைவியும் அண்ணியும் என்னிடம் வந்து "குழந்தைகளுக்கு மட்டுந்தான் எழுதுவீர்களா? என் பிறந்தநாளிற்கெல்லாம் எழுத மாட்டீர்களா?" என்று என் அண்ணி கேட்டாள். "அப்படியா? பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணி. பிறந்தநாள் முடியும்போது சொல்கிறீர்களே. எழுதுவோம்" என்றேன்.
2015 ன் இறுதியில் எனக்கும் என் மனைவிக்கும் திருமணம் ஆன புதிதில் அவள் திருவண்ணாமலையிலும் நான் வேலை நிமித்தமாக சென்னையிலும் அதன் பிறகு நான்கு மாதங்கள் கழித்து சென்னைக்கு மாற்றலாகி வந்தும் கூட அவளுக்கு காலை, மாலை, இரவு என மாறி மாறி வேலை என்பதாலும் ஏறத்தாழ ஒரு வருடம் குழந்தை இல்லாமல் இருவருக்குமே மன உளைச்சல் தொடங்க ஆரம்பித்த போது "இந்த மருத்துவரைப் பாருங்க" என்று இருவரையும் அனுப்பி வைத்து, பிறகு விரைவில் என் மூத்த மகள் ரிதன்யா பிறந்தாள்.
2022 ல் ஒருநாள் நான் எதார்த்தமாக என் மனைவியின் ஊரான சாப்டூர் சென்றிருந்தேன். என் அண்ணியும் எதார்த்தமாக அங்கு வந்திருந்தாள். அன்று ஊரில் மஞ்சத் தண்ணித் திருவிழா. நான் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தேன். என் மாமியார் அதாவது என் அண்ணியின்/மனைவியின் அம்மா என்னிடம் "வெளியே போகாதீங்க. மஞ்சத் தண்ணி ஊத்துவாங்க." என்றாள். "எனக்கு இங்கு யாரையும் தெரியாது அத்த. அதனால் என் மேல் யாரும் மஞ்சத் தண்ணி ஊத்த மாட்டாங்க." என்று சொல்லிவிட்டு வெளியூருக்குக் கிளம்புவதற்காக உடை மாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது வெளியில் என் மாமியார் என் அண்ணியிடம் "ரொம்ப வருத்தப் படுறாங்க. மஞ்சத் தண்ணிய எடுத்து அவரு மேல ஊத்து." என்று சொன்னவுடன் என் அண்ணியும் மஞ்சத் தண்ணியை கரைத்து உள்ளே நுழைந்தாள். உடை மாற்றிக் கொண்டிருந்த நான் "என்ன அண்ணி உடை மாற்றும் போது வர்றீங்க?" என்று சங்கடத்தோடு தனி அறை கூட ஒழுங்காக இல்லாத சின்ன வீட்டில் திரும்பி நின்று கொண்டு வேகமாக உடையை மாற்றினேன். என் அண்ணி "மஞ்சத் தண்ணி ஊத்தப் போறேன்." என்றபடி என்னருகில் வந்தாள். அப்போது அதிகமான வெயில் காலம். "இப்போ நீங்க மஞ்சத் தண்ணி ஊத்தினா, என் உடையெல்லாம் வீணாகி விடும். வெளியூர் போய் விட்டு விரைவில் வந்து விடுவேன். வந்தபிறகு இந்த மஞ்சத் தண்ணியை ஊற்றி குளிப்பாட்டி விடுங்கள் அண்ணி." என்றேன்.
அதற்கு அவள் "அதற்கெல்லாம் உங்க பொண்டாட்டியை வரச்சொல்லி குளிப்பாட்டி விட வரச் சொல்லுங்க." என்று சொன்னபடி வெளியே போய் விட்டாள்.
அம்மா போல அக்கா தங்கை அண்ணன் தம்பி போல என் மீது உரிமையும் அக்கறையும் கொண்ட இன்னுமொரு உன்னதமான சொந்தம் என் அண்ணி.
இந்த ஆண்டு சில தினங்களுக்கு முன்பு இந்தப் பாடலை எழுதினேன். யாரும் கேட்காமலேயே எழுதிக் கொடுத்த நான், என் அண்ணி வாய்விட்டுக் கேட்டபிறகு எழுதிக் கொடுக்காமல் இருப்பேனா?
அண்ணிக்குப் பிறந்தநாளு
வாழ்த்துவோம் வாழ்த்துவோமே
என்றென்றும் நலமாகத்தான்
எப்போதும் மகிழ்வோடுதான்
புத்தம்புது உடையும் உடுத்தி
பொன்முகத்தில் சிரிப்பும் கடத்தி
அத்தபெத்த மூத்த பிள்ள
அன்புக்கென்றும் பஞ்சமில்ல
சொந்த முன்னு சொல்லிக் கொள்ள
சுற்றிச் சுற்றி வாச முல்ல
சிந்தனையில் உதித்த பாட்டு
மெட்டுப் போட்டுக் காட்டு காட்டு
என்ன தான் நடந்தபோதும்
எல்லையில்லா அன்புதாங்க
சொல்லச் சொல்ல பாட்டு வரும்
சொக்க வைக்கும் மெட்டு வரும்
பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி
பாடிடும் பாட்டுத் தானே
கொழுந்தானாரு பாடும் பாட்டு
கொண்டாடு நீயும் கேட்டு
அண்ணிக்குப் பிறந்தநாளு
வாழ்த்துவோம் வாழ்த்துவோமே
என்றென்றும் நலமாகத்தான்
எப்போதும் மகிழ்வோடுதான்