Saturday, February 1, 2014

சில்லறை சப்தங்கள் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: சில்லறை சப்தங்கள் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார் 




(“கவிதைநூல் விற்பனையிலிருந்து கிடைத்த பணத்தில் ஈழத்து மக்களுக்கு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறைய குடும்பங்களுக்கு அரிசியும் பருப்பும் வாங்கித்தரப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை இங்கே நன்றியுடன் தெரிவிக்கிறேன்.” என்ற தகவலை உள்ளடக்கிய வரிகளோடு எடுத்த முதல் பக்கத்தில் தாங்கி வந்திருக்கிறது இந்நூல்.)

ஈழ எழுத்தாளர் நிலா (இலண்டன்) அவர்களின் அணிந்துரையைத் தாங்கி வெளிவந்திருக்கிறது இந்நூல்.

படித்து முடித்துவிட்டு குடும்பத்தை விட்டு வெளியே வரும்போது தான், நடைமுறையில் நாம் வேறு ஒரு மனிதனாக வாழ வேண்டியுள்ளது என்ற உண்மையை புரிந்து கொள்கிறோம். எத்தனையோ பிரிவுகள், எத்தனையோ இழப்புகள், எவ்வளவோ கண்ணீர் என அத்தனையும் கடந்தே வாழ வேண்டியுள்ளது. 

நடைமுறையில் பெரும்பாலும் இங்கு யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. பெரும்பாலும் யாரும் யாரையும் தூரத்திலிருந்து நினைத்துக் கொண்டு உருகிக் கொண்டிருப்பதுமில்லை. அவரவர் அவரவர்க்கு அந்த அந்த இடத்தில் நண்பர்களை, உறவினர்களை உருவாக்கிக் கொள்கின்றனர். பலருக்கும் பழைய நினைவுகளை உடனுக்குடனே மறக்கும் வல்லமை அவரவர் பிறப்போடு ஒட்டியே வந்து விடுகிறது. ஆனால், படைப்பாளிகளில் குறிப்பாக கவிஞனின் மனம் கண்ணீரை, பிரிவின் வலியை, தாளமுடியாத் துக்கத்தை, அதன் கனத்தை மரணம் வரை சுமக்கிறது. அவன் உயிர் மரணத்தைத் தாண்டியும் அவைகளை சுமக்கிறது. அந்தக் கண்ணீர், பிரிவின் வலி, தாளமுடியாத் துக்கம், அதன் கனம் என மனக் குமுறல்களை, எதிர்பார்ப்புகளின் சிதைவை, எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி அவைகள் ஏக்கங்களான தவிப்பை, தான் பார்த்த, கேட்ட என அத்தனையையும் வார்த்தைகளாக்கி, கவிதைகளை சமைக்கிறான், சமைக்க முற்படுகிறான் கவிஞன்.

வாழ்வை பற்றிய ஒவ்வொருவருக்கும் உள்ள சரியான புரிதலை வாழ்வில் நிலவும் முரண்பாடுகள் அடிக்கடி சிதைத்துவிட்டு நாம் இன்னும் வாழ்வை மிகச்சரியாக புரிந்துகொள்ளவில்லை என்ற மிகச் சாதாரண உண்மையை அந்த முரண்பாடுகள் அனுதினமும் நமக்குச் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றன. அதனால் தான் மரணத்திற்கு முந்தைய நொடி வரை மனிதர்களின் மனம் அவர்களுக்குத் தெரியாமலேயே உள்ளுக்குள்ளே வாழ்வை முழுமையாகப் புரிந்துகொள்ள தொடர்ந்து தேடிக்கொண்டே, போராடிக் கொண்டே இருக்கிறது.

'வீழும் ஒரு சொட்டுக் கண்ணீர்' என்ற முதல் கவிதையில் 

'அன்பிற்காய் ஏங்கும் மனதின் 
அழிக்க இயலாத ஒன்றோ இரண்டோ 
இழப்புகள் போதுமே - நம்மை நாம் 
சாகும் வரை இழக்க!'

என்ற வரிகளில் கவிஞனின் மென்மை மனம் புரிகிறது. ஒட்டுமொத்த வலிகளையும் இந்த நான்கு வரிகளில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

'விதியை வெல்லும் நம்பிக்கை', 'முதிர்கன்னி' என்று ஆரம்பிக்கும் கவிதைகளோடு 'யார் யார் யாரோ' என்ற கவிதையின் கடைசி வரிகளில் 

'மனிதத்தை மட்டும் முன்வைத்து 
என்னை மனிதனென்று 
மார்தட்டிக் கொள்ள முயல்கிறேன்!!'

என்று உலகின் அனைத்து மனிதர்களுக்கும் தேவையான அடிப்படை குணத்தை எடுத்துக் காட்டுகிறார்.

'ஐயப்ப சாமியும் தீட்டும்' கவிதை முழுமையும் மனம் சார்ந்து, மனம் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்ற உளவியல் உண்மையை சொல்லி விட்டுப் போகிறது.

 தனக்கான தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டிய இடங்களில் எல்லாம் தன் குடும்பம் சார்ந்தும், தன் உறவுகள் சார்ந்தும், தத்தமது மண்டலம் அல்லது சமுதாயம் சார்ந்த கட்டுப்பாடுகளை முன்னிறுத்தி மனிதன் காலம் முழுக்க சூழ்நிலைக் கைதியாகவே வாழ வேண்டியுள்ளது.

குழந்தைகள் இளைஞர்களாக வளரும்போது, அவர்கள் மனதில் அவர்கள் கற்ற கல்வியறிவின் மூலம் தங்களின் பெற்றோர்களை அவர்களின் வயதான காலத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றே சங்கல்பம் செய்தாலும் சம்பாதிக்க வெளிநாடு சென்று அங்கிருந்தபடியே இங்கொரு சொந்த வீடு கட்டி அந்த வீட்டில் தங்களின் பெற்றோர்களை தங்கவைப்பதும் காலப்போக்கில் அந்த வீடு அந்தப் பெற்றோர்களுக்கு மட்டுமான ஒரு முதியோர் இல்லமாகவே மாறுகிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. 

முதியோர் இல்லம் தொடர்பாகவே 'புதிரில்லை சில புரிவதுமில்லை' என்ற கவிதையை படைத்திருக்கிறார் கவிஞர்.

'காலம் விழுங்கி விட்ட வரலாறு'  என்ற கவிதையில் ஒவ்வொரு மரணத்திற்குப் பின்னும் அதற்கான ஒரு வரலாறு இருக்கிறது என்ற கருத்தை வலியிறுத்துகிறது. இருந்தபோதும் வாழ்வில் இறுதிவரை போராடி வீரமரணம் அடைந்தவர்களின் அந்த நொடி, ஒரு புதிய வரலாற்றை உருவாக்கி விடுகிறது. மறுமலர்ச்சிக்கான விதையை பின்வரும் சந்ததிகளின் மனதில் விதைத்து விட்டுப் போகிறது என்ற உண்மையையும் நாம் மறுக்க முடியாது.

'எப்போது கிடைத்துவிடும் அது' என்ற கவிதையில் ஜன்னலோரம் அமரும் நிலை தனக்குக் கனவாகவே உள்ளதாகவே கவிதை வடித்திருக்கிறார்.

'மெல்லக் காதலித்தோம்' என காதல் சார்ந்தும் தன் காதலி சார்ந்தும் எழுதியிருக்கிறார் கவிஞர்.

தான் நேசித்த சொந்தம் பிரிந்ததை 'உன் கல்லறையில் பூத்த புற்கள்' என்ற கவிதையில் 

'வானம் மிக நீண்ட 
தெருக்களாய் - 
அகன்று விரிந்திருக்க'

என்று ஆரம்பித்து 

'தொலைத்த இடத்தில் 
மரணத்திற்குப் பின்னிருந்து 
உன்னைத் தேடுகிறேன்'

என்ற வரிகளில் வாசகர்களின் மனம் அதிர்கிறது.

ஆண்களின் காதலை பெண்கள் புரிந்துகொள்ளாத போது, இந்தப் பெண்களின் உள்ளம் பாலைவானமோ என்ற எண்ணத்தை வலுப்படுத்தும் விதமாக 'நீ நின்று கொன்ற இதயம்' என்ற கவிதையில் 

'இதயம் உடைக்கும் 
பார்வை ஏந்தி 
ஈரம் சுரக்காத உன் காதலுக்கு'

என்ற  வரிகளை எழுதியுள்ளார்.

'நவீன பொங்கல்' என்ற கவிதை இரசிக்கும் படியாக உள்ளது.

'உடைந்த முகங்கள்' என்ற கவிதையில் 

' உடைந்த முகங்களை ஒட்டவைக்க 
வேறொன்றும் வேண்டாம் - 
அன்பு செய்; அன்பு செய்!'

என்ற வரிகள் கவிஞரின் மனதை பிரதிபலிக்கிறது.

'ஜன்னலோரக் கம்பி பிடித்து', 'காதலிக்கலாம் வாருங்கள்', 'மரணத்தைக் கேட்டுப்பார்', 'அன்பிற்குள் அடங்கும்', 'மிச்ச நாட்களின் மீதி வாழ்க்கை', 'நாம் - நானும்', 'சிம்னி விளக்கின் வெளிச்சத்தில்', 'வெகுசிறிய காலமே வாழ்க்கை', 'ஆங்காங்கே சற்று சிந்திப்போம்', 'இப்படியா நகர்வது காலம்', 'கந்து வட்டி கிழிந்த வாழ்க்கை (பாடல்)', 'ஏழைகளின் மழைக்காலம்', 'வேண்டாத கவிதை', 'முரடனின் பாசம்', 'என்கவுண்டர்', 'பெண்களின் இதயம் தைக்கும் இரும்பூசிகள்', 'பார்த்தால் அத்தனையும் கவிதை', 'ஏழையின் கட்டைவிரல்', 'வெறும் பாத்திரம் ஏந்தி நிற்கும் ஏழைகள்', 'காதல் வேதமாகிறது', 'அன்பு', 'நல்ல நட்பு', 'இந்த நாள் இனியநாள்', 'சிலருக்குக் கிடைக்காத அப்பாவின் முத்தம்', 'மனிதம் பிறப்பிப்போம்', 'சில்லறை சப்தங்கள்' என மனிதம் சார்ந்தும், மனம் சார்ந்தும், மனித உறவுகள் சார்ந்தும், காதல் சார்ந்தும், நம்பிக்கை சார்ந்தும் பாடுபொருட்களாக  இந்தக் கவிதைநூலில் கவிதைகள் பயணிக்கின்றன.

'கால நிர்வாணத்தின் 
அசிங்களாய் 
நடந்து கொண்டுதான் இருக்கின்றன
அத்தனை அதர்மங்களும்'

என்றே 'நெற்றிக்கண் சாட்சியாகினும்' என்ற கவிதையில் கொதித்தெழுகிறது கவிஞனின் மனம்.

'மகனுக்காய் இறந்து பிறந்த இரகசியம்' பாடல் இரசிக்க வைக்கிறது.

'ஒரு மெழுகுவர்த்திக்கு என் காதல் இலவசம்' என்ற கவிதை முழுக்க முழுக்க இரசிக்கும்படியாக உள்ளது. அதிலும், ஆரம்பிக்கும் வரிகள் 

'அரைமணிநேர 
மின்சார அணைப்பில்தான் 
சுடர்விட்டு எரிந்தது
நம் காதல்'

அருமை.

எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்தால் எல்லாமே கவிதை என்ற பாடுபொருளைத் தாங்கிய 'அத்தனையும் கவிதை' என்ற கவிதை, நூலை எழுதிய கவிஞரின் தனித்தன்மையை உணர்த்துகிறது.

Tuesday, January 28, 2014

விடுதலையின் சபதம் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: விடுதலையின் சபதம் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர்

பதிப்பகம்: முகில் பதிப்பகம் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார் 

(ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வித்யாசாகர் அண்ணாவை அவருடைய இல்லத்தில் சந்தித்தபோது எனக்குக் கொடுத்த அவருடைய சில நூல்களில் இந்த நூலும் ஒன்று. அவருடைய என்னுரையில் 'இந்தக் கவிதைநூல் அங்கீகாரம் வேண்டி எழுதப் பட்டது அல்ல. என் மக்களின் வேதனை நாட்களை பதிந்து வைக்கும் ஒரு சிறிய நோக்கமிது' என்கிறார்.)




ஈழ விடுதலைக்காகப் போராடிய மாவீரன் திலீபன் அவர்களுக்கு இந்நூலை காணிக்கையாக்கியிருக்கிறார் பாவலர்.

காந்தரூபன், இசாக் என்ற இரண்டு பேர்களின் அணிந்துரைகளைத் தாங்கி வந்திருக்கிறது இந்த நூல்.

'மனிதன் தொலைத்த மனிதம்' என்ற முதற்கவிதையில் 

'எங்கேனும் 
நீ தொலைத்த மனிதம் 
கிடைத்தால் 
கொண்டு சென்று 
ஈழத்தில் கொடுப்பேன்'

என்று முடிக்கும் வரியிலேயே மனிதம் தொலைத்த வாசகனின் மனதைத் தொடுகிறார்.

'சுதந்திரம்' என்ற குறுங்கவிதையில் இறுதியில் 

'ஈழத்து 
இரத்த நெடியில்
எழுச்சி கொள்கிறது 
சுதந்திரமென்னும் ஒற்றைச்சொல்'

என்று எழுதியிருக்கிறார்.

'புறப்பட்டு பெண்ணே; போர் கொள்!!' என்ற கவிதையை வாசிக்கும்போது பாடலாய் ஒலிக்கிறது. இந்தப் பாடல் ஏன் எந்தவொரு இசையமைப்பாளர் கண்களிலும் படவில்லை என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் பாடலில் உள்ள எந்த சில வரிகளையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் எல்லா வரிகளும் ஒரு பாடலுக்கான, பெண்ணின் வீரத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

'ஆடிக் காற்றிலே அம்மா கும்மியடி 
ஆயிரம் பேரையும் சொல்லியடி'

என்று தொடங்கி 

'வீடு உறவெல்லாம் வேணுமடி பெண்ணே 
சிங்களவன் தொட்டாலே சீறியடி'

என்று தொடர்ந்து செல்கிறது பாடல்.

'இன்னொரு முறை எரிந்து போயேன் - முத்துக்குமரா...' என்ற கவிதையில் 

'எங்கோ விழும் 
பிணத்தை எடுத்து 
பார் இதுஉன் உறவெனக் 
காட்டிச் சென்றவனே...'

'இன்னொருமுறை பிறந்து வந்து 
மிச்சமுள்ளவர்களுக்காய் 
சற்று எரிந்து காட்டு 
அல்லது எரித்துச் செல் 
முத்துக் குமரா!!'

என்று கோபக் கனல் வீசுகிறார்.

ஈழம், ஏ... மனிதமே நீ மிச்சமிருந்தால்..., மாசிலா மன்னனே (தமிழ் தேசியத் தலைவர் வே. பிராபகரன் அவர்களின் பிறந்த நாளிற்காய் எழுதிய கவிதை) , மாவீரர் நாள், ஈழத்து இரத்தத்தில் கொண்டாடுவோம் தீபாவளி என ஈழ தேசத்துக் கனவுகளோடு இரத்த சகதியை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டுகிறது இந்நூலின் கவிதைகள்.

காதலைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டு அலையும் கவிஞர்களுக்கு மத்தியில் 

'ஏப்பம் வரும் நேரத்துல 
ஈழம் பத்தின 
ஈமச்செய்தி வந்தா 
ஏப்பம் வரும் நேரத்துல 
ஈழம் பத்தின 
ஈமச்செய்தி வந்தா 
சேனல் மாத்தி நமீதா டான்ஸ் பாருங்க'

என்று எழுதிவிட்டுச் செல்கிறார் பாவலர்.

'என் எழுதுகோல் வணங்கிய மாவீரன்' என்று மாவீரன் திலீபன் அவர்களைப் பற்றி பாடல் எழுதியிருக்கிறார்.

'தமிழர் செங்குருதி 
பாயும் இடமெல்லாம் 
தமிழர் செங்குருதி 
பாயும் இடமெல்லாம் 
ஈழம் பிறக்கும் வரைக்கும் 
போராடு'

என்ற வரிகளில் தமிழினம் சிந்திய, சிந்திக் கொண்டிருக்கிற குருதியில் நனைந்த சுதந்திர வேட்கையை பாடலாய் வடித்திருக்கிறார்.

'ஈழக் கண்ணீரோடு பறவைகள்' என்ற தலைப்பில் 'காகம், கொக்கு, சிட்டுக் குருவி, கழுகு' என்ற உட்தலைப்பில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

'என் குழந்தைக்கு 
பால்கொடுக்க 
எவளாவது ஒரு 
தமிழச்சி வருவா

என் நாட்டுக்காக ஓடிக் காப்பாத்த 
நான் ஒரு 
முண்டச்சி தானே இருக்கேன்'

என்ற வரிகளை சிட்டுக்குருவியிடம் ஒரு ஈழத்துத் தாய் சொன்னதாக எழுதியிருக்கிறார்.

தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கு சமர்ப்பணம், பொங்கலோ பொங்கல் எனக் கவிதைகள் தமிழ் சார்ந்தும் தமிழரைச் சார்ந்தும் பயணிக்கின்றன.

'உலகப் படம் வரையும்போது 
தமிழனைத் தான் தேடிடுவோம் '

என்ற வரிகளில் இன்னும் என் ஆழ்மனம் ஒன்றிப் போயிருக்கிறது.

'நில்; கவனி; யாரிந்த முத்துக்குமார்?', 'காற்றில் கலந்த ஈழப்புரட்சி - பொன்னம்மான் (பாடல்), ' போன்ற விடுதலை வேட்கை சார்ந்த கவிதைகள் படிக்கப் படிக்க மனதைத் தைக்கின்றன.

'எவரும் வேண்டாமென 
உயிர்களைத் துறந்த ஒருபிடி மண்ணெடுத்து 
ஓங்கி வெளியே வீசிவிட்டு 
ஜன்னலை மட்டும் இழுத்துச் சாத்திக் கொண்டேன்'

என்கிறார் 'என் ஜன்னலோரத்தில் ஈழம்' என்ற ஒரு கவிதையின் கடைசி வரிகளில்...

'அறுபதாண்டு காலம் ஈழம் சுமந்த 
விடுதலையென்னும் ஒற்றை வார்த்தையை 
இருபத்தைந்தாண்டு காலம் நீ சுமந்து 
திருப்பித் தருகையில் உயிரையும் தந்த தீபன்'

என்ற வரிகள் 'சிவதீபனுக்கொர் சபதம் கேள்' என்ற கவிதையில் இடம்பெற்றுள்ளன.

'போராடுவோம், போராடுவோம்', 'ஒன்றுபடுவோம் உலகிற்கே போதிப்போம்' என்ற கவிதைகளில் 

'ஜாதி மதம் ஏற்றத்தாழ்வு 
பதவி பேராசை யென 
அறுபட்டுக் கிடக்கிறோம் 
நம் அறுபட்ட விரிசல்களில் 
கொடி நாட்டி, சிங்களவன் 
போர்வீரனானான்.
நாம் தீவிரவாதியானோம்.'

என்ற வரிகள் தமிழ் என்றாலே ஒரு மாதிரியாய்ப் பார்க்கும் பல நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் தமிழர்கள் மனதையும் நிச்சயம் பாதிக்கும். அவர்களையும் சிந்திக்கத் தூண்டும்.

'முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்' என்ற நீள் கவிதையில் பல குறுங்கவிதைகள் அடக்கம். அதில் ஒரு கவிதை.

'காட்டிக் கொடுத்தவன் 
திருடித் தின்றவன் 
அண்டிப் பிழைத்தவன் 
இறந்த சகோதரிகளின் 
சவத்தின் மீதேறி ஓடிய 
ஒருசில துரோகிகள் 
சிங்கள இனமானான்.'

என கோழைத்தனத்தைச் சாடியிருக்கிறார் நூலின் ஆசிரியர்.

'முள்ளிவாய்க்காலில் முடிந்து போகும் முடிவல்ல ஈழம்' என்ற கவிதையில் 

'தீவிரவாதி பச்சை குத்திய 
நீதிபதிகளுக்கு 
என் சகோதரிகளின் கற்பு 
காற்றில் பறந்தாலென்ன
கடையில் விற்றாலென்ன 
என்றானதோ?'

என்ற வரிகள் ஈழத்தமிழர்களுக்கான நீதி மறுக்கப் பட்டதற்கான வெடிப்பாகவே வெளிவந்துள்ளன கவிஞரிடமிருந்து...

இலக்கியவாதிகளில், எழுத்தாளர்களில் கவிஞனின் மனம் மட்டுந்தான் மற்றவர்களால் ஆழங்காண முடியாதபடி, ஒரு விஞ்ஞானியைப் போலவே மிக மிக மென்மையான மனம் படைத்ததாகும். அந்தக் குழந்தை மனம் 

'கண்ணீரில் மையெடுத்து 
வெறும் கவிதைஎழுதும் 
தருணமில்லை தோழர்களே...
இரத்தத்தில் உணர்வூட்டி 
முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்றடிக்கும் 
பறையிது உடன்பிறப்பே'

என்ற வரிகளில் அழுது தவிக்கிறது.

'முள்ளிவாய்க்காலுக்கு அப்பால்', 'மனிதத்தை மண் தின்ற நாள் - மே ௧௮ (18)' என்ற கவிதைகளில் 

'வெற்றி முழக்கமிட்டு 
நடனமாடுகிறான் சிங்களவன் 
நம் தோல்வி அவன் வெற்றியெனில்
போகட்டும்.
எம் மரணம் 
அவன் இலக்குயெனில் 
சரிதானா உலகத்தீரே??'

என்ற வரிகள் நிச்சயம் மனசாட்சி உள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தையும் உறுத்தும்.

'துர்க்கா என்றொரு தாயுமானவள்', 'எம் வீர காவியம் நின்னு கேளடா (பாடல்)' எனத் தொடரும் இந்தக் கவிதைநூலில் ஒரு குறுங்கவிதையின் சிலவரிகள்.

'இறந்து கொண்டிருப்பவர்கள் 
வெறும் போராளிகள் மட்டுமல்ல 
எங்களின் நம்பிக்கையும் தான்'

இன்னுமொரு குறுங்கவிதையில்

'சுவாசத்தில் சுதந்திரம் கேட்டு 
வாழ்தலுக்கு ஒரு ஈழம் கேட்டுத்தானே 
இத்தனை போராட்டமென 
அறுபது வருடம் தாண்டியும் 
புரிந்துகொள்ளவில்லை 
உலகம்'

என்று உலகத்தின் புரிதலின்மையைச் சாடுகிறார் கவிஞர்.

'மலர்விழி என்றொரு மறைமொழி', 'வெறும் கதைகேட்ட இனமே' மற்றும் இன்னும் சில குறுங்கவிதைகளோடு கவிதைநூலினைப் படித்து முடிக்கும்போது மனம் கனக்கிறது. கண்ணீர் வழிந்தோடுகிறது என் போன்ற வாசகர்களின் கண்களிலிருந்து... 

Monday, January 27, 2014

பரமக்குடி வைகை ஆற்றுப்பாலத்தில் விஷ்ணு பாப்பா

பல பேர் விஷ்ணு பாப்பாவின் இரசிகர்களாகி விட்டனர். 'விஷ்ணு பாப்பா நலமா? விஷ்ணு பாப்பா எப்படி உள்ளான்?' என மின்னஞ்சல் ஊடாகக் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விஷ்ணு பாப்பா பிறந்தபோது அவனுக்காக நான் எழுதிய கவிதை 

Inline image 1

Inline image 2

Inline image 3

Inline image 4

Inline image 5

Inline image 6

Thursday, January 23, 2014

இளவரசி பாப்பாவின் பிறந்தநாளுக்கு முந்தைய நாட்களில் இரத்த தானம்

இளவரசி பாப்பாவின் பிறந்தநாளுக்கு (தை ௨ - ௧௫-௦௧-௨௦௧௪) முந்தைய நாட்களில் யாருக்காவது உதவி செய்யவேண்டும் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.

அதன்படி நான் ஏற்கனவே என் பெயரை friends2support.com என்ற இணையத்தில் இரத்ததானம் செய்ய பதிவு செய்ததையடுத்து பரமக்குடி தனியார் மருத்துவமனையிலிருந்து என்னுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

அங்கு சென்று இரத்ததானம் செய்து விட்டு வந்தேன்.

எனக்கான ஆத்ம திருப்தி இது.

Wednesday, January 22, 2014

அருவி அக் - டிச ௨௦௧௩ காலாண்டிதழில் என்னுடைய கவிதை (நவீனம்)

கடந்த இரண்டரை வருடங்களாக தொடர்ச்சியாக என்னுடைய ஹைக்கூ கவிதைகள் அருவி காலாண்டிதழில் வெளிவந்து கொண்டிருந்தன.

கடந்த அருவி அக் - டிச ௨௦௧௩ காலாண்டிதழில் என்னுடைய கீழ்க்கண்ட கவிதை (நவீனம்) வெளிவந்துள்ளது.

அருவி ஸ்ரீநிவாசன் ஐயாவுடன் அலைபேசியில் பேசும்போது 'முனைவென்றியா இப்படி எழுதுவது? இப்படியெல்லாம் எழுதுவாரா? என்று ஆச்சர்யமாக இருந்தது. நீங்கள் அனுப்பிய நவீனம் சார்ந்த இரண்டு கவிதைகளுமே அருமை. முதல் கவிதையைவிட இரண்டாவது நன்றாகவும் இரண்டாவதைவிட முதல் கவிதை அருமையாகவும் இருந்தது. வரும் காலாண்டிதழில் மற்றொரு கவிதையை இப்பொழுதே தேர்வு செய்து வைத்து விட்டேன்.' என்றார்.

மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.


Inline image 2
Inline image 3

Tuesday, January 21, 2014

பறவையின் சிறகசைப்பில்...

இளைப்பாற இடம்தேடி
ஓர் மரக்கிளையில்
வந்தமர்கிறது
அந்தப் பறவை.

கூரிய அலகால்
கோதிவிடுகிறது
தன் சிறகை...

அப்பறவை அமர்ந்திருந்த
அந்த மரக்கிளை
எப்போது வேண்டுமானாலும்
முறிந்து விழலாம்.

அப்பறவையை பிடிக்க
வேடனுங்கூட
குறிவைத்து வலை வீசலாம்
விஷம் தடவிய அம்பை
எய்யத் தயாராயிருக்கலாம்
அம்மரத்தில்
ஏற்கனவே குடியிருக்கும்
இன்னபிற பறவைகளால்
துரத்தியடிக்கவும் படலாம்
அந்தப்பறவை...

நச்சுப் பாம்புகளால்
ஆபத்தும் நேரலாம்
அப்பறவைக்கு...

எவ்விதச் சலனமுமின்றி
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு
சுதந்திரக் காற்றை சுவாசித்தவாறே
சிறகசைக்கத் துவங்குகிறது
அந்தப் பறவை.

Monday, January 13, 2014

இணைய புத்தகக் கடையில் 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்'

இணைய புத்தகக் கடையில் 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' வாங்கிப் படியுங்கள்.

மற்றவர்களையும் வாங்கிப் படிக்கச் சொல்லுங்கள்.

அழகு ராட்சசி - நூல் விமர்சனம்

- மீரா, தபுசங்கர் வரிசையில் சுரேஷ்குமாருக்கு ஓரிடம் உண்டு.

- திருவள்ளுவரின் கொள்ளுப்பேரனாக இருப்பார் என நினைத்துக் கொண்டேன்.

- இவரது கவிதைகள் இளைஞர்களைக் கவரும். சாதாரண இளைஞர்களைக் கவிதை எழுதத் தூண்டும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் கடிதம் எழுத மிகவும் உதவியாக இருக்கும்.



அழகு ராட்சசி கவிதை நூலிற்காக திரு. ஸ்ரீரங்கம் செளரிராஜன் அவர்கள் எழுதிய நூல் விமர்சனத்திலிருந்து...

-------------

சென்னை புத்தகத் திருவிழாவில் கடை எண்கள் ௬௭௧ (671 - நிவேதிதா புத்தகப் பூங்கா) மற்றும் ௩௮௬ (386 - Creative Publications) ஆகிய இடங்களில் என்னுடைய இரு நூல்கள் (அழகு ராட்சசி, குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்) கிடைக்கும்.

வாங்கிப் படியுங்கள். 

Sunday, January 12, 2014

சென்னை புத்தகத் திருவிழாவில் கடை எண்கள் ௬௭௧ (671 - நிவேதிதா புத்தகப் பூங்கா) மற்றும் ௩௮௬ (386 - Creative Publications) ஆகிய இடங்களில் என்னுடைய இரு நூல்கள்.

சென்னை புத்தகத் திருவிழாவில் கடை எண்கள் ௬௭௧ (671 - நிவேதிதா புத்தகப் பூங்கா) மற்றும் ௩௮௬ (386 - Creative Publications) ஆகிய இடங்களில் என்னுடைய இரு நூல்கள் (அழகு ராட்சசி, குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்) கிடைக்கும்.

வாங்கிப் படியுங்கள். 


Inline image 1

Wednesday, January 8, 2014

குறுங் கவிக் குழந்தைகள்

அன்பெனும் நூலிழையால் பின்னப்பட்டுள்ளது இவ்வுலகம். அன்பெனும் சொல்லுக்கு அழகும், அர்த்தமும் சேர்ப்பவர்கள் குழந்தைகள். குழந்தைகளில்லா இப்பூமியைக் கற்பனை செய்துபார்க்கவே கடினமாக இருக்கிறது.
வாழ்வுச் சுழலுள் சிக்கித் திணறுகிற மனிதர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறவர்களாகவும், துன்பக் கண்ணீரிலிருந்து சற்றே அவர்களை மீட்டு, அவர்களிடம் புன்னகைகளைப் பூக்க வைக்கிறவர்களாகவும் குழந்தைகளே இருக்கிறார்கள். குழந்தைகளை நாம் பத்திரமாக வளர்ப்பதாகச் சொல்லிக் கொள்கின்றோம். அது உண்மையில்லை. குழந்தைகள் தான் நம்மைப் பத்திரமாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பூமிப் பந்தின் அழகும், அற்புதமும் குழந்தைகளாலேயே சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் சிரிப்பினில்தான் வானம் மழைநீராய் மண்ணை நனைக்கிறது. மண்ணிலிருந்து விதைகள் முளைத்துத் துளிர்க்கின்றன. மொட்டுகள் பூக்கின்றன. காய்கள் கனியாகின்றன.
உலகத்தின் இயக்கமே குழந்தைகள்தான். இப்பூமிப்பந்தின் அச்சாணியே குழந்தைகள்தான். குழந்தைகளின் குரலிலேதான் பூபாளம் கேட்கிறது. பொழுது புலர்கிறது.
குழந்தைகளின் கைகளில் உள்ள பல்வேறு விளையாட்டுப் பொருட்களில் ஒன்றாய், இப்பூமியும் ஒரு பந்தாய் உள்ளது.
விளையாடும் குழந்தைகளுக்கு எல்லாப் பொம்மைகளும் ஒன்றே. யானை, கரடி, மான், குருவி, பட்டாம்பூச்சி, கிலுகிலுப்பை, பந்து, கூடவே சில கடவுள் பொம்மைகளும்.
குழந்தைகளின் உலகில் கடவுள் பொம்மையாகிறார். பொம்மைகளின் உலகில் கடவுள் குழந்தையாகிறார்.
இவ்வுலகம் பூப்பதும், மணப்பதும், மகிழ்வதும் குழந்தைகளாலேயே சாத்தியமாகிறது.
‘குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்’ என்று தனது ஹைக்கூ கவிதை நூலுக்கு கவிஞர் முனைவென்றி நா. சுரேஷ்குமார் வைத்துள்ள தலைப்பே என்னை வசீகரித்தது. பலப்பல யோசிப்பைக் கிளறிவிட்டது.
தமிழிலக்கிய உலகில் இன்று புதுப்பொலிவும், புதுச்செறிவும் பெற்று மிளிர்கிற ஹைக்கூ கவிதைகளில், தனக்கென ஒரு தனித்த அடையாளத்தோடும், கவனிப்பிற்கான பதிவுகளோடும் முன்னேறி வரும் கவிஞர் நா. சுரேஷ்குமார்.
இவரது சில கவிதைகளை பல்வேறு இதழ்களில் வாசித்து, இரசித்திருக்கின்றேன். புதிய தளிர்ப்பின் பச்சை வாசனையோடு அறிமுகமான முனைவென்றி நா. சுரேஷ்குமார், முகவை மாவட்டம் தந்திருக்கும் புதுவரவு.
வெயில் தின்று அலையும் பூமியிலிருந்து ஒளிமுகம் காட்டி எழுந்துள்ளார் கவிஞர் நா. சுரேஷ்குமார். பரமக்குடி மண் தமிழ்த் திரையுலகிற்கு பத்மஸ்ரீ கமலஹாசனையும் முற்போக்கு இலக்கியத்திற்கு எழுத்தாளர் கந்தர்வனையும் தந்து பெருமைத் தேடிக்கொண்டது.
