Sunday, August 28, 2011

காதல் கவி!

ஒருமுறை அண்ணன் அ. சரவணராஜை பற்றி அண்ணன் சு. கார்த்திகேயன் சொல்லக்கேட்டு சரவணராஜை பார்க்க கானாடுகாத்தான் சென்றேன். அவரிடம் நான் எழுதிய கவிதைகளை காண்பித்தேன். அவர் படித்துப் பார்த்து விட்டு ‘உன் கவிதைகளை பத்திரிகளுக்கு அனுப்பு’ என்று சொன்னார். அவருடைய கவிதைகள் பலவற்றை நானும் படித்து பார்த்தேன். காதல் பிடிக்காதவர்கள் கூட அவருடைய கவிதைகளை படித்த பின் காதலிக்க துவங்கிவிடுவர். மாநில அளவில் பரிசுகள் பல வாங்கியிருக்கிறார். அவர் தன் காதலியான சோபனாவின் புகைப்படத்தை என்னிடம் காண்பித்தார். அவளை நான் எங்கேயோ பார்த்ததுபோல் இருந்தது. அதன்பின் கார்த்திகேயன் அண்ணனிடம் இந்நிகழ்ச்சியைப் பற்றி சொன்னபோதுதான் M. Sc., ல் படிக்கும் கல்பனாவின் அக்கா தான் சோபனா என எனக்கு தெரியவந்தது. சரவணராஜ் அண்ணனின் பக்கத்திலேயே இருக்கவேண்டும் எனத் தோன்றியது அன்று. அவர் நினைவில் கானாடுகாத்தானுக்கு அடிக்கடி போயிருக்கிறேன். அ. புதூரில் எடுத்த புகைப்படத்தில் என் காதல் தேவதையின் தலைக்குமேல் கொம்பு முளைத்திருப்பது போலவே இரண்டு தோழிகள் விரல்களை நீட்டியிருந்தனர். அவள் மாட்டு பொங்கலன்று பிறந்ததால் அவள் தலையில் கொம்பு முளைத்திருப்பதாக நினைத்து சிரித்தேன். அவளின் புகைப்படத்தை நான் அன்று அண்ணனிடம் காண்பித்தேன். 2007 ம் ஆண்டு அவளை மறக்க வேண்டும் என நினைத்து புகைப்படத்தை தீயிலிட்டு கொளுத்தினேன்.
எனக்கு உண்மையாக காதலிப்பவர்களை மிகவும் பிடிக்கும். இவர்மீது எனக்கு பாசம் அதிகம். சிவகங்கை பிரபுவின் அண்ணன் திருமணத்திற்கு சிவகங்கைக்கு சென்றபோது தோன்றிய கவிதை இது. நான் இவருக்காக எழுதிய மூன்று கவிதைகளையும் இவரும் கல்பனாவும் படித்தார்கள்.


இலக்கியக் காதலின்
இலக்கணம்
இந்தக் காதல்கவி!

உண்மைக்காதலின்
உருவம்
இந்த காதல்கவி!

உள்ளம பார்த்தும் – அவள்
குள்ளம் பார்த்தும்
வந்த காதல்
இந்த காதல்! – இவன்
சொந்தக் காதல்!!

தமிழ் வேங்கை நோக்க...
தமிழ் மங்கையும் நோக்க...
கண்களின் மோதல்! – இதுவே
இவனின் காதல்!!

எதிர்பார்ப்புகளால் வராமல்
எதிரெதிர் பார்வைகளால் வந்தது
இவன் காதல்!

பாடலை
காற்றில் ஒலிபரப்பினால்
கேட்கும் வானொலி! – உண்மைக்
காதலை
கண்களில் ஒளிபரப்பினாள்
இவனுயிர்க் காதலி!!

வேரில்லாக் காதல்
வேறுவழி நுழையாமல்
விழிவழி நுழைந்து
வேருள்ள இதயத்தை
வேரோடு சாய்ப்பது உண்மை! - பின்னர்
வேரூன்றி நிற்பதும் உண்மை! - இதனை
வேறாக நினைப்பது மடமை!!

சூதும் வாதும் போய்
அன்பெனும்
புதுவேதம் ஓதவைத்தது
இவனுண்மைக் காதல்!

காதலெனும் கோயிலில்
இருவரும் அர்ச்சகர்கள்தாம்!
அவள்பெயரை இவனும்
இவள்பெயரை அவனும்
உச்சரித்துக்கொண்டே இருப்பதால்...

வகுப்பறைக்குள்
வஞ்சியின் விளையாட்டு!
இவன்
நெஞ்சினில் பதிந்தது பாட்டு!!
அதுதான்
கொஞ்சுதமிழின் புதுக்கவிதைபாட்டு!!

பிஞ்சிலே பழுத்ததல்ல
இவன் காதல்!
நஞ்சையே அமுதாக்கியது
இவன் காதல்!!

உடல்களின் முகவரி வேறுதான்!
ஆனால்
உயிர்களின் முகவரி ஒன்றுதான்!!

நான்கு கண்களின்
தவிப்புகளில் தொடங்கிய
இவன் காதல் சாதனை
இரு உள்ளங்களின்
தவிப்புகளிலேயே முடிந்தது
இவன் வாழ்வில் வேதனை! – இதுவே
இவனுக்குச் சோதனை! – நாளை
இவன் செய்வான் புதுச்சாதனை!!

உடல்களின் கூடல் இல்லாமல்
உள்ளங்களின் ஊடல்!
இவன் காதல்!!

இவன் மனதிற்குள் சத்தம்!
அது இரத்தத்தின் யுத்தம்!
இவன் வாழ்வின் மொத்தம்!
இனி அவளைச் சுற்றும்!!

கதை ஏடுகளைப் பார்த்தேன்!
அவனின்
கவிதை ஏடுகளைப் பார்த்தேன்!
ஒவ்வொரு கவிதைக்கும்
என்னிதய ஏட்டில்
இறுமாப்புடன் இறங்கியது
ஈட்டி!

என் விழி சிந்திய கண்ணீர்! – அதுவே
நான் சிந்திய செந்நீர்!!

காலம் செய்த காயம்! – அந்தக்
காயம் செய்த மாயம்!
இவன் காதல்!!

No comments: