Sunday, September 4, 2011

உனக்காக...

கண்ணே கனியமுதே கட்டித்தயிரே கரும்புச்சாறே
பொன்னே பூச்சரமே புன்னகையே கண்ணிமையே
பெண்ணே பேரழகே புதுமலரே மதுரசமே
என்னே உன்னழகு இயற்கையே வியக்குதடி!

கண்மையிலே கறுப்பே கனியிதழின் சிவப்பே
பொன்மயிலே பெண்ணழகே பேரழகே தேவதையே
உண்மையிலே நீஓர் உயிருள்ள மெழுகுச்சிலை
என்மயிலே என்னுயிரே என்தாயே பெண்பூவே

அன்பே ஆருயிரே அருமருந்தே திருவிருந்தே
முன்பே நீயிருந்தால் முழுநிலவும் தோற்குமடி
என்பேன் அன்பன்நான் எழுதுகிறேன் அழுதபடி
உண்பேன் ஓர்துளிவிஷம் உனக்காக கண்மணியே!!

கடற்கரை நினைவுகள்!

கடற்கரை மணலில்
நம்மிருவர் கால்த்தடங்கள்!

உன்பெயரை நானும்
என்பெயரை நீயும்
எழுதிய அக்கணமே
நம்மிருவர் மனங்களும்
நமையறியாமல்
காதலை எழுதிவிட்டன!

மணல்வீடு கட்டி
வாசல்வைத்து
கள்ளங்கபடமில்லாமல்
சிறுகுழந்தையென சிரித்தாய்!

அலைவந்து அடித்தவுடன்
சிதைந்ததையெண்ணி
சீற்றங்கொண்டு அழுதாய்!

உன்னை ஆறுதல்படுத்தி
மறுபடியும் மணலால்
மாளிகை கட்டினேன்!

கடற்கரை மணலில்
இப்படித் தொடர்ந்த
நம்காதல் பயணம்
கல்யாணத்தில் முடிந்தது!

இன்பமான வாழ்க்கைதான்!
இரண்டு குழந்தைகள்தான்!!

அன்றும் வழக்கம்போல்
கடற்கரை மணலில்
நம்குடும்பத்தின் குதூகலம்!

குதூகலம் முடிந்ததோடு
சுனாமியின் சீற்றத்தால்
நீமட்டும் சிதைந்துபோனாய்!

இன்று
நீயின்றி நான்மட்டும்
நம்மிரண்டு குழந்தைகளோடு
அதே கடற்கரைமணலில்!

அன்று போலவே
அலையின் சீற்றம்
இன்றும்!

ஐந்தாண்டுகள் ஆனாலும்
என்னுயிரில் உறைந்திருக்கின்றன
கடற்கரை மணலில் உரு(கரு)வான
நம்காதல் நினைவுகள்!!

புத்தாண்டே வருக!

சத்தான புத்தாண்டே! – நித்தமும்
முத்தான புத்தாண்டே!!
வருகவருக நீ! – புத்துணர்வைத்
தருகதருக நீ!!

சித்திரைமாதத்தை முதலாய்க் கொண்டு – உன்
முத்திரைப்பாதத்தை தடம்பதிக்க – தமிழ்ப்
புத்தாண்டே வருகவருக! – நித்தம்
புத்தொளியைத் தருகதருக!!

இருள்விலக்கும் ஒளியாய் – வாழ்வின்
பொருள்விளக்கும் மொழியாய் – தமிழ்ப்
புத்தாண்டே வருகவருக! – நித்தம்
புத்தொளியைத் தருகதருக!!

எத்தனை மொழிகள் வந்தாலும்
பத்தரைமாற்றுத் தங்கம்போல்
மாசுமறுவற்று மங்காப்புகழுடன் – தமிழ்ப்
புத்தாண்டே வருகவருக! – நித்தம்
புத்தொளியைத் தருகதருக!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 01-04-2012

தமிழ்மகளே வா!

சங்கத்தமிழ் மூன்றுபடைத்தும் – தமிழன்
தங்கச்சிமிழால் சீராட்ட – உனைத்
தரணியெல்லாம் பாராட்ட...
நீ நீடூழி வாழ்வாய் தமிழ்மகளே!
பிரபஞ்சத்தில் மாறாது உன்புகழே!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 01-04-2012

துளிப்பா!

உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
புணர்ந்தபின்பு உரு(கரு)வான
எழுத்துப் பிழை!
உடல் ஊனமுற்ற குழந்தை!!

இந்தியா?

உலக வரலாற்றிலேயே
முதல்முறையாய்
வாக்காளர்களுக்கு பணம்கொடுத்து
வாக்களிக்க வைத்த
அரசியல் கட்சிகளைக் கொண்ட
பெருமை மிக்க
பண(ஜன)நாயக நாடு!
உலக வங்கியில்
கோடிக்கணக்கில் கடன்வாங்கிய
பிச்சைக்கார நாடு!!

Saturday, September 3, 2011

கறைபடிந்த தேசம்!

கறைபடிந்த தேசம்! – கட்டுக்
கதையைதானே பேசும்!!
கலையிழந்த தேசம்! – நம்
நிலையென்று மாறும்?

நட்போடு பழகி
கற்போடு வாழ்ந்தாலும்
தப்பாய் நினைக்கும் சமுதாயம்! – இதை
நினைத்தாலே எனுளத்தில் பெரும்காயம்!!

காதலை விட்டுவிட்டு
காமத்தைமட்டும் தொட்டு
பெண்டிர் தேகம்தீண்டும்
ஓரிரு கூட்டம்! – அவர்
நோக்கமெலாம் இளமைக்களியாட்டம்!!

தமிழ்த்திரைகளில்கூட – ஆபத்
பாண்டவர்களைவிட
துகிலுரிக்கும் துரியோதனர்களே அதிகம்!
மனஉறைகளில்கூட – மதங்கொண்ட
யானைகளைவிட
மதங்கொண்ட மனிதர்களே அதிகம்!
மதக்கறைகளை பரப்பிவிட...

பாசத்தாலான அறைகள் காணோம்!
எங்கும் பாசறைகள்தான் வீணாய்!!

ஜாதிக்கொரு சங்கம்தான்!
வீதிக்கொரு கம்பம்தான்!
நீதியைக் காணோம் எங்கும்! – இதை
நினைத்தா லெனுளம் பொங்கும்!!

தீரதமாய்
வீதிகளில் பரவுகிறது தீவிரவாதம்!
பூரதமாய்
என்றுமாறும் நம் புன்னகைதேசம்?

கறைபடிந்த தேசம்! – கட்டுக்
கதையைதானே பேசும்!!
கலையிழந்த தேசம்! – நம்
நிலையென்று மாறும்?

கவிஞானி!

நடையில் பயங்காட்டி – கவிதையில்
தொடைநயம் கூட்டி – பறங்கிப்
படைகள்தனை
தொடைநடுங்க வைத்தவன்!

தமிழ் பாட்டுத்திறத்தாலே
அந்நியனுக்கு வேட்டுவைத்தவன்!
தமிழ்க்கவிதைகளால்
வெள்ளையன்மேல்
வெடிகுண்டு வீசிய
தமிழ்வீரன்!

அடிமை இந்தியாவை
சுதந்திர இந்தியாவாக
மாற்றத் துடித்தவன்!

ஏழ்மைநிலையில் தானிருந்தும்
வாய்மைநிலை தவறாதவன்!
தாயன்பை போதித்தவன்!
தமிழ்க்கவிதையால் சாதித்தவன்!!

மூடநம்பிக்கைகளை
ஓட ஓட விரட்டியவன்!

எட்டயபுரத்தில் பிறந்து
வாரணாசிக்குப் போய்
புராண இதிகாசங்களை
கரைத்துக் குடித்தவன்!

புத்தனைப் போலவே
சித்தனிவன்! – பரி
சுத்தனிவன்! – கவி
பித்தனிவன்! – தேச
பக்தனிவன்!

மண்ணுலகில் வாழும்
நீசர்கள் நலனுக்காய்
ஈசனிடம் வேண்டிய
துறவி இவன்!

எண்ணங்களை நெறிப்படுத்தி
வேலியமைக்க
காளியிடம் வேண்டியவன்!

தனக்குள்ளே
கடவுளைக் கண்டவன்!
காதலின் புகழை
பாடலாய்ப் பாடியவன்!

மண்ணுலக உயிர்களின்
உள்ளங்களில் வாழும்
கவிஞானி இவன்!!

காதல் சிலுவை!

உன்னை நேசிப்பதை
உன்னிடம் சொல்வதற்கு
மலர்களை கொண்டுவராமல்
மலர்களைவிட மென்மையான
என் காதலை கொண்டுவந்தேன்!

நீயோ
உன் மௌனமெனும்
ஆயுதமெடுத்து
என் இதயத்தின் கைகளில்
ஆணிகளிடித்து
எனை சிலுவையில் அறைகிறாய்!

இயேசு
முதல் நாள் மரித்து
மூன்றாம் நாள்
உயிர்த்தாராம்!
நானும்
ஒவ்வொரு நாளும்
உறக்கம் என்ற பெயரில்
மரித்து உயிர்க்கிறேன்!!

உன்மீது என்மனதிலுள்ள
அன்பின் ஆழத்தை
உணர்த்துவதற்காக...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012

தமிழ்நாடு!

கடந்த 2009 ல் நடந்த இனப்படுகொலைக்குப் பிறகு பல அப்பாவித் தமிழர்கள் முள்வேலிக்குள் முடக்கப்பட்டனர். தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது எழுதிய கவிதை இது.


என் இந்தியத்தாயின்
காலடியில் தான்
நான் வாழ்கிறேன்!

என் தாயின் கால்களால்
நான் நசுக்கப்படுகிறேன்!

என் தாய்க்கோழி மிதித்து
குஞ்சு நான் சாகிறேன்!

தாகத்திற்கு எனக்கு
தண்ணீர் கூட கிடைக்கவில்லை!

வறட்சி காரணமாய்
என் உடலில்
வெடிப்புகளும்
விரிசல்களும்
அதிகம்!

என்மீது வாழ்ந்த மக்கள்
கடல்சூழ்ந்த தீவில்
காக்கை கழுகுகளுக்கு
இரையாகின்றனர்!

இந்தக் கொடுமைகளையெல்லாம்
பார்த்துக் கொண்டே
ஒன்றுமே செய்ய இயலாத
ஒன்பது போலவே
வாழ்கிறேன் நான்!!

என் பெயர்
தமிழ்நாடு!


இக்கவிதைகள் வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 03-12-2011

சுவாசம்!

ஒளி மங்கிய
மாலை நேரமது!

கடற்கரையோரமாய்
நடந்து போனேன்!

காற்று வந்து
என் கன்னத்தில்
அறைந்தது!

‘ஏன் அறைந்தாய்?’
என்று கேட்டேன்!

‘நீ மட்டும் ஏன்
என்னை சுவாசிக்காமல்
உன் காதலை
மட்டுமே சுவாசிக்கிறாய்!’
என்று சொன்னது
காற்று!!

விதையாய் விழு!

விழுந்தால் விதையாய் விழு!
எங்கே விழுந்தாலும்
முளை(தழை)த்து விடுவாய்!!

எழுந்தால் விருச்சமாய் எழு!
எப்போதும்
அனைவருக்கும் நிழல்கொடுப்பாய்!!

தொழுதால் பக்தனாய்த் தொழு!
இறைவனைத் தொழும்போது
உள்ளத்தில் தூய்மையும்
எண்ணத்தில் வாய்மையும்
நெஞ்சத்தில் நன்னம்பிக்கையும்
உண்டாகிறது!!

உனக்கு
முதல்வரி கிடைத்துவிட்டால்
முகவரி கிடைத்துவிடும்!
முயற்சியே உன் முதல்வரி!
வெற்றியே உன் முகவரி!!

தொல்லைதரும் அயற்சியை
நீக்கிவிட்டால்
முல்லைமலர் போல்
வெற்றி உன்னுள்
மலர்ந்து மணம்வீசும்!

விழுந்தால் விதையாய் விழு!

வாழ்ந்து பார்!

உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள
உறவுகள் கிடைக்கவில்லை! – நல்ல
உறவுகள் கிடைக்கவில்லை!!

உறவுகள் கிடைக்காததாலே
உள்ளத்தில் அமைதியில்லை!
பள்ளத்தில் வீழ்ந்துவிட்டேன்! – நானும்
பள்ளத்தில் வீழ்ந்துவிட்டேன்!!

பரிதவிக்கும் நெஞ்சமிது!
பாசத்தின் எல்லைஎது?

வார்த்தைகள் வரவில்லை!
வாழ்க்கையில் அமைதியில்லை!

வாய்ப்புகள் பறிபோனாலும்
வார்த்தைகள் இடம்மாறினாலும்
வாழ்க்கையொன்று உள்ளதடா
நண்பா!
வாழ்ந்து பார் வாழ்ந்து பார்!
நண்பா!!

காதலுனக்குள் வந்துவிட்டால்...

காதலுனக்குள் வந்துவிட்டால்...

பகலுனக்குப் பகையாகும்!
இரவுனக்கு உறவாகும்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

நிலவுதனை இரசித்திடத் தோன்றும்!
சூரியனையே கொஞ்சிடத் தோன்றும்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

காற்றிலே கவிதைகள்பல எழுதுவாய்!
கனவிலே அவளிடம் காதலைச் சொல்லுவாய்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

தனிமையில் அமர்ந்து நீ சிரிப்பாய்!
மௌனத்தொடு மணிக்கணக்கில் பேசுவாய்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

கண்ணீரில் காலங்கள் கரையும்!
காதலி கடவுளாய்த் தெரிவாள்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

கண்ணெதிரே அவள் தெரிவாள்!
காணுமுன்னே அவள் மறைவாள்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

உன்னைச் சுற்றி அவளிருப்பதாய்
கற்பனையில் நீ மிதப்பாய்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

தேவதைபோலவே அவள் வருவாள்!
திசைகளையே நீ மறப்பாய்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

கிறுக்கனென்று உலகுனை ஏசும்!
கவிஞனாய் நீ மாறியிருப்பாய்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

பூக்கள் பேசும் மொழியறிவாய்!
புல்பூண்டையும் கூட நீ நேசிப்பாய்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

காதலுனக்குள் வந்துவிட்டால்...

கண்ணாடி!

நான்
உயிரோடிருக்கிறேனா?
செத்துவிட்டேனா?
என்று தெரிந்துகொள்ளக் கூட
முயற்சிக்கவில்லை நீ!

ஆனாலும்
நான் செத்துச் செத்து
நம் காதலை
வாழ வைக்கிறேன்!

உன்மீது
நான் வைத்திருக்கும்
அன்பைக்காட்டும் கண்ணாடிதான்
நம்காதல் என்பதால்...

இதுதான் காதல்!

உணர்வுகளின் ஆழம்
உருவங்களில் வாழும்!
கனவுகளின் நீளம்
கற்பனைகளில் நீளும்!!

உயிரெனும் ஓவியம
தீட்டிய காவியம்
உறவுகள் ஆயிரம்
உயிரினில் அவள்முகம்!!

இரவினில் பாடல்!
பகலினில் தேடல்!
ஆவலுடன் ஊடல்!
இதுதான் காதல்!!

உனக்கும் எனக்கும்!

கண்ணீர் எனக்கு!
கவிதைகள் உனக்கு!!

தாகம் எனக்கும்!
தண்ணீர் உனக்கு!!

துன்பம் எனக்கு!
இன்பம் உனக்கு!!

சிலுவைகள் எனக்கு!
சிறகுகள் உனக்கு!!

சுமைகள் எனக்கு!
சுகங்கள் உனக்கு!!

அழுகை எனக்கு!
அமைதி உனக்கு!!

அமிலம் எனக்கு!
அமுதம் உனக்கு!!

நம் காதல்மட்டும் எனக்கு!
வேருஒருவனுடன் திருமணம் உனக்கு!!

சிந்திக்க...

இன்பத்தின்
எல்லை மீறியதால்
பிறந்த
துன்பத்தின் பிள்ளைகள்!
குப்பைத் தொட்டியில்
குழந்தைகள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்தாரம் – 26-11-2007

துள்ளலிசைப் பாடல்!

நடிகையின் இடுப்பும்
கவிதையின் சிறப்பும்
ஒருங்கே பொருந்தி
இசையோடு கூடும்
உன்னத விழா!
திரையில்
துள்ளலிசைப் பாடல்!!

என் தமிழ்!

விண்ணுக்கு புவி வெகுதூரம்! – நம்
கண்ணுக்கு இமையில்லை பாரம்!
கடற்கரை மணலோரம் – என்
கவிதைகள் அரங்கேறும் நேரம்!
கல்லுக்குள் இருக்குமா ஈரம்? – தமிழ்ச்
சொல்லுக்குள் இருக்குதே வீரம்!!

Wednesday, August 31, 2011

மழை!

மழையை தலைவியாகவும் காதலியாகவும் பூமியை மழைக்காதலியின் தலைவனாகவும் காதலனாகவும் உருவகப்படுத்தி எழுதிய கவிதை இது.


சிங்கத்தமிழனின்
அங்கமெலாம் நனைக்கவந்த
தங்க மழையே! – எங்கள்
தங்க மழையே!!

இடியிசை முழங்க
மின்னலெனும் ஒளிவாங்கி
வேகவேகமாய்
தாகம் தீர்க்கவந்த
தங்க மழையே! – எங்கள்
தங்க மழையே!!

அஞ்சியஞ்சி வந்து
கொஞ்சிக்கொஞ்சி விளையாடும்
பிஞ்சு முல்லைகளின்
நெஞ்சம் நனைக்கவந்த
கொஞ்சு மழையே! – மக்கள்
கெஞ்சும் மழையே!!

மண்ணாய்க் கிடந்த மண்ணை
பொன்னாய் மாற்றவந்த
சின்ன மழையே! – எங்கள்
வண்ண மழையே!!

பயிர்களின் உயிர்காத்து – உலக
உயிர்களின் உயிர்காக்க வந்த
தங்க மழையே! – எங்கள்
தங்க மழையே!!

பஞ்சம் பஞ்சம் என
தஞ்சம் கேட்டவர்கள்
எம் தமிழ்மக்கள்! – அம்
மக்களின் வாழ்க்கையை
வஞ்சம் தீர்க்கும் மாக்களை
கொஞ்சம் கொஞ்சமாய் தாக்கவந்த
கொஞ்சு மழையே! – மக்கள்
கொஞ்சும் மழையே!!

பறவையை பறக்கவைப்பது
இறக்கை!
உன்னை பிறக்கவைப்பது
இயற்கை!!

மாதம் மும்மாரியாய் பொழிந்தவள் நீ
இன்று கருமாரியை வணங்கியும்
பூமியில் ஒருமாரியைக்கூட கொடுக்கவில்லையே...!!
பூமி உன் காதலனோ...
கார்காலத்தில் கூடலோ...
ஏர்காலத்தில் பாடலோ...
தவழ்கிறாயே அவன் மடியில்!!

கோடையில் ஊடலோ...
கோபமோ அவனுடன்...
சேர மறுக்கிறாயே...!!

உன் ஊடலில்
கோபம் கொள்வது
உன்னவன் மட்டுமல்ல...
உலக மக்களுந்தான்!!

மௌனம்!

என்னைச்சுற்றி
அனைவரும்
என்னைப்பற்றி
தவறான புரிதலுணர்வோடு
பழகும்போது – என்
உள்ளம் அழும்!
உதடுகள் சிரிக்கும்!
கண்ணீர் முட்டிக்கொண்டு
வரும்!!

அந்தத் தருணங்களில்
எல்லாம்
மௌனமே
மிகச்சிறந்த மொழியெனப்படுகிறது
எனக்கு!!

காதல்!

உலக மக்களால்
அதிகம் பேசப்படும்
உலகப் பொதுமொழி!

தனிமை!

காலம் எனக்கு
மரணஅடி கொடுக்கும்போதேல்லாம்
தன்மடியில் உறங்கவைத்து
தாலாட்டு பாடும்
என் இன்னொரு அம்மா!
என் தனிமை!!

காரணமே இல்லாமல்
நான் அவமானப்படும்போதெல்லாம்
என் அவமானங்களை
வெகுமானங்களாய்
மாற்றித்தந்த மந்திரவாதி!
என் தனிமை!!

தோல்விமேல்
தோல்வி வரும்போதெல்லாம்
எனக்கு தற்கொலைக்கு பதிலாய்
தன்னம்பிக்கையைக்
கற்றுக்கொடுத்த ஆசான்!
என் தனிமை!!

ஆறுதலுக்காய்
தாய்மடி தேடும்போதெல்லாம்
மன மாறுதலுக்காய் – என்
தாய்மொழி பேசும்
என்னுயிர்த்தோழன்!
என் தனிமை!!

சாப்பிடக்கூட...
தூங்கக்கூட நேரமில்லாமல்
ஓடிக்கொண்டிருக்கும் என்னை
இந்த நொடிகளில்
உங்களோடு கவிதைவடிவில்
பேசச்சொல்லி – எனக்கு
நேரத்தை ஒதுக்கித்தரும்
கடிகாரம்!
என் தனிமை!!

ஒரு வழிசொல்!

என் சிறுவயதில்
என் குலதெய்வத்திற்கு
முடியிறக்க வேண்டுமென்று
முடிவெடுத்து – என் தலையில்
முடிவளர்த்து வந்தாள்
என் அம்மா!!

என் தலைமுடிக்கு
பொட்டுவைத்து
திருஷ்டி பொட்டெல்லாம் வைத்து
என் கறுப்பான முகத்தைக்கூட
கலையாக இரசித்தாள்!

நம் கவிதைக்குழந்தைகளுக்கும்
முடியிறக்கலாமென்று
முடிவெடுத்தேன்!
என் மனைவியான நீ
என்னோடு சேரவேண்டுமென்று
வேண்டிக்கொண்டு...

அவர்களை என்னோடு
கோயிலுக்கு அழைத்தேன்!

அவர்களின் அம்மாவான
நீ இல்லாமல்
எங்கும் வரமறுக்கிறார்கள்!

ஏதேனும்
ஒரு வழிசொல்!

மனமெனும் குரங்கு!

கொட்டும் மழையில்
குடைகள் இன்றி
உனக்கும் எனக்கும்
நனைந்திடப் பிடிக்கும்! – கைக்

கெட்டும் தொலைவில்
வானம் வந்தால்
வளைத்துப் பிடித்து
வானவில் செய்வோம்! – மனக்

கட்டுப் பாட்டை
நாமும் வளர்த்தால் – நம்
கட்டளைப் படியே
மனமும் கேட்கும்! – கொஞ்சம்

விட்டுப் பிடிப்போம்
என்றே நினைத்தால்
கொட்டிக் கவிழ்க்கும்
மனமெனும் குரங்கு!!

திருமணம்!

திருமணம்
ஆயிரங்காலத்து பயிர்!
காதலும் அப்படித்தான்!!

திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறது!
காதல்
நம் பக்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறது!!

நிச்சயமாய்...

நம் கவிதைக்குழந்தைகள்
ஒவ்வொன்றோடும்
என்பெயரை எழுதி
என் புகைப்படத்தையும்
சேர்த்து
பத்திரிகைகளுக்கு
அனுப்பி வைக்கிறேன்!

அவைகளும்
நம் கவிதைக்குழந்தைகளை
என் புகைப்படத்துடன்
வெளியிட்டுக் கொண்டேதான்
இருக்கின்றன!
குழந்தைகளின் அம்மாவான
உன்னைக் காணவில்லை
என்ற தகவலை
உன்னிடம் சொல்வதற்காகவே...

உனக்கு
நம்குழந்தைகளை
வா(நே)சித்துப் பார்க்க
வாய்ப்புகள் கிடைத்துவிட்டால்
போதும்!
நிச்சயமாய் நீ எனை
நேசிக்கத் துவங்கிவிடுவாய்!!

குழந்தைகள்!

நானும் நீயும்
உடலால் இணையவில்லை!
என்னுள்ளம்
உன்னுள்ளத்தை விரும்பியது!

நான் உன்னை
விரும்பத் துவங்கியதிலிருந்தே
நான் கர்ப்பம் தரித்தேன்!
நமக்கு இன்னும்
கவிதைக்குழந்தைகள்
பிறந்து கொண்டேதானிருக்கின்றன!

ஒருநாள்
நம் குழந்தைகளை
அவர்களின் அம்மாவான நீ
உன் இடுப்பில் தூக்கிவைத்து
செல்லங்கொஞ்சியதாய்
அவர்களே கூறினார்கள்!

என்மனமும்
ஒரு குழந்தைதான்!

என் மனக்குழந்தையையும்
உன் இடுப்பில் தூக்கிவைத்து
செல்லங்கொஞ்சுவாயாடா
என் செல்லம்?

என் அப்பா!

ஒவ்வொருமுறை
நான் சேட்டை செய்யும்போதும்
கோபப்பட்டு அடித்துவிடுவார்!

சிறிதுநேரம் கழித்து
பக்கத்தில் வந்தமர்ந்து
‘வலிக்கிறதா ப்பா?’
என என்னை
தன் மடியில் கிடைத்தும்
தாயுள்ளம் கொண்டவர்!!

செல்லம்!

நான் உன்
வீட்டிற்கு வந்தபோது
உன்தந்தை உன்னை
‘பப்பிம்மா’ என
அழைத்ததை
நானும் கவனித்தேன்!

என் செல்லமான
உனக்கு
உன்வீட்டில்
இப்படியொரு செல்லப்பெயர்!

நானும் உன்னை
‘பப்பிம்மா’ என்றே
அழைக்கவாடா
என் செல்லம்?

உனக்கான அறிவுரை!

ஒவ்வொரு நிற சுடிதாரிலும்
நீ
ஒவ்வொரு அழகாகவே
தெரிந்தாய்!
நம் தோழியின் திருமணத்திற்கு
நீ சேலைகட்டி வந்ததை
நான் பார்த்திருக்கிறேன்!

சோளக்காட்டு பொம்மைக்கு
சேலையை கட்டிவிட்டது போல்...
ஓட்டடைக்குச்சிக்கு
சேலையை சுற்றிவிட்டது போல்...

சற்றுபலமாய் காற்றடித்தால்
பக்கத்தூருக்கு
பறந்து விடுவாய் போல...!!

இப்படியாடா
புல்தடுக்கி பயில்வானாய்
இருப்பது?

ஒழுங்காய் சாப்பிடுடா
என் செல்லம்!!

அதிசயம்!

அன்பே...
நம் காதல் உண்மையிலேயே
ஓர் அறிவியல் அதிசயந்தான்!

உனக்கு பதிலாய்
நானே கர்ப்பம்தரித்து
கவிதைக்குழந்தைகளை
ஈன்று கொண்டிருப்பதால்...

புதிதுதான்!

மூன்றாண்டுகளுக்கு முன்
என்னுடன் பழ(நி)கியவன்
உன் புதியதொலைபேசி எண்ணை
என்னிடம் கொடுத்தான்!
உடனே பேசி
உன்னுடைய எண்தான்
என தெரிந்துகொண்டேன்!

மீண்டும் நேற்றுதான்
உன் எண்ணுக்கு
முயற்சி செய்தேன்!
பழையஎண் என
தெரிந்துகொண்டேன்!

உன் புதியதொலைபேசி எண்
வேண்டுமானால்
பழையதாய் போகலாம்!

உன்மீது நான்கொண்ட
காதல் எண்ணம்மட்டும்
இன்றும் புதிதுதான்!!

ஆட்டுக்குட்டி!

நான் என்
சொந்த ஊருக்கு
சென்றபோது
நான் வளர்த்த ஆடு
குட்டியை ஈன்றது!

குட்டியை எடுத்து
மடியில் தூக்கிவைத்து
கொஞ்சினேன்!

உற்சாகத்தில்
துள்ளிக்குதித்தது என்மனம்!
உன்னை என்மடியில்
தூக்கிவைத்து
செல்லங்கொஞ்சியதாய் நினைத்து...!!

எப்படி?

என்னம்மா
ஆடு வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
மாடு வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
நாய் வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
கோழி வளர்க்கச்
சொல்லிக் கொடுத்தாள்!
கிளி வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
பூனை வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!

இப்படி
எல்லா உயிர்களின்மேலும்
அன்பை வளர்க்கச்
சொல்லிக் கொடுத்தவள்
உன்மேல் மட்டும்
காதலை வளர்க்கச்
சொல்லிக் கொடுக்கவில்லையே!

பிறகெப்படிடி
உன்மீது என்மனதில்
வளர்ந்தது காதல்?


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 16-02-2012

2. வார்ப்பு (இணைய இதழ்) - 28-04-2012

3. இராணிமுத்து -  01-09-2012

காதல் தான்!

அகிலெடுத்து செய்த
முகமா உன்முகம்?
முகிலெடுத்து செய்த
அகமா உன்அகம்?

நான்
முகவையில் படித்தாலும்
உன்னைவிட
அகவையில் சிறியவன்!

அன்பே...
நெடுங்கால மாற்றத்தை
நம்வாழ்வில் தருவது
காலம்தான்!
குறுகியகால மாற்றத்தை
என்வாழ்வில் தந்ததடி
நான் உன்மேல் கொண்ட
காதல்!!

நிச்சயதார்த்தம்!

நான் என்பெற்றோருடன்
உன்னை பெண்கேட்க
உன் வீடுநோக்கி விரைந்தேன்!

உன்வீடருகே வந்தபோது
தகவல் வந்தது!
உனக்கு வேறொருவனுடன்
எதார்த்தமாய் நிச்சயமாகிவிட்டது
நிச்சயதார்த்தமென்று...!

உன் வீட்டிற்கு வெளியே
நாங்கள் சிறிதுநேரம் நின்றோம்!

எங்களை
உள்ளிருந்து பார்த்த நீ
பள்ளிக்குழந்தை போல்
துள்ளியெழுந்து ஓடிவந்து
என்னருகே நின்றாய்!

என்னிடம் சொன்னாய்!
‘உனக்காக மட்டுந்தான்டா
நான் காத்திருக்கிறேன்’
என்று...!!

என்ன செய்ய?

நம் காதல்நினைவுகள் எனும்
பத்திரங்களை பத்திரமாய்
பூட்டிவைத்திருக்கிறேன்
என் மூளைப்பெட்டிக்குள்!!

பெட்டிப்பூட்டின் சாவியை
யாருக்கும் தெரியாமல்
பத்திரமாய் ஒளித்துவைத்திருக்கிறேன்!

ஆனாலும்
பெட்டியை உடைத்துக்கொண்டு
என்கண்முன்னே நின்றுகொண்டு
‘என்னுடன் பேசுடா
என்னுடன் பேசுடா’ என
கதறி அழுது தொலைக்கின்றன
உன் நினைவுகள்!!

நான் என்னசெய்ய?

உன்மீதான காதல்!

உன்நினைவுகளைத் தவிர
எனக்கொரு நாதியில்லை!
உன்னைப்பற்றி சேதிசொல்ல
எனக்கிங்கு யாருமில்லை!!
‘தியானம் செய்’ என்று
நீ சொன்ன வார்த்தையினால்
எனக்குள்ளே
போதிஞானம் பிறக்கிறதடி!
நல்லதொரு தேதியில்
நமக்கு மணம்முடிந்ததாய்
கனவுநான் கண்டேனடி!
உன்மீது எனக்குள்ள காதல்
வேதியியல் மாற்றத்தால்
வந்ததல்ல...
உள்ளத்தின் தாக்கத்தால்
வந்ததடி!
உயிரின் ஏக்கத்தால்
வந்ததடி!
அன்பின் நோக்கத்தால்
வந்ததடி!!

ஞாபகம்!

ஒவ்வொரு முறையும்
எந்தப் பேருந்தில் ஏறினாலும்
எந்த இருக்கையிலாவது
நீ இருப்பாய் என
என் கண்கள் தேடுகின்றன!
உன்னை முதல்முறை
பேருந்தில் பார்த்ததிலிருந்து...!!

காதல் விஞ்ஞானி!

அன்பே...
நம் காதலை பொருத்தவரை
நானும் ஒரு விஞ்ஞானிதான்!
உன் மனதின் ஆழத்தை
அறிந்துகொள்ள
இடைவிடாது முயற்சிப்பதால்... !!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. குடும்ப மலர் (தினத்தந்தி) – 10-10-2010

காதல் கங்காரு!

அன்பே...
கங்காரு
தன் குட்டிகளை
வயிற்றுப்பைக்குள்
தூக்கிக்கொண்டு
சுமப்பதைப் போலவே
நானும்
உன் நினைவுகளை
சுமந்துகொண்டு நடக்கிறேன்
வீதிகளில்...

காதலித்துப் பார்!

பனிக்கட்டியின் உறைநிலை
0 டிகிரி செல்சியஸ்!

அன்பின் உறைநிலை?

காதலித்துப் பார்...
உணர்ந்து கொள்வாய்!!

செவ்வாய்!

ஆம்ஸ்ட்ராங்
நிலவிற்கு முதல்முதலில்
சென்று திரும்பியதைப் போல
நான் ஒவ்வொருமுறையும்
செவ்வாய்க்கு சென்று
திரும்பிக் கொண்டிருக்கிறேன்!
உன் ‘செவ்’வாயில்
சிரிப்பைக் காணும்
ஒவ்வொருமுறையும்...!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

மழலைத்தமிழ்!

‘எம்பு கக்கிதும்மா
எம்பு கக்கிதும்மா’
என்று
அழுதது குழந்தை!

பதறிப்போய்
‘எங்கடா எறும்பு?
எங்கடா எறும்பு?’
என்றாள் தாய்!

வயிற்றைத் தடவியபடி
வேறு எதுவும்
சொல்லத்தெரியாமல்
மறுமுறையும் சொன்னது
குழந்தை
‘எம்பு காக்கிதும்மா’
என்று!

வேகுநேரமாய்
எறும்பைத் தேடியவள்
பின்னர்தான் தெரிந்துகொண்டாள்
தன் குழந்தைக்கு பசிக்கிறது
என்பதை...!!

ஆனந்தக் கண்ணீர்!

சென்றவாரம்
நான் என் வீட்டிற்கு
சென்றிருந்தேன்!
நெடுநாள் பிரிந்த
ஏக்கத்தில்
என்னருகில் வந்த
அம்மா
என்மடியில் தலைசாய்த்து
உறங்க ஆரம்பித்தாள்!

கண்ணீர் வந்தது
கண்களிலிருந்து...!!

நாய்க்குட்டி!

நான் உன்
வீட்டிற்கு வந்திருந்தபோது
உன் நாய்க்குட்டியை
கொஞ்சிக்கொண்டிருந்தாய்!

ச்சே...
நானும் ஒரு
நாய்க்குட்டியாய்
பிறந்திருக்கலாம்!
நீ என்னை
உன் மடியில் தூக்கிவைத்து
கொஞ்சி விளையாடுவதற்கு...

காதல் சுனாமி!

வெள்ளைநிற சுடிதாரில்
விண்ணிலிருந்திறங்கிய
தேவதைபோலவே
என் கண்முன்னே வந்தாய்!
எனைக்கடந்து போனாய்!
நாமிருவரும் பல்கலையில்
பயிலும்போது...

உன்னை நான்
கடந்துபோன
ஒவ்வொருமுறையும்
சுனாமி வந்து போனதடி!!

புரிந்துகொண்டாள்!

எப்போதும்
என் கவிதை ஏடுகளை
யாருக்கும் தெரியாமல்
பத்திரமாய் வைத்திருப்பேன்!

அன்றொருநாள்
நான் உறங்கியபின்
என்தங்கை
என்கவிதைகள் அனைத்தையும்
படித்துவிட்டாள்!
மறுநாள் காலை
என்னருகில் வந்தமர்ந்தபடி
சொன்னாள்!

‘சிறுவயதில்
எதுவுமே பேசமாட்டாய்
காரணமே இல்லாமல்
கோபப்பட்டு என்னை அடிப்பாய்!
உன் உருவத்தைப்போலவே
உன்னை
முரடன் என
நினைத்திருந்தேன்!
ஏண்ணே...
நீ இவ்வளவு மென்மையானவனா?’