அவ்வப்போது சில புதிய முகங்களைக் காட்டிவரும் மண்ணிலிருந்து, புதிய தாய்வேரிலிருந்து கிளர்த்தெழுந்து கவிதை உலகிற்கு கால்பாவியுள்ளார் கவிஞர் நா. சுரேஷ்குமார்.
வாழ்வின்பொருட்டு தலைநகர் சென்னைக்குப் பணிநிமித்தம் வந்து, ஆண்டுகள் பல ஆனபோதிலும், இன்னமும் தாய்மண்ணின் நேசத்தையும் மனித உறவுகளையும் மறக்காத மனிதன் என்பதை இவரது எழுத்தும், அருகிலிருந்து பேசிய சிலநிமிடங்களும் எனக்குச் சொல்லின.
பாசாங்கில்லாத, இயல்பாய் இருக்கிற மனித மனசுக்கே ஹைக்கூ சாத்தியப்படும். அச்சு அசலான வாழ்வை ஈரம் சொட்டச் சொட்ட வாழ்ந்துவரும் கவிஞர் நா. சுரேஷ்குமாரின் கைகளுக்கு ஹைக்கூ வசப்பட்டிருப்பதில் பெரிய வியப்பில்லை.
தனது முதல் ஹைக்கூத் தொகுப்பையே ஒரே பாடுபொருளில் கொண்டுவரத் துணிந்த அவரது முயற்சி பாராட்டத்தக்கது.
எழுதி எழுதிப் பழகி, பல இடங்களில் நல்ல தெறிப்பான ஹைக்கூப் பதிவுகளைத் தருவதில் வெற்றி பெற்றுள்ளார்.
எல்லோருமே குழந்தையாக இருந்து வளர்ந்தவர்கள்தான். அன்றாடம் குழந்தைகளோடு வாழ்பவர்கள் தான். ஆனபோதிலும், குழந்தைகளோடு கழிகிற ஒவ்வொரு கணமும் ஏதேனுமொரு கவிதையை நாம் கவனிக்காமல் விட்டு விடுகின்றோம்.
கவிஞர் நா. சுரேஷ்குமார், இவ்வகையில் மிகுந்த அதிர்ஷ்டக்காரக் கவிஞர். ஒரு நொடியும் வீணே கழியாமல், குழந்தைகள் உலகின் வாழ்வியல் பதிவுகளைக் கவிதையாய்க் கொண்டாடியுள்ளார். கூடவே கொஞ்சம் பொம்மைகளையும், சற்றே ஆறுதலுக்காக ஒரு கடவுளையும் கைத்துணையாகச் சேர்த்துக்கொண்டு.
அம்மாக்களிடம் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட, ‘இந்தா, இன்னும் கொஞ்சம் சாப்பிடு...’ என்று பொம்மைகளுக்கு ஊட்டிவிடும் அழகை பலமுறை பார்த்து இரசித்த எனக்கு, கடவுளுக்கே ஊட்டிவிடும் குழந்தைகள் இன்னும் புதுப்பொலிவு பெறுகிறார்கள்.
ஹைக்கூ கவிதைகளில் மீண்டும் மீண்டும் ஒரே பாடுபொருள் வருவதாக முன்பே ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதில், ஒரே பொருள் குறித்த கவிதைகள் எனும்போது, அந்தக் குற்றச்சாட்டிற்கு மேலும் வலு சேர்ப்பதாக ஆகிவிடாதா... என்கிற லேசான தயக்கமும் இந்நூலின்வழி எனக்குள் அரும்பின.
குழந்தைகள், பொம்மைகள், கடவுள் எனும் மூன்று வார்த்தைக்களுமின்றி, இவற்றைப் பற்றிய காட்சிபதிவை ஹைக்கூவழி தருவதற்கு கவிஞர் நா. சுரேஷ்குமார் ஒரு கவிதையிலும் ஏனோ முயன்று பார்க்கவில்லை. ஆனாலு, மூன்று வார்த்தைகளை வைத்தே பல புதுப்புதுக் காட்சிகளை நமக்குத் தந்துள்ளார்.
இக்குறுங்கவிதைகள் குழந்தைகள் பற்றிய புதுப்பார்வையை வாசகர்களுக்குள் தருமென நம்புகின்றேன்.
கடவுளும், பொம்மைகளுமே கொண்டாடி மகிழ்கிற குழந்தைகளை, வாருங்கள் நாமும் கொண்டாடி மகிழ்வோம்.
குழந்தைகள் உலகில் புதிய பூச்சொறிதலை இக்கவிதைகள் வழி நிகழ்த்தியுள்ள கவிஞர் முனைவென்றி நா. சுரேஷ்குமருக்கு எனது அன்பின் கனிந்த வாழ்த்துகள்.

நாள்: 10.102012.

மு. முருகேஷ்,
அகநி இல்லம்,
3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு,
வந்தவாசி – 604408, திருவண்ணாமலை மாவட்டம்.
செல்பேசி: 9444360421
மின்னஞ்சல்: haiku.mumu@gmail.com